மே.வங்கம் வாக்குப்பதிவு நிறைவு : 2-ம் கட்ட தேர்தல் 90% மேல் வாக்குகள் பதிவு – Kumudam

Spread the love

மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக 152 தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். முதற்கட்ட தேர்தலில் 93.19 சதவிகித வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. இரண்டாம் கட்டத் தேர்தலில் சுமார் 3.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் சுமார் 1.64 கோடி ஆண்களும், 1.57 கோடி பெண்களும் அடங்குவர். மொத்தம் 41,001 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இணையவழி நேரடி ஒளிபரப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் இன்று வாக்குபதிவின் போது சில இடங்களில் மோதலும் வெடித்துள்ளது. சப்ரா, சந்திப்பூர் மற்றும் பாநகர் ஆகிய இடங்களில் வன்முறை, மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹத்ரா பஞ்சாயத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் பாஜக ஏஜெண்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. சில இடங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டுள்ளது.

காலை 9 மணி நிலவரப்படி 18.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.  பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 39.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மதியம் 1 மணியளவில் 61.11 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. மதியம் 3 மணியளவில் 78.68 சதவிகிதம் வாக்கு பதிவாகி இருந்தது. மாலை 5 மணியளவில் 89.99 சதவிகிதம் வாக்கு பதிவான நிலையில், மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அப்போது 90 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாக சாதனை படைந்திருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *