சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான போட்டி நிலவியது. தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க-வின் மூத்த நிர்வாகி கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி ஆகியோருக்கு இடையே நேரடி மோதல் உருவானது.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர். கடைசி நிமிடம் வரை நீடித்த இந்த “துப்பாக்கிச் சண்டை” போன்ற போட்டியில், இறுதி முடிவுகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தவெக வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளும், திமுக-வின் கே.ஆர்.பெரியகருப்பன் 83,374 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதாவது வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் ஸ்ரீனிவாச சேதுபதி வெற்றி பெற்று, மாபெரும் கட்சியின் அமைச்சரை வீழ்த்தினார்.
இந்தத் தேர்தல் முடிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ஜனநாயகத்தில் தனிமனிதனின் வாக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.