Tamilnadu
oi-Velmurugan P
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று முக்கியமான சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதாவது, “ஐந்து ரூபாயில் உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை ₹35 கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன? திமுக ஆட்சிக் காலத்தில் குறைந்த விலைக்கு வாங்கப் போடப்பட்ட ஒப்பந்தம் என்ன ஆனது?” என்று கேள்விகளை எழுப்பியிருந்தார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? அதிக விலை மற்றும் முறைகேடு புகார்களைக் கூறி, விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, ஒரு யூனிட்டிற்கு ₹11 முதல் ₹20 வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த குறுகிய கால மின் கொள்முதல் டெண்டர்களைக் கடந்த மே மாதம் ரத்து செய்தது.
ஆனால், அப்போது “குறைந்த விலையில் மின்சாரத்தைப் பெற நீண்ட கால ஒப்பந்தங்களில் கவனம் செலுத்துவதாக” மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் உறுதியளித்திருந்தார். அப்படி உறுதி அளித்த அமைச்சர் நிர்மல்குமார், அக்டோபர் மாதத்தில் நாள் முழுவதும் மின்சாரம் வழங்க ஒரு யூனிட்டிற்கு ₹31.99 முதல் ₹34.49 வரையிலும், மாலை நேர உச்சக்கட்டத் தேவைக்கு ₹33.37 முதல் ₹37 வரையிலும் விலையுள்ள அவசரக்கால மின் கொள்முதல் ஏற்பாடுகளைச் செய்திருப்பது ஏன்?

தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் ஒரு யூனிட்டிற்கு ₹37 என்கிற அளவிற்கு ஒப்புக்கொண்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது. பீக் மின்சாரத் தேவை உள்ள நேரங்களில் விநியோகச் சூழல் மற்றும் ஒப்பந்த நிபந்தனைகள் மாறுபடலாம் என்றாலும், ஆந்திரப் பிரதேசம் ஒரு யூனிட்டிற்கு ₹16 முதல் ₹20 வரையிலான விலையில் மின்சாரத்தைப் பெற்றிருக்கிறதே, அது எப்படி என்ற கேள்விகளும் எழுகின்றன.
ஒரு யூனிட்டிற்கு ₹11 முதல் ₹20 வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த குறுகிய கால மின் கொள்முதல் டெண்டர்களையே, “விலை மிக அதிகமாக இருந்தது” எனக் கூறி த.வெ.க அரசு ரத்து செய்திருந்தது. இப்போது அதற்கான மாற்றுத் திட்டம் என்ன? நீண்ட காலக் கொள்முதல் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதாக உறுதியளித்துவிட்டு, பின்னர் ஏன் இவ்வளவு அதிக விலையில் அவசரக்காலக் கொள்முதல்களை மேற்கொள்ள நேர்ந்தது? அக்டோபர் மாதத்திற்கான மின்சாரத் தேவைக்கு வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க நீண்ட காலக் கொள்முதலை ஏன் அரசு கையில் எடுக்கவில்லை? கடைசி நேரத்தில் போய் டெண்டர் வெளியிடத் தாமதித்தது ஏன்?
கடந்த மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலேயே அக்டோபர் மாதத் தேவையை கணக்கிட்டு டெண்டர் போட்டிருந்தால் குறைந்த விலையிலேயே மின்சாரம் வாங்கியிருக்க முடியுமே! ஆந்திராவைப் போல் செப்டம்பரில் டெண்டர் வெளியிட்டிருந்தால் கூட ஒரு யூனிட்டிற்கு ₹16 முதல் ₹20 வரையிலான விலையில் மின்சாரத்தைப் பெற்றிருக்க முடியுமே! ஏன் மின் டெண்டரை இவ்வளவு தாமதமாக அரசு வெளியிட்டது என்று பல்வேறு கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. அதற்கு மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.
தற்போதைய நிலையில், தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் அக்டோபர் 12 முதல் 31 வரை 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரத்தைப் பெறுவதற்காக, யூனிட் ஒன்றுக்கு ₹31.99 முதல் ₹34.49 வரையிலான விலையில் 1,500 மெகாவாட் மின்சாரத்திற்கான ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை ஏற்படும் மின்சாரத் தேவை அதிகரிப்பைச் சமாளிக்க வாங்கப்படவுள்ள 2,000 மெகாவாட் மின்சாரத்திற்கு, யூனிட் ஒன்றுக்கு ₹33.37 முதல் ₹37 வரை செலவாகும்.
இந்தியாவில் எந்த மாநிலமும் வாங்காத ஒரு விலையில் மின்சாரத்தை வாங்க வேண்டிய நெருக்கடி எதனால் வந்தது, ஏன் டெண்டர் வெளியிட இவ்வளவு தாமதம், கடைசி நேரம் வரை அரசு காத்திருந்தது ஏன் என்று விமர்சனங்கள் தற்போது அதிகமாகி வருகின்றன. ஏனெனில் முதலமைச்சர் விஜய், 2026 தேர்தல் பிரச்சாரத்தின் போது, “மின்சாரத்தை ஒரு யூனிட் ₹11 முதல் ₹20 வரை வாங்க நீண்ட கால டெண்டர் வெளியிட்ட போது, அதிக விலைக்கு வாங்கி கமிஷன் அடிக்க திமுக அரசு முயன்றது” எனக் குற்றம் சாட்டியிருந்தார். அதே குற்றச்சாட்டை இப்போது திமுகவினர் எழுப்பி வருகிறார்கள். “அன்று ஊழல் என்று எங்களை விமர்சித்தீர்களே.. இப்போது நீங்கள் ஏன் ₹35-க்கு மின்சாரம் வாங்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

