யார் எதிரி? – சிறுகதை

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

அமராவதி தனக்கு முன்னால் இருந்த முள் வேலிக்கு அப்பால் தனது பார்வையைக் கூர்மையாக்கினாள். அவளுக்குத் தோழிகள் என்று இப்போது யாருமே இல்லை. தொழிற்பேட்டையின் ஓரங்களில் இருக்கும் நீரூற்றுகளும் அதைச் சுற்றிப் பூத்துக் குலுங்கிய வண்ண வண்ண மலர்களும் அவள் பார்க்கும் போதெல்லாம் அவளிடம் பேசின. அத்தனை மலர்களிலும் அவள் மனதுக்கு மிக நெருக்கமானவை கத்தரிப்பூ வண்ணத்திலிருந்த சினியா பூக்கள் தான். 

அழகான சினியா பூக்கள் இருந்த இடத்தில் வாழ்ந்த ஒரு பன்றிக் குடும்பத்தை அப்பூக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து அமராவதி ஆச்சரியப்பட்டாள். சுத்தமான அழகான இடத்தில் இந்த பன்றி எப்படி நுழைந்ததென யோசித்தாள். பன்றி படுத்திருக்க ஒன்பது குட்டிகள் அம்மாவிடம் பால் குடித்துக் கொண்டு அதன் மீது ஏறி விளையாடுவதைச் சில நேரங்களில் தன்னை அறியாமல் ரசிப்பாள். 

அந்தப் பன்றியையும் குட்டிகளையும் பார்க்கும் போது தன் அம்மாவிடம் தான் கொஞ்சி விளையாடியது அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு தூங்கியது அம்மாவின் சேலை முந்தானையைப் பிடித்துக் கொண்டே அலைந்தது என எல்லாம் அமராவதியின் நெஞ்சுக்குள் கனமாக வந்து அமர்ந்து கொள்ளும்.

தான் இரை தேடப் போகும் வேளையில் மட்டும் குட்டிகளை வேலிக்குள் மறைத்து வைத்து விட்டுத் தாய் பன்றி வெளியே போகும். அங்கே தைரியமாக ஓடி விளையாடும் பன்றிக் குட்டிகள் காவலாளி வரும் அரவம் கேட்டால் வேலியை ஒட்டி இருக்கும் சிறிய பள்ளத்தில் இறங்கி தங்களை மறைத்துக் கொள்ளும். பன்றிக் குடும்பத்தைப் பார்க்கும் அமராவதி அது சாக்கடையிலும் குப்பையிலும் இறங்கித் திரிவது நினைவுக்கு வரவும் தன் பார்வையை அவைகளிடமிருந்து சட்டென விலக்கிப் பூக்களிடம் திருப்பி விடுவாள். 

பூக்களின் அழகு பார்க்கும் போதெல்லாம் அவளை அரவணைத்துக் கொண்டது. அதனிடம் மட்டுமே பேசுவாள். சில நேரங்களில் அந்தப் பன்றி குட்டிகள் பூக்களை நெருங்கினால் சிறிய கல்லெடுத்து விட்டெறிந்து அதை விரட்டவும் செய்வாள்.

அமராவதிக்குப் பூக்களைத் தன் தோழியாக வரித்துக் கொண்டு தூரத்திலிருந்து அதனுடன் பேசிக்கொண்டு இருப்பதில் மிகப்பெரிய ஆனந்தம் இருந்தது. காலையில் பள்ளிக்கூடம் போகும் போதும் அதைப் பார்த்துக் கையசைத்து விட்டே செல்லும் அவள் மாலை வீட்டுக்குத் திரும்பும் போது மட்டும் அங்கே நின்று பூக்களிடம் பேசி விட்டே வருவாள்.

எப்படியாவது மடிநிறைய அந்தப் பூக்களைப் பறித்துக் கொண்டு வந்து அம்மாவின் படத்தின் முன்னால் பரத்தி வைத்து “எனக்கு இவ்வளவு தோழிகள் இருக்காங்க அம்மா, நீங்க கவலைப்படாமல் இருங்க” என்று சொல்ல ஆசைப்பட்டாள் அவள். தொழிற் பேட்டையில் இருக்கும் முதலாளிகள் தன்னைப் பிடித்து அடித்து விடுவார்களோ என்ற பயத்தில் அவளால் பூக்களை நெருங்க முடியவில்லை.

