மனிதர்கள் விலங்குகள் வாழும் பகுதிகளில் குடியிருப்புகளை அமைப்பதால், நோய்த்தொற்றுகளைப் பரப்பும் உயிரினங்களுடன் தொடர்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. விலங்குகளைத் தொடுவதன் மூலம் மட்டுமே நோய்கள் பரவுவதில்லை. விலங்குகள் வாழும் இடங்களில் காணப்படும் பூச்சிகள், உண்ணிகள் (Ticks), சிறிய ஒட்டுண்ணிகள் (Mites) மற்றும் பிற பூச்சிகள் மூலமாகவும் சில நோய்கள் மனிதர்களுக்குப் பரவலாம்.
வீட்டிற்கு வந்ததும் உங்களை வரவேற்கும் நாய், அருகில் படுத்திருக்கும் பூனை அல்லது எப்போதும் உங்களைப் பின்தொடரும் செல்லப்பிராணி என இவை குடும்பத்தில் ஒருவரைப் போலவே மாறிவிடுகின்றன. அவற்றின் உணவு, தடுப்பூசிகள் மற்றும் உடல்நலத்தில் நாம் கவனம் செலுத்துகிறோம். ஆனால், அவற்றின் மூலம் மனிதர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படுமா என்பதைப் பல நேரங்களில் கவனிப்பதில்லை.

சில நோய்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவலாம். இவை விலங்குவழித் தொற்று நோய்கள் என்று அழைக்கப்படுகின்றன. விலங்குகள் கடிப்பது, கீறுவது, அவற்றின் உமிழ்நீர், சிறுநீர், மலம், மாசுபட்ட உணவு அல்லது தண்ணீர் ஆகியவற்றின் மூலம் இவை பரவலாம். நோய்த்தொற்று உள்ள விலங்குகள் வாழும் இடங்களிலிருந்தும் கிருமிகள் பரவக்கூடும்.
நோயை ஏற்படுத்தும் கிருமிகளைச் சுமந்து செல்லும் பூச்சிகள் மூலமாகவும் சில நோய்கள் பரவுகின்றன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நோய்த்தொற்று உள்ள விலங்கு பார்ப்பதற்கு ஆரோக்கியமாகவே இருக்கலாம்.
நீங்கள் எதிர்பார்க்காத வழிகளிலும் நோய்த்தொற்று பரவலாம். நாய் கடித்தால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், விலங்குகளிடமிருந்து பரவும் எல்லா நோய்களையும் எளிதில் அடையாளம் காண முடியாது. உதாரணமாக, பூனைகளிடம் Bartonella henselae என்ற பாக்டீரியா இருக்கலாம். இது பூனைக் கீறல் நோயை (Cat-scratch Disease) ஏற்படுத்துகிறது.
எல்லா பூனைக் கீறல்களும் இந்த நோயை ஏற்படுத்தாது. ஆனால், இந்த நோய் ஏற்பட்டால் காய்ச்சல் மற்றும் நிணநீர் சுரப்பிகளில் வீக்கம் (Swollen Lymph Nodes) ஏற்படலாம். சிலருக்கு கீறல் ஏற்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகும் அறிகுறிகள் தோன்றலாம்.