India
oi-Nantha Kumar R
குர்கிராம்: ‘வோக்ஸ்வேகன்’ நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கும் பெண் ஊழியர் ஒருவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தலைமை மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்ற தனது தாயுடன் சேர்ந்து சொகுசு வாழ்க்கை வேண்டாம் என்று அனைத்து சொத்துகளையும் விட்டுவிட்டு துறவறம் செல்ல எடுத்துள்ள முடிவு கவனம் பெற்றுள்ளது.
அம்மாவுக்கு 61 வயது ஆகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பொதுத்துறை நிறுவனத்தில் தலைமை மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தில் நல்ல சம்பளம். இப்போதும் ஓய்வூதியமாக கணிசமான தொகை கிடைக்கிறது.

இவரது மகளுக்கு 37 வயது. அவரும் சாதாரண ஆள் கிடையாது. பெங்களூர் ஐஐஎம்-மில் எம்பிஏ படிப்பை முடித்துவிட்டு வோக்ஸ்வேகன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது ஆண்டு சம்பளம் ரூ.50 லட்சம். தாய் – மகள் இருவருக்கும் வசதிக்கு குறைவில்லாத சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் தற்போது அவர்கள் 2 பேருக்கும் சொகுசு வாழ்க்கை பிடிக்கவில்லை. இந்த வாழ்க்கையை கைவிட்டுவிட்டு ஒன்றும் இல்லாமல் துறவறம் செல்ல முடிவெடுத்துள்ளனர். இந்த முடிவை எடுத்தவர்கள் யார் என்றால் ஹரியானாவின் குர்கிராமை சேர்ந்த சிரோமணி பஜாஜ். இவர் தான் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றி 2025ம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
இவரது மகள் பெயர் அக்ஷிதா ஜெயின். இவர் ஃபியாட், மெர்சிடஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றினார். இப்போது வோக்ஸ்வேகன் நிறுவனத்தில் பணியாற்றி ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பளம் பெறுகிறார். அக்ஷிதா ஜெயின் தனது பணியை விட்டுவிட்டு துறவறம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
இவர் பணியாற்றும் நிறுவனம் தற்போது ஏஐ துறையை நோக்கி செல்கிறது. தற்போது டேட்டா சென்டர்கள் உருவாக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, ஏராளமான நுண்ணுயிர்களுக்கு பிரச்சனையா மாறுவதால் அவர் மனம் நொந்துபோனார்.
ஜெயின் மதத்தை பொறுத்தவரை எந்த உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடாது. அகிம்சை வழியில் நடக்க வேண்டும் என்பதை பிரதானமாக சொல்கிறது. இதனால் அக்ஷிதா ஜெயின் துறவு வாழ்க்கைக்கு முடிவெடுத்தார்.
இதுபற்றி அவர் தனது தாய் சிரோமணி பஜாஜ்-யிடம் கூறினார். அவரும் ஒப்புக்கொண்டார். இருவரும் துறவு வாழ்க்கைக்கு செல்லலாம் என்று கூறினார். சிரோமணி பஜாஜ்-யின் கணவர் இறந்த பிறகு அவரும் ஜெயின் துறவிகள் மற்றும் ஜெயின் மதத்தை தீவிரமாக கடைப்பிடிப்பவர்களுடன் நெருங்கிய பழக தொடங்கினார். இதனால் அவரும் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள ஒப்புக்கொண்டார்.
அதன்படி சிரோமணி பஜாஜ் – அக்ஷிதா ஜெயின் இருவரும் ஜெயின் குருவான சாத்வி பூர்ணபிரக்யஸ்ரீயுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். துறவறத்தை ஏற்பதற்கு தயாராகும் வகையில், சிரோமணி பல மத சடங்குகளை செய்து, கடுமையான விரதங்களையும் கடைப்பிடித்து வருகிறார்.
தீட்சை நிகழ்வின் ஒரு பகுதியாக, ஜோத்பூரில் ‘வர்கோடா’ எனப்படும் பாரம்பரிய ஜெயின் ஊர்வலமும், அதனை தொடர்ந்து பிப்ரவரி 25ல் சென்னையில் தீட்சை வழங்கும் விழா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ‘தீட்சை’ நிகழ்வுக்கு பிறகு அவர்கள் சொந்த உடைமைகள், உறவுகளை முழுமையாக துறந்து துறவு வாழ்க்கை செல்வார்கள்.