முள் கம்பி வேலியைத் தாண்டி எப்படிப் போவதென்ற பதட்டம் அவளிடம் எப்போதும் இருந்தாலும் வேலிக்கு இந்தப் புறம் இருந்து சமீபத்தில் தன்னை அனாதையாக விட்டு விட்டு இறந்து போன அம்மாவைப் பற்றிய தன் நினைவுகளைச் சினியா பூக்களிடம் பகிர்ந்து கொள்வது அவளுக்கு ஆறுதலைத் தந்தது.

பதினைந்து வயதே ஆன அமராவதியின் அம்மா சாரதா ஏன் இறந்தாள் என்று பூக்களிடம் அவள் தினமும் கேட்டுக் கொண்டே இருந்தாள். அமராவதிக்கு ஆறுதலாக இருந்த அவளது அப்பாவும் இப்போது மகளைக் கவனிக்காமல் தனக்குத்தானே சிரித்துக் கொள்வதும் அடிக்கடி தலையை வாருவதும் கொஞ்சம் அலங்காரம் பண்ணுவதுமாக இருந்தார்.

அம்மாவின் படத்துக்குப் பக்கத்தில் சிறிய அழகான மரக் கிளிக்கூண்டு வாங்கி வைத்திருந்தார் அப்பா. அம்மாவின் சாவுக்குப் பிறகு தான் அதையும் கிளியையும் வாங்கினார். அதற்குப் பழங்களும் முந்திரியும் அவர் தான் கொடுப்பார். அந்தச் சின்னஞ்சிறு கிளிக்கூண்டில் குட்டி ஏணி வழியாக ஏறும் கிளி மேலறையில் நின்று சாரதா, சாரதா என அம்மாவின் பெயரைச்  சொல்லிக் கொண்டே இருக்கும். அப்பாதான் கிளிக்கு அம்மா பெயரைச் சொல்லிக் கொடுத்தார்.

தன்னைப் போல் தனியாக இருக்கும் அந்தக் கிளி அம்மாவின் பெயரைச் சொல்வது அமராவதிக்குப் பிடிக்கவே இல்லை. அம்மாவை அப்பா மட்டுமே சாரதா என்று கூப்பிடுவார். இப்போது அவருக்குப் போட்டியாக கிளியும் இறந்து போன தன் அம்மாவைச் சாரதா என்று கூப்பிடுவது அவளுக்கு வெறுப்பையே கொடுத்தது.

திடீரென ஒரு நாள் அப்பா அவளிடம் “உனக்கு இன்னொரு அம்மாவைக் கூட்டிக் கொண்டு வரலாமா அமராவதி? எனக்கு வெளி வேலைகளையும் பார்த்துக் கொண்டு உன்னையும் கவனிப்பது சிரமமாக இருக்குது. உனக்காக மட்டுமே இந்த அம்மாவைக் கூப்பிட நினைக்கிறேன்” என்றார். அமராவதி பதிலே சொல்லாமல் அப்பாவின் முகத்தையே பார்த்தவாறு இருந்தாள்.

அமராவதி எந்தப் பதிலும் சொல்லவில்லை என்பதால் அவளுக்கும் அம்மா தேவையாக இருப்பதாக அப்பா நினைத்துக் கொண்டார். அவளை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் ஊருக்குப் புது அம்மாவை மகளுக்குக் காட்டுவதற்காகக் கிளம்பினார்.

அந்தப் பெண் தன்னை அலங்கரித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அமராவதிக்கு அவளை அம்மாவாக நினைக்க முடியவில்லை. தலையைக் குனிந்தவாறு அப்பாவைப் பார்த்தாள் அமராவதி. அவர் அந்தப் பெண்ணைப் பார்த்துச் சிரிப்பதிவிருந்து அவருக்குப் புது மனைவியைப் பிடித்தது புரிந்தது. புது அம்மாவும் அமரவதியைப் பார்க்க விரும்பவில்லை.

அப்பாவின் மனைவியாக அம்மாவின் இடத்தைப் பிடித்த அந்தப் பெண் அடுப்படியை ஆக்கிரமித்துக் கொண்டாள். அப்பாவின் அறைக்குள்ளும் அடுப்படிக்குள்ளும் அமராவதியை அவள் அனுமதிக்கவே இல்லை.

அப்பா இல்லாத நேரம் கிளிக் கூண்டின் அருகே சென்று சாரதா சாரதா என்று கத்திய கிளியை அதட்டினாள் அப்பாவின் மனைவி. “வாயை மூடு கிளியே! இல்லாத ஒருத்தரை ஏன் கூப்பிட்டுக் கத்துகிறாய்?” என்றாள்.

