India
oi-Vigneshkumar
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் சுமார் 2 ஆண்டுகளாக மொபைல் நெட்வொர்க் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த கிராம மக்கள், டெலிகாம் நிறுவனத்தின் டெக்னீஷியன் ஒருவரை மொபைல் டவரில் சுமார் 2 மணி நேரம் கட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்தே, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.
இந்த காலத்தில் இணையம் தான் எல்லாமே என இருந்து வருகிறது. நமது நாட்டில் செல்போன் மூலமாகவே பெரும்பாலான மக்கள் இணையத்தை அணுகுவதால் செல்போன் சிக்னல் உரிய முறையில் கிடைக்கவில்லை என்றால் அதுவே ஒரு பேசுபொருளாக மாறுகிறது. அப்படி 2 ஆண்டுகளாக சிக்னல் கிடைக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் செய்த சம்பவம் தான் இப்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

சிக்னல் பிரச்சினை
உத்தர பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. நெட்வொர்க் பிரச்சினையால் டெக்னீஷியனை மொபைல் டவரில் கிராம மக்கள் கட்டி வைத்ததாக தெரிகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. அதேநேரம் இந்த சம்பவத்தில் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது நெட்வொர்க் பிரச்சினை விவகாரத்தில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க.. தன்னை டவரில் கட்டி வைக்குமாறு டெக்னீஷியனே கேட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் ஹர்தௌலி கிராமத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. மொபைல் டவருக்கான மின்சார சப்ளை தொடர்பான ஆய்வுக்காக டெலிகாம் டெக்னீஷியன் ஆதித்யபான் சிங் என்பவர் அங்கு சென்றிருந்தார். அப்போது அங்கு திரண்ட சில கிராம மக்கள், நீண்ட காலமாக நிலவி வரும் மொபைல் நெட்வொர்க் பிரச்சனை குறித்து அவரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஏற்பட்ட பேச்சுவார்த்தை, ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக மாறியதாக கூறப்படுகிறது.
டவரில் கட்டி கிராம மக்கள்
டவர் அமைக்கப்பட்டிருந்தாலும் தங்களது பகுதியில் நெட்வொர்க் பிரச்சனை தீரவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். ஆத்திரமடைந்த ஒருவர் டெக்னீஷியனை மொபைல் டவரில் கட்டி வைக்கலாம் என்று கூறியதாகவும், பின்னர் டவர் அடிப்பகுதியில் அவர் கட்டி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல் கிடைத்தவுடன் போலீசார் அங்கு சென்று அவரை மீட்டுள்ளனர். தன்னை சுமார் 2 மணி நேரம் பிணைக் கைதியாக வைத்திருந்ததாக டெக்னீஷியன் குற்றம்சாட்டியுள்ளார்.
Frustrated that Instagram Reels wouldn’t stream properly due to poor 5G speeds, angry villagers in UP’s Fatehpur tied a Jio technician to the mobile tower and demanded that senior officials come to the site immediately to fix the connectivity problems. pic.twitter.com/eVE0kFDjfA
— Piyush Rai (@Benarasiyaa) September 11, 2026
முரணான தகவல்
ஆனால், போலீஸ் விசாரணையில் இதற்கு முற்றிலும் மாறுபட்ட தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது தன்னை டவரில் கட்டி வைக்குமாறு டெக்னீஷியனே கிராம மக்களிடம் கேட்டதாக கூறப்படுகிறது. சாதாரணமாகப் புகார் சொன்னால் தீர்வு கிடைக்காது என்றும் இதுபோல செய்தால் தான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கலாம் என்று சொல்லி அவரே இதுபோல டவரில் கட்டி வைக்க சொன்னதாக கூறியதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கிறார்கள். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெட்வொர்க் பிரச்சினை
ஹர்தௌலி கிராமத்தில் சுமார் 2 ஆண்டுகளாக மொபைல் நெட்வொர்க் பிரச்சனை இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இதனால் தொலைப்பேசி அழைப்புகள் மேற்கொள்வது, இணையத்தை பயன்படுத்துவது மற்றும் ஆன்லைன் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் டெலிகாம் நிறுவனம் மொபைல் டவர் அமைத்தபோது பிரச்சனை தீரும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் டவர் அமைக்கப்பட்ட பிறகும் எதிர்பார்த்த அளவுக்கு நெட்வொர்க் சேவை மேம்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர்.