India
oi-Nantha Kumar R
கொல்கத்தா: ‘சார்’ எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்ற 2 தேர்தல் ஆணையர்கள் இடையே முரண்பாடுகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்படி நடந்த தேர்தலை கைவிட்டு ‘சார்’ நடவடிக்கை்கு முந்தைய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மேற்கு வங்கத்திற்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பேஸ்புக் லைவில் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ”மேற்கு வங்கத்திற்கு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த மறுதேர்தல் என்பது ‘சார்’ எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பு இருந்த வாக்காளர்கள் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும்.

பாஜக மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இணைந்து மேற்கு வங்க சட்டசபை தேர்தலை திருடிவிட்டது என்பது நிரூபணமாகி உள்ளது. இது மிகவும் பரபரப்பான கதையாக உள்ளது. இதுபோன்ற ஒன்றை நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை.
ஞானேஷ் குமார் உடனடியாக தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து விலக வேண்டும். அந்த பதவியில் அவர் தொடர தார்மீக ரீதியாக இனி எதுவும் இல்லை. அவர் பதவி விலகாவிட்டால் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தப்படும். இந்த தலைமை தேர்தல் ஆணையர் நிச்சயம் கைது செய்யப்பட வேண்டும்” என்று கொந்தளித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தது. தமிழகத்தை போல் சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பாஜகவிடம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுத்தது. அதுமட்டுமின்றி மம்தா பானர்ஜியும் தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியடைந்தார்.
மேற்குவங்கத்தில் நடந்த இந்த தேர்தல் என்பது ‘சார்’ எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகு நடந்தது. இந்நிலையில் தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தத்கு முன்பு இருந்த வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மேற்கு வங்கத்தில சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மம்தா பானர்ஜியின் இந்த கோரிக்கையின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. நம் நாட்டில் தற்போது ‘சார்’ எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காங்கிரஸ் உள்பட பிற எதிர்க்கட்சிகள் தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.ஆனால், மத்திய அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் பின்வாங்கவில்லை. இந்நிலையில் தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திலேயே மோதல் போக்கு உள்ளதாக ஆங்கில ஊடகமான ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் செய்தி வெளியானது.
அதாவது தேர்தல் ஆணையத்தை எடுத்து கொண்டால் ஒரு தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் செயல்படுவார்கள். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்களாக சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்ளிட்டோர் உள்ளனர்.
இந்நிலையில் தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்போதுது சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் சில விஷயங்களில் ஆட்சேபனைகளை எழுப்பியும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செவிசாய்க்கவில்லையாம்.
பெயர் சேர்க்க பார்ம் -6ல் புதிய கேள்விகள் இணைக்கப்பட்டது. இது சட்டவிரோதமானது என்று இரு ஆணையர்கள் கூறிய நிலையில் ஞானேஷ் குமார் கேட்கவில்லை. இதேபோல் கடந்த 10 மாதங்களில் இரு ஆணையர்களும் மொத்தம் 14 கடிதங்களில் தங்களின் ஆட்சேபனைகளை தெரிவித்தும் ஞானேஷ் குமார் கண்டுக்கொள்ளவில்லை.
ஞானேஷ் குமார் சர்வாதிகாரி போல் செயல்பட்டதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது பல்வேறு மாநிலங்களில் பெயர்கள் நீக்கம் உள்ளிட்ட விஷயங்களின் 2 தேர்தல் ஆணையர்களின் கருத்துக்கு ஞானேஷ் குமார் சரியான பதில் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் தான் மம்தா பானர்ஜி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு முந்தைய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.