“உன் அம்மாவின் பெயரைச் சொல்வதால் ரசிச்சுக்கிட்டே இருக்கியா? கூட்டைத் திறந்து விடு அது பறந்து போகட்டும்” என்றவள் அமராவதியின் அமைதியான முகத்தைக் கூர்ந்து பார்த்தாள்.

“நீ ஊமையா? உனக்கும் கிளிக்கும் சாப்பாடு போடுவது வெட்டிச் செலவு. ஒரு நாள் உங்கள் இருவருக்கும் கதவைத் திறந்து வைக்கிறேன். ஓடி விடுங்கள்” என்று சத்தமாகச் சொன்னாள் அப்பாவின் மனைவி. அப்பா வீட்டில் இருக்கும் வேளையில் அவள் சத்தமாகப் பேசுவதே இல்லை.

அப்பாவிற்கு வீட்டில் நடக்கும் எதுவும் தெரியாமல் போனது. அவர் வீட்டுக்குள் வந்தால் அவர் மனைவி வேறு யாரிடமும் பேசுவதில்லை. அப்பா வீட்டுக்குள் வந்ததும் நேராகக் கிளியிடம் போய் “சாரதா உனக்கு முந்திரிப் பருப்பும் மிளகாய் பழமும் வாங்கி வந்திருக்கிறேன், சாப்பிடு” என்பார்.

“அமராவதி சாப்பிட்டாயா?” என்று கேட்டு விட்டுத் தன் அறைக்குள் நுழைந்து கொள்வார். வீட்டில் வாயையே திறக்காத அமராவதி சீனியா பூவிடம் தினமும் வீட்டில் நடப்பதை அப்படியே சொல்லித் தன்னைச் சமாதானப் படுத்திக் கொள்வாள்.

ஒரு நாள் அமராவதி சினியா பூக்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவளுக்குப் பக்கத்தில் அம்மா பன்றி வேலிக்கு உள்ளே உறுமிக் கொண்டிருந்த தன் குட்டிகளுக்குத் தன் மொழியில் எதையோ சொல்லியது. பன்றி உணவு தேடப் போன நேரத்தில் கம்பி வேலிக்கு அடியில் இருந்த பள்ளத்தைக் காவலாளி மண்ணைப் போட்டு மூடி விட்டான்.

“அம்மா பன்றி வெளியே நிற்குது. குட்டிப் பன்றிகள் என்னைப் போல அம்மாவைத் தேடுது. காவல்காரன் வந்தால் குட்டிகளைக் கொன்று விடுவானே?” என்ற கவலையில் அவைகளைப் பரிதாபமாகப் பார்த்தாள் அமராவதி.

அம்மா பன்றி வேலிக்கு அருகில் தனது மூக்கால் துளையிடத் தொடங்கியது. கொஞ்ச நேரத்தில் கம்பி வேலிக்கு அடியில் இருந்து கரிய நிறப் பன்றிக் குட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தன் வாயால் மண்ணைக் கிளறி பாதை ஏற்படுத்தி வெளியே வந்ததைப் பார்த்ததும் அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது.

“என் அம்மாவிடம் உங்களைக் கூட்டிக் கொண்டு போகும் வழியைக் கண்டு பிடித்து விட்டேன். பன்றிக்கு நன்றி” என்று சினியா பூக்களிடம் கத்திச் சொல்லியவாறு துள்ளிக் குதித்த அமராவதி பன்றிக்குட்டிகள் வந்த அதே வழியாகத் தவழ்ந்து தொழிற் பேட்டைக்குள் நுழைந்து விட்டாள்.

சுற்று முற்றும் பார்த்தவள் அங்கே யாரும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு மடிநிறையப் பூக்களைப் பறித்த அமராவதி வெளியேற பன்றி போட்ட குழியை நெருங்கியவளை “ஏ பாப்பா கொஞ்சம் இங்கே வா” என்ற குச்சி கம்பெனி முதலாளியின் குரல் தடுத்து நிறுத்தியது.

அமராவதியின் உடல் நடுக்கம் கண்டது. “சினியா பூக்களே, நான் திருடியது தப்பு. முதலாளி எனக்கு என்ன தண்டனை கொடுப்பாரோ தெரியலையே!” என்று தனக்குள் குறுகிப் போன அமராவதியின் மடியில் இருந்த பூக்கள் பன்றி குட்டிகள் ஒளியும் இடத்தை அலங்கரித்தது.

