X (ட்விட்டர்) தளத்தில் @Theshashank_p என்ற பயனர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, “இந்த ஐடியாவைக் கண்டுபிடித்தவருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்… அவர் ஒரு ஜீனியஸ்!” என்று பதிவிட்டிருந்தார். இதிலிருந்துதான் இந்தச் செய்தி ‘நோபல் ஜீனியஸ்’ என்ற பெயரில் வைரலானது.
“இது ஒரு அட்டகாசமான ஐடியா, மக்களின் செயலை மாற்ற எச்சரிக்கைகளை விட இதுபோன்ற வழிகள்தான் சரிப்பட்டு வரும்” என பலர் பாராட்டியுள்ளனர். வேறு சிலரோ, “மக்கள் கண்ணாடியை உடைத்துவிட்டோ அல்லது கொஞ்சம் தள்ளிப் போயோ மீண்டும் அதே தவற்றைச் செய்வார்கள். இதற்கு நிரந்தர தீர்வு பொதுமக்களுக்கு போதுமான, சுத்தமான பொதுக் கழிப்பறைகளை (Public Toilets) கட்டிக் கொடுப்பதுதான். கழிப்பறை வசதிகளை மேம்படுத்தாமல், கண்ணாடிகளை வைப்பது முழுமையான தீர்வாகாது” என ஆழமான கருத்துகளையும் முன்வைத்துள்ளனர்.

உண்மையில் இது இந்தியாவில் முதல்முறையாக செய்யப்படுவது அல்ல. இதற்கு முன்பே 2020-ம் ஆண்டு பெங்களூருவில் (சர்ச் ஸ்ட்ரீட், கே.ஆர். மார்க்கெட், இந்திராநகர் போன்ற பகுதிகளில்) மாநகராட்சியால் இதே போன்ற கண்ணாடிகள் வைக்கப்பட்டன. பெங்களூருவில் வைக்கப்பட்ட கண்ணாடிகளில் ஒரு QR Code-ம் இருந்தது. அதை போனில் ஸ்கேன் செய்தால் அருகில் உள்ள கழிப்பறைக்கு அது வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், காலப்போக்கில் பராமரிப்பு குறைபாடுகளால் அது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
பொதுமக்களிடம் சமூகப் பொறுப்புணர்வு என்பது தானாக வர வேண்டும். அது அல்லாமல் சட்டங்களும் அபராதங்களும் எந்த வகையிலும் உதவாது; ஆனால் இது போன்று அவர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் நூதன முயற்சிகளும் சிலநேரம் தேவை என்பதையே மைசூரு மாநகராட்சியின் இந்த முயற்சி நிரூபிக்கிறது.
தூய்மையான இந்தியா என்பது அரசாங்கத்தின் திட்டங்களில் மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் எண்ணங்களிலும் இருக்க வேண்டும்.