International
oi-Nantha Kumar R
மெல்போர்ன்: இந்திய பெருங்கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் திடீரென்று கூட்டம் கூட்டமாக இடம்பெயரும் சிவப்பு நண்டுகளால் பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. வனப்பகுதியில் இருந்து பல லட்சம் சிவப்பு நண்டுகள் ஒரே நேரத்தில் கடலுக்கு பயணிக்கும் வீடியோக்கள் இணையதளங்களில் அதிகமாக பகிரப்படும் நிலையில் அதன் பின்னணி பற்றிய சுவராசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமூக வலைதளங்களில் தினந்தோறும் பல்வேறு வீடியோக்கள் பரவி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்ப்பதோடு, அதன் பின்னணி பற்றி தேடி வைக்கின்றன. அப்படித்தான் இப்போது ஒரு வீடியோ பற்றி நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.

அந்த வீடியோவில் இருப்பது என்னவென்றால் கூட்டம் கூட்டமாக சாலைகளில் சிவப்பு நண்டுகள் ஊர்ந்து செல்கின்றன. பெரிய போர்க்களத்தில் லட்சக்கணக்கான வீரர்கள் படையெடுத்து முன்னேறி செல்வது போல் சாலைகளே தெரியாத அளவுக்கு சிவப்பு நிற நண்டுகள் சாரை சாரையாக செல்கின்றன.
வனப்பகுதிக்கு நடுவே செல்லும் சாலைகளில் மனிதர்கள், வாகனங்கள் இல்லாத சூழலில் இந்த சிவப்பு நண்டு கூட்டம் மட்டுமே ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு நகர்ந்து செல்கிறது. நூறாய்? ஆயிரமா? இல்லை இல்லை.. ஒரே நேரத்தில் பல லட்சம் நண்டுகள் சாலைகளில் செல்கின்றன. இதுதான் நெட்டிசன்களை பதற வைத்துள்ளது.

“என்னங்க நடக்குது இங்க? எங்கிருந்து இவ்வளவு சிவப்பு நண்டுகள் வந்துள்ளன? ஏதாவது இயற்கை பேரிடருக்கான அறிகுறியா?” என கேள்வி எழுப்பி வருவதோடு, அதன் பின்னணியை தேட தொடங்கி உள்ளனர். ஆனால் உண்மையில் இது இயற்கையாகவே நடக்கும் ஒரு நிகழ்வாகும். இதனால் யாரும் பீதியடைய வேண்டாம்.இந்த சிவப்பு நண்டு படை எங்கே போகிறது? எதற்காக இப்படி சாலைகளை ஆக்கிரமித்துள்ளது? அதன் பின்னணியில் உள்ள சுவாரசிய தகவலை இங்கு பார்க்கலாம்.
இந்திய பெருங்கடலில் கிறிஸ்துமஸ் தீவு அமைந்துள்ளது. சுமத்ரா தீவுக்கு தெற்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் இந்த கிறிஸ்துமஸ் தீவு அமைந்துள்ளது. இந்த தீவு ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமானது. ஆஸ்திரேலியாவை விட்டு தனித்த அடையாளத்துடன் தனியாக இந்த தீவு உள்ளது.

கிறிஸ்துமஸ் தீவில் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இங்கு அதிகளவில் சிவப்பு நண்டுகள் (Red Crabs) உள்ளன. இதனை பார்க்க ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதம் மழைக்காலம் தொடங்கும்போது சிவப்பு நண்டுகளின் இனப்பெருக்க காலம் தொடங்கும். அந்த வகையில் தற்போது இனப்பெருக்க காலம் தொடங்கி உள்ளது.

பொதுவாக இந்த சிவப்பு நண்டுகள் தீவில் உள்ள அடர் வனப்பகுதியில் இருக்கும். இனப்பெருக்க காலம் வந்தவுடன் கூட்டம் கூட்டமாக வனப்பகுதியில் இருந்து கடற்கரையை நோக்கி செல்லும். அப்படித்தான் தற்போது சிவப்பு நண்டுகள் கூட்டம் கூட்டமாக சாலைகளை கடந்து சென்று வருகின்றன. சில இடங்களில் சாலைகளுக்கு பதில் நண்டுகள்கடந்து செல்ல பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையின் இருபுறமும் நண்டுகள் ஏறி, இறங்கி செல்ல சாய்வுதளமும், சாலையின் குறுக்கே மேம்பாலம் போன்ற கட்டமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
🦀 Millones de cangrejos rojos invaden los caminos y bosques de la #IslaDeNavidad, en #Australia, como parte de su migración anual hacia la costa. El desplazamiento ocurre con la llegada de las lluvias y tiene como objetivo llegar al mar para reproducirse.📹: ABC News https://t.co/PaFNJJnEI6
— El Mexicano (@ElMexicanOnline) November 16, 2026
இதுபற்றி ‘Parks Australia’ அதிகாரிகள் கூறுகையில், ”பருவமழை தொடங்கும் அக்டோபர், நவம்பர் மாதத்தில் சிவப்பு நண்டுகள் தங்களின் அடர் வனப்பகுதியில் இருந்து கடலை நோக்கி பயணிக்கும். இதற்கு முக்கிய காரணம் இனப்பெருக்கம் தான். வனப்பகுதியில் இருந்து கடலுக்கு செல்லும் சிவப்பு நண்டுகள் முட்டையிட்டு சந்ததியை பெருக்கும். அதன்பிறகு மீண்டும் கடலில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிடும்.
இனப்பெருக்கத்துக்காக மழைக்காலம் தொடங்கிவுடன் ஒரே நேரத்தில் கூட்டம் கூட்டமாக பல லட்சம் சிவப்பு நண்டுகள் வனப்பகுதியில் இருந்து சாலையை கடக்கும். இதனால் பல சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படும். அதேபோல் சில இடங்களில் நண்டுகள் கடந்து செல்ல வசதியாக பாலம் அமைக்கப்படும். இது அரியவகை நண்டு வகையாகும். இதனால் அதனை காக்கவும் முடிந்த வரை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்படித்தான் தற்போது கிறிஸ்துமஸ் தீவில் உள்ள சாலைகளில் சிவப்பு நிற நண்டுகள் சாலைகளை கடந்து வருகின்றன” என கூறியுள்ளனர்.