மனதில் நிறைந்த அச்சத்துடன் அந்த முதலாளியை நெருங்கினாள் அவள். உடம்பெல்லாம் வேர்த்து வழிந்தது. “நீ தினமும் வெளியே நின்னு பூக்களைப் பார்க்கிறது எனக்கும் தெரியும். என்னிடம் கேட்டிருந்தால் ஒரு பூ எடுத்து கொடுத்திருப்பேன். பூவுக்கும் அதுவாகக் கீழே விழும் வரையிலும் உயிர் இருக்கும். சரி, பறிச்சதை எடுத்துப் போ பாப்பா. பன்றியை உள்ளே விட்டால் அது மண்ணைத் தோண்டிச் செடியைச் சாய்த்து விடும்” என்று சொல்லிய முதலாளி திரும்பிப் போய்‌ விட்டார்.

அப்படியே அசையாமல் நின்றாள் அமராவதி. உனக்கும் பன்றிக்கும் வித்தியாசம் இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லிச் சென்ற முதலாளியின் முதுகைப் பார்க்கக் கூட அவளால் முடியவில்லை. அவர் அடித்திருந்தால் கூட வலித்திருக்காது என்றெண்ணிய அமராவதியின் மனதில் அந்த கணமே சினியா பூக்களிடம் வைத்திருந்த நட்பு மறைந்து விட்டது.

“இறந்து போன என் தாயின் மரணத்தில் என்னை நானே சமாதானப் படுத்த எத்தனை பூக்களின் தாய்மார்களைக் கொடுமைப் படுத்தி விட்டேன்” என்று தனக்குள் தானாக அழுது தீர்த்தாள்.

அதற்குப் பிறகு அவளுக்குப் பூக்களிடம் தன் மனதை வெளிப்படுத்தாமல் வாழ முடிந்தது. சினியா பூக்களைக் கடக்கும் போது அதைப் பார்த்து ரசித்தாளே தவிர அங்கே நின்று அவைகளிடம் அவள் இப்போது பேசுவதே இல்லை.

வீட்டில் புதிய அம்மாவின் தொந்தரவு அதிகரித்துக் கொண்டே போனது. அவள் அமராவதிக்குக் கொடுக்கும் சாப்பாட்டில் மட்டும் உப்பு அதிகமானது; உரைப்பும் தாங்க முடியாத அளவு இருந்தது. அந்த நேரங்களில் எல்லாம் தான் வெறுத்த அந்தத் தாய் பன்றி தனக்கு காட்டிய அறிவுரையை எண்ணி மனதைத் தேற்றிக் கொண்டாள்.

“எந்த இடமும் நமக்குச் சொந்தமில்லை. எந்த இடம் நம்மை வாழ அனுமதிக்கிறதோ, அங்கே தான் நம்மால் நிம்மதியாக வாழ முடியும்” என்று தனக்குள் உறுதி எடுத்தாள் அமராவதி.

திடீரென புதிய அம்மா அமராவதியை நெருங்கி அவள் தலையை வருடிக் கொடுத்தாள். “அமராவதி உனக்குத் தம்பிப் பாப்பா பிறக்கப் போகுது. அம்மா என்ற வார்த்தையின் மேன்மையை இன்னைக்குத் தான் நான் புரிஞ்சுகிட்டேன். வீடு முழுமையும் நான் மட்டுமே ஆக்கிரமிச்சபடி இருந்தேன். இனிமேல் அடுப்பு வேலையெல்லாம் நீயே பார்த்துக்கோ. உனக்குத் தம்பிப் பாப்பா பிறக்கிற வரைக்கும் நான் ஓய்வெடுக்கிறேன்” என்று அன்பை வாரி அமராவதியின் மேல் கொட்டிய புதிய அம்மாவைப் பயத்துடன் பார்த்தாள் அமராவதி.

அதுவரை அமைதியாக இருந்த கிளி ‘சாரதா… சாரதா…’ எனக் கத்த ஆரம்பித்தது.

புதிய அம்மாவிற்குக் கிளியின் மேல் கோபம் கொப்பளித்தது. அமராவதியிடம் தான் அன்பாக இருப்பதைப் போல் நடித்ததை மறந்து விட்டாள்.

