ம.பி: பாஜக-விற்குச் சாதகமாக மாறிய தேர்தல் களம்?; காங்கிரஸ் வேட்பாளர் மனு தள்ளுபடியின் பின்னணி! | Madhya Pradesh Congress candidate Meenakshi Natarajan’s nomination has been summarily rejected.

Spread the love

மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகக் களம் இறக்கப்பட்ட மீனாட்சி நடராஜனின் வேட்புமனு அதிரடியாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களவைத் தேர்தல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை திங்கட்கிழமை நடைபெற்றது. அப்போது பா.ஜ.க தலைவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், “காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் தனக்கு எதிராகத் தெலங்கானாவில் நிலுவையில் உள்ள ஒரு குற்றவியல் வழக்குக் குறித்த விவரங்களைத் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் திட்டமிட்டு மறைத்துள்ளார். வேட்புமனுத் தாக்கலின் போது வேட்பாளர்கள் தங்களின் பின்னணி மற்றும் வழக்கு விவரங்களை முழுமையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது கட்டாய விதியாகும். ஆனால், மீனாட்சி நடராஜன் தகவல்களை மறைத்துள்ளதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தது.

பா.ஜ.க.வின் இந்தக் குற்றச்சாட்டைக் காங்கிரஸ் கட்சி முற்றிலும் மறுத்துள்ளதுடன், இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது என்றும் கூறியுள்ளது. இது குறித்துப் பேசிய மத்தியப் பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உமாங் சிங்கார், “மீனாட்சி நடராஜன் மீது எந்தவொரு குற்றவியல் வழக்கும் இல்லை. எனவே, பா.ஜ.க. குறிப்பிடும் விவகாரத்தை அவர் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டிய அவசியம் எழவில்லை. நேர்மையான ஒரு பெண் வேட்பாளரின் எழுச்சியைக் கண்டு, காங்கிரஸின் வெற்றியைக் கண்டு பயந்துபோன பா.ஜ.க.வின் உண்மையான முகம் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது” என்று சாடினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *