பொதுவாக ஆலயங்களை அதில் அருள்பாலிக்கும் இறைவனை அடிப்படையாகக் கொண்டு நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
ஒன்று ஈசன் சுயம்புவாக வெளிப்பட்டது. இரண்டாவது தேவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டது, மூன்றாவது ரிஷிகள் பிரதிஷ்டை செய்து வழிபட்டது, நான்காவது மனிதர்கள் பிரதிஷ்டை செய்தது. இவற்றில் தேவர்கள் பிரதிஷ்டை செய்த தலங்கள் அநேகம் நம் பாரத பூமியில் காணப்படுகின்றன.
அங்கு என்று வழிபடுவதன் மூலம் ஈசனின் அருளைப் பெறுவதோடு தேவர்களின் ஆசியையும் ஒருங்கே பெறலாம். இதன் மூலம் உலக வாழ்வில் இருக்கும் சிக்கல்கள் நீங்கி ஆனந்த வாழ்வு கிடைக்கும் என்பது ஐதிகம். அப்படி ஒரு ஆலயம்தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாரியூர் பூவேந்திய நாதர் திருக்கோயில்.
ராமநாதபுரத்திலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியே திருச்செந்தூர் செல்லும் வழியில் சுமார் 55 கி.மீ. தூரத்தில் உள்ள ஊர் மாரியூர். இங்கே பவளவல்லி அம்பாள் சமேதராக பூவேந்திய நாதர் அருளும் திருக்கோயில் மிகப் பழைமையானது. இங்குள்ள லிங்கத்திருமேனி வருண பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ராமபிரானால் வதம் செய்யப்பட்ட மாரீசன் முக்திபெற்ற தலம் இது என்கின்றன புராணங்கள். இங்கு வழிபட்டால் நம் குடும்பம் தழைக்கும். சந்ததி சிறக்கும். பித்ரு தோஷம் நீங்கி அவர்களின் ஆசி கிட்டும். இப்படி ஈசன், தேவர்கள், பித்ருகள் என அனைவரின் அருளையும் ஆசியும் பெற்றுத் தரும் தலம்தான் மாரியூர்.

முன்னொரு காலம் இந்தத் தலத்தில் துர்மகேந்திர மகரிஷி என்பவர் தவமும் வழிபாடும் செய்து வந்தார். குளக்கரையில் அவர் தவம் செய்த இடத்துக்கு அருகில் மாமரம் ஒன்றும் இருந்தது. அந்த மரத்தில் நாளொன்றுக்கு ஒரு மாங்கனி காய்க்குமாம். அந்தப் பழமே துர்மகேந்திர மகரிஷியின் உணவு.
ஒருநாள் பெண்ணொருத்தி குளத்தில் நீர் எடுக்க வந்தாள். மாமரத்தில் உதிர்ந்த மாங்கனி, நீர் எடுத்த பெண்ணின் குடத்துக்குள் சென்றுவிட்டது. அவளும் இதை அறியாமல் வீட்டுக்குச் சென்று குடத்தை இறக்கி வைத்தாள். அதில் மாம்பழம் இருப்பதைக் கண்ட அவளின் குழந்தைகள் அதை எடுத்துச் சாப்பிட்டுவிட்டனர்.
இந்த நிலையில் மரத்தில் மாங்கனி இல்லாததைக் கண்ட மகரிஷி, எவரோ திருடிவிட்டனர் என்று கருதி, “மாங்கனியைச் சாப்பிட்டவருக்கு மூக்கும் மார்பும் இல்லாமல் போகட்டும்’ என்று சாபம் கொடுத்தார். சாபம் பலித்தது. பெண்ணின் குழந்தைகள் அவலட்சணம் அடைந்தனர்.
காரணம் புரியாமல் தவித்த பெண், மாங்கனியின் மகத்துவத்தை அறிந்தாள். கோயிலுக்கு ஓடி, மகரிஷியிடம் விஷயத்தைக் கூறி, விமோசனம் அருளும்படி கேட்டுக்கொண்டாள். அவரோ சாபத்தைத் திரும்பப் பெறமுடியாது என்று கூறிவிட்டார்.