₹2,500 கீபோர்டில் முளைத்த `இசை' கனவு… ஹிப் ஹாப் ஆதியின் பாராட்டு – சினிமாவை நோக்கி நகரும் விக்கி!

Spread the love

2015-ல் தொடங்கிய இசைப் பயணம்… ‘என் உயிர் அன்பே’, ‘மனசை ஏன்டி நொறுக்குற’, ‘மை லைஃப் ஃபுல் டேமேஜ்’ எனத் தொடர்ந்து, இன்று சினிமாவை நோக்கி நகரும் விக்கி (Vicky).

₹2,500-க்கு நண்பர் வாங்கிக் கொடுத்த ஒரு கீபோர்டில் தொடங்கிய பயணம்… இன்று 60 மில்லியன் பார்வைகளைத் தொட்ட பாடல், 50-க்கும் மேற்பட்ட இசைப் படைப்புகள், சினிமா வாய்ப்புகள் என அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டி செல்கிறது. இந்தப் பயணத்தின் பின்னால் இருப்பவர், சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த விக்கி (Vicky).

11-ம் வகுப்பு படிக்கும்போது இசையின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அவரது நண்பர் ஆனந்த் கீபோர்டு வாசிப்பதைப் பார்த்துப் பார்த்தே, விக்கிக்கும் கீபோர்டு மீது ஈர்ப்பு வந்திருக்கிறது.

“பத்தாம் வகுப்பு முடிச்சதும் கிடைத்த ஸ்காலர்ஷிப் பணத்தில் மொபைல் வாங்கலாம்னு நினைச்சிருந்தேன். ஆனால், ஆனந்த் என்னை சேலம் வணிக வளாகத்தில் இருக்கிற பாரதி மியூசிக்கல்ஸுக்கு கூட்டிட்டுப் போய், ₹2,500-க்கு ஒரு கீபோர்டு வாங்கிக் கொடுத்தார். ‘நீ இதை வைத்து கத்துக்கோ’ன்னு சொன்னார். அதுக்கப்புறம் தினமும் ஒரு டியூன் சொல்லிக் கொடுத்தார்” என்கிறார் விக்கி.

அந்தக் கீபோர்டுதான் அவரது இசைப் பயணத்தின் முதல் படி. 11-ம் வகுப்பில் தனுஷ் நடித்த ‘3’ படத்தின் பின்னணி இசையை கீபோர்டில் வாசித்துப் பார்த்து, பள்ளி நண்பர்களிடம் காட்டியிருக்கிறார். அப்படி தொடங்கிய இசை மீதான ஆர்வம், 2015-ல் அவரது தொடர் பயணமாக மாறியது.

2016-ல் முதல் ஆல்பம் பாடல்

இசையை முறையாகக் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அதை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் குறையவில்லை. இணையத்தில் கிடைத்த இலவச இசை சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தி, தனக்குத் தெரிந்த முறையில் பாடல்களை உருவாக்கத் தொடங்கினார்.

அதன் தொடர்ச்சியாக 2016-ல் ‘என் உயிர் அன்பே’ என்ற ஆல்பம் பாடலை உருவாக்கினார். யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களை உதாரணமாக வைத்து இசையை உருவாக்கிப் பார்த்த அந்த முயற்சி, அவரது இசைப் பயணத்தில் முக்கியமான தொடக்கமாக அமைந்தது.

இசையின் மீது கொண்ட நம்பிக்கை

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் விக்கி. ஆனால், இசையின் மீது இருந்த ஆர்வம் அதிகரிக்க, கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியிருக்கிறார். ஆரம்பத்தில் குடும்பத்தினரும் “காலேஜ் போ, படிப்பை முடி” என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், விக்கியின் மனம் முழுவதும் இசையிலேயே இருந்திருக்கிறது.

“கல்லூரி படிப்பை பாதிலேயே விட்டுட்டு, மியூசிக்க்ல ஃபுல்லா போக ஆரம்பிச்சேன். இசையை முழுசா கத்துக்கிட்டு, அதிலேயே பயணம் பண்ணணும்னு நினைச்சேன்” என்று அந்த முடிவை நினைவுகூர்கிறார்.

