மைசூர் ராஜதானியுடன் ஒப்பந்தம்; மின்சாரத் தேவையும் விநியோகமும்! | அணை ஓசை 23

Spread the love

சில அடிகளுக்கு ஒரு முறை இந்த இணைப்பு அல்லது 200 அடிகளுக்கு ஒரு முறை இந்த இணைப்பு போதுமானது போன்ற வெவ்வேறு கருத்துக்கள் பொறியாளர்களுக்கு மத்தியில் அப்போது நிலவியது. இது அந்தந்த இடங்களில் நிலவும் தட்பவெப்ப நிலையை பொறுத்தது என்ற அடிப்படையில் மேட்டூரில் பணிபுரிந்த பொறியாளர்கள் 126 அடிகளுக்கு ஒரு இணைப்பு ஏற்படுத்துவது என்ற இறுதி முடிவை எடுத்து செயல்படுத்தினர்.

பெரிய அணைகளை கட்டும் போது இது போன்ற வெடிப்புகளை தவிர்க்க, அகலமான அடுக்குகளாக கான்கிரீட் போடாமல் மெல்லிய அகலம் குறைந்து அடுக்குகளாக கான்கிரீட் போட்டு அது குளிர்வடைய நேரம் கொடுப்பது போன்ற முறைகளை வேறு இடங்களில் பயன்படுத்துவது வழக்கம்.

இந்தத் தொழில்நுட்பம் குறித்த கட்டுரை ஒன்று 1935-ல் திரு. N.Davey, P.hD, A.M.I.C.E என்ற பொறியாளர் எழுதிய ஆராய்ச்சி கட்டுரையில் தெளிவாக விளக்கியுள்ளார். “அமெரிக்கன் போல்டர் சிட்டி அணை” என்ற ஒரு கட்டுமானத்தில் இந்த முறைகள் கடைபிடிக்கப்பட்டு சூடு தணிந்த பிறகு அடுத்தடுத்த கான்கிரீட் அடுக்குகள் (Layers) போடப்படுவது மற்றும் குளிர்ந்த நீர் குழாய்களை வைத்து அந்த கான்கிரீட் அடுக்குகளை குளிர்வித்து தொடர்ந்து கட்டுமானங்களை தொடர்வது போன்ற நடைமுறைகள் விளக்கப்பட்டிருந்தது.

மேட்டூரில் இது போன்ற விரிவான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை எனினும் ஒவ்வொரு அடுக்குகளாக கான்கிரீட் போடும் போது தேவையான அளவு நேரம் கொடுத்து பிறகு வேலை தொடரப்பட்டது.

ஆய்வுக்கூட நுழைவாயிலின் இன்றைய தோற்றம்

ஆய்வுக்கூட நுழைவாயிலின் இன்றைய தோற்றம்

டீப் ஹோல் (Deep hole) என ஏற்கனவே குறிப்பிட்ட ஆழமான பகுதிகளில் கான்கிரீட் போடும்போது தொடர்ந்து வெப்பநிலை உயர்ந்து 14 -15 நாட்களில் வெப்பநிலை குறையத் தொடங்கியது. மிகவும் தொடர்ந்த தரவுகள் இது குறித்து பதிவாகவில்லை என்பது உண்மையாயினும் நீண்ட நாட்கள் கழித்து தண்ணீர் தேங்கி நிற்கும் காலம் ஏற்பட்டதால் பெரிய அளவில் மாறுதல்கள் ஏற்படவில்லை. அதோடு மட்டுமின்றி அவ்வப்போது தேவையான சோதனைகளும் செய்யப்பட்டு வந்தன.

பல வருட கட்டுமான பணிகளின் போது அப்போது சூப்பரின்டெண்டன்ட் திரு சி.ஜி. பார்பர் அவர்கள் வெவ்வேறு கால நிலைகளில் “கான்ட்ராக்சன் ஜாயின்ட்” எனப்படும் “சுருங்கும் இணைப்புகளில்” தன்மை என்னவாக இருக்கிறது என்பதை கவனித்து குறித்து வைப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்திருக்கிறார்.

இருந்தாலும் அணை சுவற்றின் பின்புறம் பெரும்பாலும் பகல் நேரம் முழுவதும் வெயிலில் இருக்கும் படியான சூழ்நிலையில் Hair crack எனப்படும் மயிரிழை அளவிலான வெடிப்புகள் இருந்துள்ளது. உதாரணமாக, ஒரு காகிதத்தை அதில் நுழைக்கக் கூடிய விரிசல்கள் அப்போது காணப்பட்டு இருக்கின்றன.

இவை அனைத்தும் பாதுகாப்பான அளவிலேயே தான் இருந்துள்ளது எனப் பொறியாளர்கள் உறுதிப்படுத்தினார்கள். ஆனாலும், பொறியாளர்களின் அறிக்கை இவ்வாறு கூறுகிறது. “இந்த முக்கியமான வெடிப்பு மற்றும் சுருங்குதல் தன்மைகள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் தொழில்நுட்பத் துறையில் நிலவி வந்தாலும் இது குறித்து மேலும் ஆராய்ச்சிகள் பின்னாளில் பல கேள்விகளுக்கு விடை அளிக்கும்” என்று திறந்த மனதுடன் ஒப்புக் கொண்டார்கள்.

மேட்டூர் அணையை பொறுத்தவரை வெப்ப மாறுதல்கள் காரணமாக நீர் தேங்கி நிற்கும் அளவுக்கு மேல்புறம் (வடக்கே) ஒரு மாதிரியும், அணையின் பின்புறம் (தெற்கே) எப்போதும் வெயிலில் காயும் தன்மையோடும் வெப்ப மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இருந்தாலும் அணை கட்ட பயன்படுத்திய பொருட்களின் தன்மை, தரம் மற்றும் முறைகள் இவற்றின் காரணங்களால் வெப்ப மாறுதல்களை தேவையான அளவுக்கு தாங்கிக் கொள்ளும் படியும், பாதிப்பு இல்லாத வகையில் அமைக்கப்பட்டன என பொறியாளர்கள் உறுதியாக தெரிவித்தனர்.

மேற்கண்ட காரணங்களால் மேட்டூர் அணை நீர் கசிவு இன்றி, உலகத் தரத்துக்கு ஒப்பானதாக கருதலாம் என்ற கருத்தை முன் வைத்தனர். பின்னாளில் அது உண்மை என்றும் பெரும்பாலும் இந்த நூறு ஆண்டுகளில் நீர் கசிவு என்பது பாதுகாப்பான அளவிலேயே தான் இருந்துள்ளது என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *