“தேர்தலில் எனக்கு சீட் கொடுக்கவில்லை…!’
புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியின் மகிளா காங்கிரஸ் தலைவர் நிஷா, கட்சி செலவுகள் குறித்துப் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் ஆக்டிவ் தலைவர்களில் ஒருவராக வலம் வரும் நிஷா பேசும் அந்த ஆடியோ, அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த ஆடியோவில் பேசும் நிஷா, “அனைவருக்கும் வணக்கம். நான் பணம் வாங்கிக் கொண்டு யாருக்கும் கொடுக்காமல், என் பாக்கெட்டில் போட்டுக் கொண்டதாக சிலர் என் மீது வதந்தி பரப்புகிறார்கள். அந்த வதந்திகளை நிறுத்திவிட்டு, அவர்கள் என்னிடம் நேரில் பேச வேண்டும்.
அதேபோல கட்சி செலவுகளுக்காக யாரும் என்னிடம் கொடுத்ததில்லை. நான் மகிளா காங்கிரஸ் தலைவியாவதற்கு முன்பு துணைத் தலைவராக இருந்தபோது, கோலப்போட்டி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் என்னுடைய சொந்தப் பணத்தைத்தான் செலவு செய்தேன்.

அது ஐந்து லட்சமாக இருந்தாலும் அல்லது ஐம்பது லட்சமாக இருந்தாலும் அனைத்தும் என்னுடைய சொந்த செலவுதான். அப்படி இருக்கும்போது கட்சி எனக்கு ரூ.30 லட்சம் கொடுத்ததாக யாரோ என் மீது தவறான தகவல்களைக் கூறி வருகின்றனர்.
கட்சி என்னிடம் ரூ.5 லட்சம் கொடுத்ததும், அத்துடன் என் சொந்தப் பணம் ரூ.7 லட்சத்தைப் போட்டு ஆட்களைக் கொண்டு வருவதற்கு செலவு செய்ததும் உண்மை. மேலும் என் பணத்தை எனக்கு திருப்பிக் கொடுங்கள் என்று ஐயாவிடம் (புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வைத்திலிங்கம்) தினம்தோறும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதும் உண்மை.
2026 தேர்தலில் போட்டியிடுவதற்கு எனக்கு சீட் கொடுக்கவில்லை. அதேபோல சம்பாதிக்கக் கூடிய எந்தவித பதவிகளையும் கட்சி வழங்கவில்லை. நானும் கட்சி மூலமாக ஐந்து பைசா பணத்தைக் கூட சம்பாதிக்கவில்லை.