அதன்பிறகு கீபோர்டை எடுத்துக்கொண்டு செல்வதும், வருவதுமாக இருந்திருக்கிறார். அவர் இசையில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது குடும்பத்தினருக்கு முழுமையாகத் தெரியவில்லை. “ஏதோ கீபோர்டு எடுத்துட்டு போறான், வர்றான்” என்றுதான் நினைத்திருக்கிறார்கள்.

ஒருநாள் விக்கியின் பாடல் ஒரு கடையில் ஒலித்துக்கொண்டிருந்ததை அவரது அப்பா கேட்டிருக்கிறார். அது தனது மகனுடைய பாடல் என்பதைத் தெரிந்துகொண்டதும் அவருக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது. வீட்டுக்கு வந்து அந்தப் பாடலைப் பற்றி விக்கியிடம் பேசியிருக்கிறார்.

அதன்பிறகுதான் அவர் இசையில் செய்து கொண்டிருந்த முயற்சியை குடும்பத்தினர் புரிந்துகொண்டிருக்கிறார்கள். “அவனுக்கு பிடிச்சதை பண்ணட்டும். அவன் மேல நம்பிக்கை வச்சு பண்ணட்டும்” என்ற எண்ணத்துடன், “உனக்கு என்ன பிடிக்குதோ அதை பண்ணு” என்று சொல்லி ஆதரவு கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

குடும்பத்தின் ஆதரவு கிடைத்தாலும், இசைத்துறையில் தொடர்ந்து பயணிப்பது எளிதானதாக இல்லை. இசைக்குத் தேவையான சாதனங்களை வாங்குவதிலும் குடும்பத்துக்கு சுமையாக இருக்கக் கூடாது என்பதிலும் விக்கி கவனமாக இருந்திருக்கிறார்.

“என்னிடம் இருக்கும் பணத்தை வைத்து எனக்குத் தேவையான இசைச் சாதனங்களை நானே வாங்கிக்குவேன். குடும்பத்திற்கு பாரமாக இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம்” என்று கூறுகிறார் விக்கி.

இந்தப் பயணத்தில் தற்போது மனைவியின் ஆதரவும் முக்கியமானதாக இருப்பதாகச் சொல்கிறார்.

“இப்போ என்னுடைய இசைப் பயணத்தில் என்னுடைய மனைவி எனக்கு ரொம்ப பெரிய சப்போர்ட்டா இருக்காங்க. நான் தொடர்ந்து இந்தத் துறையில் பயணம் பண்ணிக்கிட்டு இருக்கிறதுக்கு அவங்களோட ஆதரவும் ஒரு முக்கியமான காரணம்” என்கிறார்.

60 மில்லியன் பார்வைகளைத் தொட்ட பாடல்

விக்கியின் இசைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க திருப்பமாக அமைந்தது ‘மனசை ஏன்டி நொறுக்குற’ பாடல்.

முதலில் ஒரு நண்பருக்காக உருவாக்கிய டியூனை, சில காரணங்களால் அவரால் பயன்படுத்த முடியாமல் போயிருக்கிறது. அது விக்கியிடமே இருந்த நிலையில், நண்பர் தினேஷிடம் அதைச் சொல்லியிருக்கிறார். டியூன் பிடித்துப்போக, அதற்கு பாடல் எழுதி வீடியோ உருவாக்கலாம் என தினேஷ் சொல்லியிருக்கிறார். அதன்படி பாடல் வரிகளை எழுதி, அவரே பாடவும் செய்திருக்கிறார்.

பின்னர் வெளியான அந்தப் பாடல் 60 மில்லியன் பார்வைகளைத் தொட்டது.

