சாதனைப் பயணம்
“ஒன்பதாம் வகுப்போடு நின்ற படிப்பு, வீட்டை விட்டு வெளியேறியபோது உறைந்த கண்ணீர், பசியின் விளிம்பில் கையேந்திய அவமானம்…” என அத்தனையையும் தன் சொந்த உழைப்பால் சுக்குநூறாக்கியுள்ளார் ஒரு திருநங்கை.
தடைகள் பலவற்றைத் தகர்த்து, இன்று அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் திருநங்கை ஓட்டுநராக புதுக்கோட்டை – திருச்சி சாலையில் கம்பீரமாக வலம் வருகிறார் ஸ்ரீதேவி. அவருடைய நெகிழ்ச்சியான சாதனைப் பயணம் இதோ:
“அண்ணன்களே முன்மாதிரி..”!
புதுக்கோட்டை மாவட்டம் பாலண்டாம்பட்டியில் பிறந்த ஸ்ரீதேவி, தற்போது கீரனூர் அருகில் உள்ள கல்லுக்குமிழ்ப்பட்டி பகுதியில் தனது திருநங்கை சமூகத்துடன் வசித்து வருகிறார். தனது ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கனவு குறித்து அவர் கூறியதாவது:
“எங்கள் வீட்டில் அப்பா இல்லை; அம்மா மட்டும்தான். இரண்டு அண்ணன்கள், இரண்டு அக்காக்கள், ஒரு தங்கை என ஒரு பெரிய குடும்பம். என் இரண்டு அண்ணன்களுமே டிரைவர்கள்தான். அவர்கள் வண்டி ஓட்டும் கம்பீரத்தைப் பார்த்துப் பார்த்துதான், எனக்கும் சின்ன வயதிலிருந்தே சக்கரங்களைச் சுழற்ற வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் ரகசியமாக முளைத்தது.

ஆனால், 16 வயதாகும் போது எனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை ஒரு கிராமத்தில் பிறந்துவிட்டு வெளியில் சொல்ல எனக்கு அவ்வளவு பயமாக இருந்தது. ஆரம்பத்தில் நான் மாறினதை என் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை; உலகமே இருண்டு போனது போல இருந்தது.
ஆனால், பெற்ற மனம் சும்மா இருக்குமா? ‘நம்ம பிள்ளைதானே…’ என்று சொல்லி, போகப் போக என் அம்மாவும் அண்ணன்களும் என்னை மனசார ஏற்றுக்கொண்டார்கள். அந்த அங்கீகாரம் கொடுத்த தைரியம்தான் இன்று என்னை இந்த ஓட்டுநர் சீட்டில் உட்கார வைத்திருக்கிறது!”
வறுமையின் காரணமாக ஒன்பதாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்ட ஸ்ரீதேவி, வீட்டை விட்டு வெளியேறிய ஆரம்ப நாட்களில் வாழ்வாதாரமின்றித் தவித்துள்ளார்.
பசியின் கொடுமையால் யாசகம் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட அவர், தனது விடாமுயற்சியால் மீண்டு வந்ததை விவரித்தார்:
“பசி வயிற்றைக் கிள்ளியதால், வாழ்வாதாரத்திற்கு வழியே இல்லாமல் மற்றவர்களைப் போல நானும் ரோட்டில் நின்று யாசகம் கேட்கத்தான் போனேன். காசுக்காக மற்றவர்கள் முன்னாடி கையேந்தும்போது என் மனசுக்குள் ஒரு தவிப்பு தீயாக எரியும். ‘நாம ஏன் இப்படியே இருக்கணும்? நாமும் எல்லாரையும் போல முன்னேற வேண்டும், நமக்கான சுயமரியாதையை நாமேதான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்’ என்று உள்ளுக்குள்ளே அழுதுகொண்டே சபதம் எடுத்தேன்.

