த.வெ.க அரசு அமைய, காங்கிரஸ் கட்சி ஆதரவளித்ததைத் தொடர்ந்து, “கூட்டணிக்குத் துரோகம் விளைவித்து முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ் கட்சி’ என கடுமையாக விமர்சித்தது தி.மு.க.
தொடர்ந்து வி.சி.க., கம்யூனிஸ்ட்டுகள், ம.தி.மு.க என அடுத்தடுத்த கட்சிகளும் த.வெ.க அரசுக்கு ஆதரவளிக்க… தமிழக அரசியல் களத்தில் தனித்துவிடப்பட்டுள்ளது தி.மு.க.!
இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற சபாநாயகர் நடத்திய தேநீர் விருந்து நிகழ்ச்சியில் தி.மு.க துணை பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான கனிமொழி பங்கேற்றிருப்பது தமிழக அரசியலில், பெரும் விவாதத்தைக் கிளப்பி வருகிறது. ‘பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர தி.மு.க தயாராகிவிட்டது’ என த.வெ.க உள்ளிட்ட கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இந்தச் சூழலில், தி.மு.க கொள்கைபரப்பு இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான இரா.ராஜீவ்காந்தியிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்…
“புதிய தொகுதி மறுவரையறைக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் முன்பாக குரல் கொடுத்த கட்சி தி.மு.க. இன்றைய முதல் அமைச்சர் விஜய், அன்றைக்கு இந்த சட்டத் திருத்தம் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. 2026 தேர்தலுக்கு முன்பாகக்கூட, ‘இது ஒரு கற்பனை… மக்கள் பிரச்னையல்ல’ என்று கூறி அவரது அரசியல் அறியாமையைத்தான் வெளிப்படுத்தினார்.

இந்த சூழலில், ஒப்பந்தப்படி காவிரி நீர் வராமல், தமிழகம் காய்ந்துகிடக்கும் வேளையில், பிரச்னையை திசை திருப்பும் நோக்கத்துடன் எட்டப்பன் காங்கிரஸ் கட்சி ஆலோசனையின் பேரில் அனைத்துக் கட்சி எம்.பி-க்கள் கூட்டத்தை கூட்டியது த.வெ.க அரசு. இந்த அரசியல் சதி தெரிந்துதான் தி.மு.க எம்.பி-க்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதேசமயம், புதிய மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, மக்கள் பிரச்னை என்ற அடிப்படையில் தீர்மானத்துக்கு ஆதரவளித்தோம்.”
“டாக்டர் கிருஷ்ணசாமி அவருடைய சந்தேகத்தை கூறியிருக்கிறார். ‘7.18 என்ற விகிதாசாரத்திலான நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும்; எந்தச் சூழலிலும் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது’ என்ற எங்கள் நிலைப்பாட்டில் தி.மு.க எப்போதுமே உறுதியாக இருக்கிறது!”
“கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எட்டப்பன் வேலையைப் பார்த்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், தேர்தலுக்குப் பிறகு எங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கிறார் ராகுல்காந்தி. உண்மையான எட்டப்பன் காங்கிரஸ்தான். எங்கள் கூடவே இருந்து கூட்டணியை சந்தேகத்துக்குள்ளான கூட்டணியாக்கி, நாங்கள் வெற்றி பெறுகிற தொகுதிகளை எல்லாம் கேட்டு வாங்கி, கடைசியில் எங்களைத் தோற்கடிக்க வைத்துள்ளது.

கொள்கைக் கூட்டணி என்று இவ்வளவு குழப்பத்தையும் செய்தது காங்கிரஸ் கட்சி. இவர்களாலேயே கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளுக்கும் போதிய இடங்களைக் கொடுக்கமுடியாமல், வருத்தம் நேரிட்டது. இதற்கெல்லாம் காரணம் ராகுல்காந்தி மற்றும் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்ற புதிய புரட்சியாளர்களின் அணுகுமுறைகள்தான். இந்த எட்டப்பர்களோடு வாழ்நாளில் இனி நாங்கள் கூட்டணி வைக்கமாட்டோம்!”