ரஷ்யாவின் இர்குட்ஸ்க் (Irkutsk) பகுதியில் உள்ள ஆண்டி-ப்ளேக் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் உயிரிழந்ததை அடுத்து, அங்குள்ள 200-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஐந்து மருத்துவமனைகளில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
என்ன நடந்தது?
அந்நிறுவனத்தில் லேப் டெக்னீஷியனாகப் பணியாற்றிய 28 வயதான டாரியா ஷிபிலோவா (Darya Shipilova), கடந்த செப்டம்பர் இறுதியில் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். தீவிர நிமோனியா பாதிப்பு காரணமாக ஷெலேகோவ் (Shelekhov) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 2-ம் தேதி அவர் உயிரிழந்தார்.
பிளேக் தொற்று சந்தேகம் எழக் காரணம் என்ன?
டாரியா பணியாற்றிய ஆய்வகத்தில் பிளேக் நோயை ஏற்படுத்தும் “யெர்சினியா பெஸ்டிஸ்’ (Yersinia pestis) கிருமி தொடர்பான பணிகள் நடந்து வந்துள்ளன. கடந்த செப்டம்பர் 25-ம் தேதி பரிசோதனைக் குழாய் (Test Tube) உடைந்து அவருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் இது நுரையீரலைப் பாதிக்கும் ‘நியூமோனிக் பிளேக்’ (Pneumonic Plague) தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், ஆய்வக விபத்தோ அல்லது பிளேக் தொற்றோ இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.