“இனிமேல் அந்தச் சண்டாளியின் பெயரைச் சொல்லி இப்படிக் கத்தினாயானால் அமராவதியின் கதி தான் உனக்கும் கிடைக்கும். அவளை வேலைக்காரியாக வீட்டுக்குள் அடங்கி வச்சிட்டேன். நீ கத்தி கத்தியே என்னையும் என் பிள்ளையையும் கொடுமைப் படுத்துவாய். உன்னைக் குழம்பு வைத்து உன்னை வளர்க்கிறவனுக்குக் கொடுத்துடுவேன்” என்று தன்னை மறந்து பேசிய புதிய அம்மா வெடுக்கெனத் திரும்பித் தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

“இந்தப் புதிய அம்மா என்னைப் பற்றிப் பேசும் பேச்சுகள் தான் இனிமேல் நான் எப்படி வாழ வேண்டுமென்ற மன உறுதியை எனக்குத் தருது அம்மா. இனி மேல் நான் எதற்காகவும் வருந்ந மாட்டேன்.” அமராவதி தன் அம்மாவிடம் பேசிக்கொண்டே வீட்டு வேலைகளைப் பரபரப்பாகச் செய்ய ஆரம்பித்தாள். அமைதியாக ஒரே இடத்தில் அடை காப்பதால் தனக்குத் தான் நஷ்டம் என்பதையும் புரிந்து கொண்டாள்.

“இந்தப் புதிய அம்மா என் மேல் இரக்கமே இல்லாமல் இருப்பது தான் என்னைச் சுறுசுறுப்பாக வைக்கிறது” என்று தனக்குள் பேசியவாறு வயதுக்கு மீறிய வேலை பார்த்த அமராவதி அலுப்பில் அன்று அயர்ந்து தூங்கி விட்டாள்.

காலையில் அமராவதி எழுந்த போது ‘சாரதா… சாரதா…’ என்று கூப்பிடும் கிளியின் சத்தம் அங்கே கேட்கவே இல்லை. அப்பா தன் புதிய மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

“கிளியை நீ தான் வீட்டை விட்டு விரட்டி இருக்க வேண்டும். கிளி வீட்டுக்குள் வரும் வரை நீயும் வரக்கூடாது. வெளியே போ” என்று புதிய மனைவியிடம் கத்தினார்”

“நான் ஒன்றும் நீ அடைத்து வளர்க்கும் கிளி இல்லை. எந்த நேரமும் நீ உன் முதல் மனைவியை மனசுக்குள் வைத்துக் கொண்டு சாரதா சாரதாவென கொஞ்சிக் கொண்டே இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. இப்போது சட்டப்படி நான் உனக்கு மனைவி. நான் வெளியே போக முடியாது” என்று அப்பாவுக்கு இணையாக புதிய அம்மாவும் கத்திக் கொண்டிருந்தாள்.

அமராவதிக்கு இந்தப் புதிய அம்மா வீட்டை விட்டுப் போய்விடுவாளோ என்ற அச்சம் மனசுக்குள் எழுந்து நின்றது. இந்த அம்மாவுக்குப் பதிலாக அவர் இன்னொரு அம்மாவைக் கூட்டி வந்து விடுவாரே என்றும் நினைத்தாள் அவள்.

“சாரதா என்ற பெயரோடு புதிய அம்மாவின் பெயரையும் கிளிக்குச் சொல்லிக் கொடுப்பாரோ” என்று தனக்குள் யோசித்த அமராவதியால் மனசுக்குள் இருந்து வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.

தன் குட்டிகளுக்காகத் தன் மூக்கால் மண்ணில் குழி பறித்த தாய் பன்றி இப்போது அமராவதியின் மனதில் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டது.

அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போதே “சாரதா… சாரதா…’ என்று கத்தியவாறு பறந்து வந்த கிளி தனது கூட்டிற்குள் போய் உட்கார்ந்து கொண்டது. அதைப் பரிதாபமாகப் பார்த்தாள் அவள். அருகில் இருந்த முந்திரிப் பருப்பை எடுத்து அதற்குக் கொடுத்தாள். அதை தன் அலகால் வாங்கிக் கால் விரல்களுக்குள் வைத்துக் கொண்டு கொறிக்க ஆரம்பித்தது கிளி. அதன் தலையை வருடிக் கொடுத்தாள் அமராவதி.

கூண்டில் அடைக்கப்பட்ட எந்த உயிருக்கும் வெளியே போய் வாழும் தைரியம் இருக்காது. பன்றிகளைப் போல் சுதந்திரமாக வாழும் உயிர்கள் எதிரிகள் இருப்பதால் மட்டுமே தாங்கள் வாழும் வாழ்க்கையை செதுக்கி விடுவதை புரிந்து கொண்டாள் அமராவதி.

இப்போது புதிய அம்மாவும் அப்பாவும் சண்டை இடுவது அமராவதிக்குத் தப்பாகத் தோன்றவே இல்லை.

– கலைமதி சுப்பையா

பேரையூர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *