டெல்லியில் ஜந்தர் மந்தரில் அரசுத் தேர்வுகளின் குளறுபடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியது போல, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில், JPSC, JSSC தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகத் தேர்வர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர் தலைவர் ரவீந்திர பாஸ்வான், “JSSC தேர்வுகள், TDPL முகமை நடத்திய தேர்வுகள் மற்றும் அரசுப் போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளி அபய் திவாரியுடன் தொடர்புடைய தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.
சி.பி.ஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும். தேர்வு வாரியங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்” ஆகிய என மூன்று முதன்மை கோரிக்கைகளை முன்வைத்தார். தங்களின் அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் அறுதியிட்டுக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்று, ராஞ்சியில் உள்ள மாநில அரசு விருந்தினர் மாளிகையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நான்கு அமைச்சர்கள் அடங்கிய மாநில அரசுப் பிரதிநிதிகள் குழுவும், JPSC, JSSC தேர்வர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 11 பேர் கொண்ட மாணவர் குழுவும் பங்கேற்றுத் தங்களது கருத்துகளை விவாதித்தன.