“அந்தப் பாடலுக்குப் பிறகு நிறைய Projects வந்தது. இந்தப் பாடலோட மியூசிக் கம்போஸர்னு சொன்னாலே, இப்பவும் நிறைய பேருக்கு என்னை ஈஸியா அடையாளம் கண்டுபிடிச்சிட முடியும்” என்கிறார் விக்கி.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பாராட்டு

அடுத்ததாக அவரது இசைப் பயணத்தில் கவனம் பெற்ற பாடலாக அமைந்தது ‘மை லைஃப் ஃபுல் டேமேஜ்’. அந்தப் பாடலை ஹிப் ஹாப் தமிழா ஆதியிடம் காட்டியிருக்கிறார்.

பாடலைக் கேட்ட ஆதி, “இந்தப் பாடல் ரொம்ப நல்லா இருக்கு” என்று பாராட்டியிருக்கிறார். அதன்பிறகு, “இதுல ஒரு சின்ன கரெக்ஷன் மட்டும் பண்ணீங்கன்னா இந்தப் பாடல் இன்னும் நல்லா இருக்கும்” என்றும் கூறியிருக்கிறார்.

ஒரு முன்னணி இசைக்கலைஞரிடமிருந்து கிடைத்த இந்தப் பாராட்டு, தனது இசைப் பயணத்தில் மறக்க முடியாத தருணம் என்கிறார் விக்கி.

தனது இசையை உருவாக்கும் முறையைப் பற்றியும் விக்கி கூறுகிறார்:

“நான் முதலில் ஒரு ஹெவி பீட் போடுவேன். அந்த பீட்டை அடிப்படையாக வைத்துத்தான் டியூன் உருவாக்குவேன். அதுதான் என்னுடைய ஸ்டைல்.”

ஆல்பம் பாடல்களிலிருந்து சினிமா வரை…

அடுத்த கட்டமாக பிரத்யாக்ரா மியூசிக் பாரடைஸ் மூலம் விக்கிக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிரவீன் மூலம் கிடைத்த இந்த வாய்ப்பில் உருவான ‘மயில் குமரன்’ பாடலுக்கு விக்கி இசையமைத்துள்ளார். ஸ்ரீநிஷா பாடிய இந்தப் பாடலில் பிக் பாஸ் ஜனனி நடித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து ‘அத்த பெத்த அழகே’ பாடலும் வெளியாகியுள்ளது. NRFM யூட்யூப் சேனலைச் சேர்ந்த ஃபயாஸ் இதில் நடித்துள்ளார். இந்தப் பாடலும் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாக விக்கி கூறுகிறார்.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள விக்கி, சில பாடல்களுக்கு பாடல் வரிகள் எழுதி, பாடியும் இருக்கிறார். ஆல்பம் பாடல்களைக் கடந்து, தற்போது சினிமாவிலும் தனது பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.

‘ரோல் கால்’ உள்ளிட்ட திரைப்படங்களில் ‘Vicky Musical’ என்ற பெயரில் அவரது இசை வெளியாக இருக்கிறது. மேலும் இரண்டு திரைப்படங்களுக்கான பாடல்களும் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன.

யுவன் சங்கர் ராஜாவை தனது மிகப்பெரிய உத்வேகமாகக் கொண்டிருக்கும் விக்கி, அவரது இசைப் பயணத்திலிருந்து தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திலும் இருக்கிறார்.

₹2,500-க்கு நண்பர் வாங்கிக் கொடுத்த அந்தக் கீபோர்டில் தொடங்கிய பயணம், 2015-ல் தொடர் இசைப் பயணமாகி, 2016-ல் முதல் ஆல்பம் பாடல், பின்னர் 60 மில்லியன் பார்வைகளைத் தொட்ட பாடல், ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பாராட்டு, 50-க்கும் மேற்பட்ட பாடல்கள் என அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டி, இன்று சினிமாவை நோக்கி நகர்கிறது.

இசைத்துறைக்குள் வர வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களுக்கு, விக்கி கூறுவது:

“உங்க மேல நம்பிக்கை வச்சு தொடர்ந்து முயற்சி செய்யுங்க. நிச்சயமா அதுக்கான பலன் கிடைக்கும்.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *