ராணிப்பேட்டையில், பாலாறு – பொன்னை ஆறு சங்கமிக்கும் படுகையையொட்டி, ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது `நவ்லாக்’ அரசுப் பண்ணை (State Horticulture Farm – Navlock). நவாப் ஆட்சிக்காலத்தில், பழவகைககள் உட்பட 9 லட்சம் பயன் தரும் மரங்களுடன் இந்தப் பண்ணை உருவாக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட நவ்லாக் பண்ணை மேல்பண்ணை, நடுப்பண்ணை, கீழ்ப்பண்ணை என மூன்று வகையாகப் பிரித்து, பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், போதிய பாதுகாப்போ, முறையான பராமரிப்போ இல்லாத காரணத்தால், தனது அடையாளத்தையே இழந்து உருக்குலைந்து கிடக்கிறது நவ்லாக் பண்ணை. இதனால், அங்கு போதை கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்து, குற்றப் பின்னணி கொண்ட மர்ம நபர்களின் அட்டகாசமும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில்தான் கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி இரவு 10.30 மணியளவில், தென்னை ஒட்டு மையம் செயல்படும் நடுப்பண்ணை பகுதி வழியாக பைக்கில் வீடு திரும்பிய இளம் காதல் ஜோடி, புதர் ஓரமாக பைக்கை நிறுத்திவிட்டு தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த 3 பேர் கொண்ட கும்பல், காதலனை தாக்கிவிட்டு, 19 வயது இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.