அந்தச் சமயத்தில்தான், எங்கள் மாவட்ட திருநங்கைகள் தலைவி அஸினா அம்மாவின் அறிமுகம் கிடைத்தது. அவர்தான் என் வாழ்க்கையில் ஒளியேற்றினார். ‘நீ டூ-வீலர், ஃபோர்-வீலர் ஓட்ட கத்துக்கணும் ஸ்ரீதேவி… நமக்குன்னு ஒரு தகுதி வேணும்’ என்று சொல்லி, என்னை லைசென்ஸ், பேட்ஜ் லைசென்ஸ் எல்லாமே எடுக்க வைத்தார்.
அதற்கப்புறம் புதுக்கோட்டை கலெக்டர் அருணா மேடத்திடம் போய் IRT (Institute of Road Transport) டிரைவிங் டிரெய்னிங் கேட்டு மனு கொடுத்தேன். ஆனால், பயிற்சிக்கு போக ₹25,000 பணம் கட்டி டிடி எடுக்க வேண்டும் என்றார்கள். என்னிடம் பணம் இல்லை. அப்போதும் எங்க தலைவி அஸினா அம்மாதான் எனக்குப் பண உதவி செய்து படிக்க வைத்தார். நான் படித்தது ஒன்பதாம் வகுப்புதான்; ஆனால் நான் போராடி வாங்கின இந்த ‘ஐஆர்டி சான்றிதழ்’ தமிழ்நாட்டில் எங்கு போனாலும் செல்லும்! திறமை இருந்தால் நம்மில் யாருமே யாசகம் கேட்க வேண்டியதில்லை.”
மூன்று மாதக் கடுமையான பயிற்சி முடித்த பிறகும் உடனடியாக வேலை கிடைக்கவில்லை. விடாமுயற்சியோடு நேராகச் சென்று போராடி, கடந்த 2026-ஆம் ஆண்டில் அரசுப் பேருந்து ஓட்டுநராகத் தனது பணியைத் தொடங்கினார் 33 வயதான ஸ்ரீதேவி.
“ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிற இந்த ஓட்டுநர் தொழிலுக்குள், ஒரு திருநங்கையாக நான் முதன்முதலாக வண்டியை எடுத்துக்கொண்டு ரோட்டுக்கு வந்தபோது, என் சொந்த திருநங்கை சமூகமே என்னை ஆச்சரியமாகப் பார்த்தது. ‘ஸ்ரீதேவி… நீ இவ்வளவு பெரிய வண்டியை ஓட்டுறியே, உனக்கு பயமா இல்லையா?’ என்று கேட்டார்கள். ஆரம்பத்தில் பயம் இருக்கத்தான் செய்யும், ஆனால் வண்டியை ஓட்ட ஓட்ட பயத்தைத் தூக்கிப்போட்டுவிட்டு தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும்!

புதுக்கோட்டையிலிருந்து கீரனூர் போகிற எட்டாம் நம்பர் டவுன் பஸ்ஸில்தான் என் ஓட்டுநர் பயணம் தொடங்கியது. டெப்போவில் இருக்கிற அதிகாரிகள், கண்டக்டர்கள் என எல்லாரும் எனக்கு அவ்வளவு சப்போர்ட் பண்ணுகிறார்கள். ஒருகாலத்தில் காசுக்காக கையேந்திய இதே கைகள், இன்றைக்குப் பொதுமக்களின் உயிரையும் பயணத்தையும் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கிற ‘ஸ்டியரிங்’கை பிடித்திருக்கிறது என்பதே என் வாழ்க்கையின் ஆகப்பெரிய வெற்றி” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தற்போது தற்காலிகப் பணியாளராகப் பணிபுரிந்து வரும் ஸ்ரீதேவி, தனது எதிர்கால வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அரசுக்குக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
“நான் இப்போது தற்காலிகப் பணியாளராகத்தான் இருக்கிறேன். ஒரு டூட்டிக்கு போயிட்டு வந்தால் ₹1400 பேட்டா கிடைக்கும். மாதத்தில் அதிகபட்சமாக 15 நாள்தான் டூட்டி கிடைக்கும். அதிலும் உடல்நிலை ஒத்துழைக்காமல் லீவு எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். இடையில்கூட உடல்நலம் முடியாமல் போய், இப்போது சரியாகி மறுபடியும் வந்திருக்கிறேன். இந்தச் சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு, இன்றைக்கு இருக்கிற விலைவாசியில் எப்படி வாழ முடியும்?
எனக்கு ஒரு நிரந்தரப் பணி வேண்டும் என்பதுதான் என் ஆசை. இப்போது இருக்கும் புதிய ஆட்சிக்கும், புதிய முதலமைச்சர் ஐயாவுக்கும் எங்களோட இந்த பணி நிரந்தரக் கோரிக்கையை மனுவாகக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். கண்டிப்பாக இந்த அரசு நல்ல வழி செய்யும் என்று நம்புகிறேன்,” என்று எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் கலந்த வார்த்தைகளில் கூறுகிறார் ஸ்ரீதேவி.