"யாருடனும் எனக்கு பகை இல்லை" – துப்பாக்கிச்சூடு அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத டைகர் ஷெராப்

Spread the love

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது கடந்த வாரம் மும்பையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினார்.

இத்தாக்குதல் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய மூன்று பேர் உட்பட இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 10 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு பேர் பெண்கள் ஆவர்.

டைகர் ஷெராப் இன்னும் தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவர் இன்னும் இது தொடர்பாக போலீஸில் வாக்குமூலம் கொடுக்கவில்லை. அதேசமயம் அவரிடம் வாக்குமூலம் பெற குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்றனர்.

அவர்களிடம், “நான் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறேன். இப்போதைக்கு நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. என் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய தாக்குதலை யார், ஏன் நடத்த விரும்பினார்கள்? எனக்கு யாருடனும் பகை இல்லை. அப்படியிருக்க, என் மீது ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது?” என்று டைகர் ஷெராப் கேட்டார்.

டைகர் ஷெராப்
டைகர் ஷெராப்

போலீஸார் இதுவரை டைகர் ஷெராப்பின் கார் ஓட்டுநர் பிர்தௌஸ் பலோச் மற்றும் வ்லாகர் உமேஷ் சௌஹான் ஆகியோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

நடிகர் ஜாக்கி ஷெராபின் மகனான டைகர் ஷெராப் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் அவர் கால்பந்து விளையாடிவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது. அவர் தனது பிஎம்டபிள்யூ (BMW) காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தார்.

அதிர்ஷ்டவசமாக, அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் டாக்சி மூலம் சூரத் சென்று அங்கிருந்து ரயில் மூலம் ராஜஸ்தான் சென்றனர்.

அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா ரயில் நிலையத்தில் பிடிபட்டனர். அவர்களைத் தங்களது காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இதில் வேறு ஒருவருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்தூரைச் சேர்ந்த 22 வயது மாணவர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

ஹரியானாவின் சோனிபட்டில் பொறியியல் பயின்று வரும் பிரஞ்சல் தாக்கரன், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11-வது நபர் ஆவார். இவர் குற்றவாளிகளுக்கு ஆதரவளிக்கும் நெட்ஒர்க்கின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்றும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபருடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது

துப்பாக்கிகள் பறிமுதல்

சூரத்திலிருந்து துருக்கியில் தயாரிக்கப்பட்ட ‘ஜிகானா’ (Zigana) ரக கைத்துப்பாக்கியும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். ஆயுதங்களை மீட்டெடுத்தது குறித்து போலீஸார் கூறுகையில், ”கைது செய்யப்பட்டவர்களை சூரத்திற்கு அழைத்துச் சென்றோம், அங்கு அவர்கள் ஆயுதங்களை வீசி எறிந்த இடத்தைக் கண்டறிந்தோம். துப்பாக்கிகளைக் கண்டறிய போலீஸார் சுமார் 8 முதல் 10 மணிநேரம் தேடினர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களும், தோட்டாக்களும் பகுப்பாய்வுக்காக மும்பை கலினா தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்” என்றனர்.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இதற்கு முன்பும் ‘ஜிகானா’ (Zigana) ரக கைத்துப்பாக்கிகளைப் பயன்படுத்தியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

துப்பாக்கிச்சூடு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ரோஷன் ஓர் ஆண்டாக மும்பையில் ரேபிடோ டிரைவாகப் பணியாற்றி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் சிலீப்பர் செல்லாகச் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மும்பையில் உள்ள பிரபலங்களின் வீடுகள், அவர்கள் அடிக்கடி வந்து செல்லும் இடங்களை வீடியோ எடுத்து லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *