யூதர்களை கொல்லணும்.. இஸ்ரேல் விமானத்தை ஓமன் துணை விமானி கடத்த முயன்றது ஏன்? பின்னணியில் பாலஸ்தீனம் | Dubai – Tel Aviv flight: Oman pilot talked about killingjews in his social media post

Spread the love

International

oi-Nantha Kumar R

டெல்அவிவ்: துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகருக்கு சென்ற விமானத்தை ஓமன் துணை விமானி கடத்த முயன்ற சம்பவத்தின் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த செயல்பாட்டின் பின்னணியில் இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சனை இருப்பதாகவும், யூதர்களான இஸ்ரேலியர்களை கொல்ல வேண்டும் என்பதில் ஓமன் துணை விமானி உறுதியாக இருந்ததாகவும், அதனை அவரது சமூக வலைதள பதிவுகள் உறுதிப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகருக்கு நேற்று முன்தினம் ‘ஃப்ளைதுபாய்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமான FZ1073 விமானம் சென்றது. இந்த விமானத்தில் துணை விமானியாக இருந்த ஓமன் நாட்டு பைலட், மும்பையை சேர்ந்த பைலட் கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்திவிட்டு விமானத்தை கடத்த முயன்றார்.

flight

கத்திக்குத்து காயத்திலும் பைலட் ஸ்மித் மச்சார் மற்றும் பயணிகள் சேர்ந்து ஓமன் துணை விமானியின் கடத்தல் முயற்சியை தடுத்தனர். அதன்பிறகு விமானத்தில் பயணித்த பணி முடித்த 2 பைலட்டுகள் மூலம் சவுதி அரேபியாவின் தாபுக் விமான நிலையத்தில் தரையிறக்கினர். இதனால் விமானத்தில் பயணித்த 174 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என்று மொத்தம் 180 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதில் பெரும்பாலானவர்கள் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூதர்கள் தான்.

ஓமன் துணை விமானி பற்றிய புது தகவல்

இதில் ஓமன் துணை விமானி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் பெயர் விவரம் இன்னும் வெளியாகவில்லை. அவரது போட்டோவும் தொடர்ந்து ரகசியமாக வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் அந்த விமானி குறித்து ஒவ்வொரு தகவல்களும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவு

அதாவது, விமானத்தை கடத்தி 180 பேரையும் கொல்ல முயன்றதாக கூறப்படும் ஓமன் நாட்டின் துணை விமானி இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. சமீபத்தில் கூட பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக 2 ஆண்டுகள் வரை இஸ்ரேல் போர் புரிந்தது. இதில் பாலஸ்தீனத்தின் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பவர் தான் ஓமன் துணை விமானி.

யூதர்களை கொல்ல வேண்டும்

அதுமட்டுமின்றி இந்த துணை விமானி பற்றி இஸ்ரேல் அதிகாரிகள் சில விஷயங்களை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் ‘டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ”இந்த ஓமன் துணை விமானி தற்கொலை செய்ய கூட தயாராக இருந்துள்ளார். அவரது சமூக வலைதளம் என்று சொல்லப்படுவதில் இருந்து அவர் ஜிகாதி சித்தாந்தத்தில் உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது.

யூதர்களை (இஸ்ரேல் நாட்டினர்) கொல்ல வேண்டும் என்று பேசியள்ளார். விசாரணை முடியும் வரை எங்களால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் அவரது செயல்பாட்டை வைத்து பார்க்கும்போது விமானத்தை தரையில் வேகமாக முட்டி வெடிக்க செய்து அதில் பயணித்த அனைவரையும் கொல்ல வேண்டும் என்பது தான் நோக்கமாக இருந்து இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

‘ஃப்ரீ பாலஸ்தீனம்’ தான் டார்க்கெட்

அதேபோல் ஓமன் துணை விமானி பற்றி ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், ”ஓமன் துணை விமானியின் உடைமைகளில் Free Palestine என்ற வாசகங்களுடன் கூடிய துண்டு பிரசுரங்கள் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான மெட்டீரியல்கள் கிடைத்துள்ளன. பாலஸ்தீனத்துக்கான ஆதரவையும், இஸ்ரேலுக்கான எதிர்ப்பையும் பலமுறை அவர் காண்பித்துள்ளார்” என்று கூறியுள்ளனர்.

இஸ்ரேல் விசாரணை

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் நாடுகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இந்த ஓமன் துணை விமானியின் பின்னணி குறித்த விஷயங்களை இஸ்ரேல் உளவுத்துறை சேகரிக்க தொடங்கி உள்ளது. இந்த ஓமன் துணை விமானி சவுதி அரேபியாவில் இருந்து விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ள நிலையில் அதன்பிறகு நேரடியாக அவரிடம் விசாரிக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *