லட்சங்களில் லாபம் காட்டி பல கோடி மோசடி… டிரேடிங் கும்பலின் தில்லாலங்கடி! – Kumudam

Spread the love

‘ரெண்டே நிமிஷத்துல 10 லட்சம் லாபம்’ என சோஷியல் மீடியாவில் ஆசையை தூண்டிய மூவர் கும்பல் ஒன்று, தடை செய்யப்பட்ட டிரேடிங் பேரைச் சொல்லி 6 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருக்கும் சம்பவம் தலைநகரையே அதிர வைத்திருக்கிறது. இதில் தொடர்புடைய மேலும் சிலருக்கு கண்ணிவைத்து காத்திருக்கிறது காவல்துறை.

இதுகுறித்து விவரமறிந்த ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம். “இன்றைய டிஜிட்டல் உலகில், எம்எல்எம் ஓடிபி கேட்பது, டிஜிட்டல் அரெஸ்ட் ஆன்லைன் டிரேடிங், கிரிப்டோ கரன்சி என பல வகைகளில் மோசடி அரங்கேற்றப்படுகிறது. அதில் ஒன்றாக ‘ஃபாரெக்ஸ் டிரேடிங்’ என்றொரு முறையை பயன்படுத்திதான் இந்த மோசடியை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

அதாவது சர்வதேச சந்தையில், ஒரு நாட்டின் பணத்தை கொடுத்து, மற்றொரு நாட்டின் பணத்தை வாங்கி, அதை சரியான நேரத்தில் விற்று லாபம் பார்ப்பதையே  ஃபாரெக்ஸ் டிரேடிங் என்கிறார்கள். இதில் லாபம் கிடைக்கும் அதே அளவுக்கு நட்டம் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. இம்முறையில், தங்கம், கச்சா எண்ணெய் போன்ற டிரேடிங்கும் நடப்பதாக சொல்கிறார்கள்.

ஆனால், இந்தியாவில் இதற்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளதால் தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தை போன்ற அனுமதிக்கப்பட்ட பங்குச்சந்தையில் மட்டுமே குறிப்பிட்ட சில நாடுகளின் ரூபாய்களை வைத்து (எ.கா:USD-INR, EUR-INR) ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்ய முடியும். செபி அல்லது ஆர்.பி.ஐ அமைப்புகளால் அங்கீகரிப்படாத அல்லது தடை செய்யப்பட்ட வெளிநாட்டு ஆன்லைன் புரோக்கர் செயலிகள் மூலம் டிரேட் செய்வது சட்டவிரோதமானது. ஆனால், ஃபாரெக்ஸ் டிரேடிங் என்ற உண்மையை மட்டுமே வைத்துக்கொண்டு ஆசையை தூண்டி இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளது” என்றவர். மோசடியை பற்றி விவரித்தார்.

“திருவேற்காட்டைச் சேர்ந்த கவின் பிரசாத் தீர்த்திவாசன், பார்த்திபன் ஆகிய 24 வயது எம்.பி.ஏ பட்டதாரிகளான இவர்கள் மூவரும், சில வருடங்களுக்கு முன் ஆன்லைன் டிரேடிங் செய்ய முயற்சித்துள்ளனர். அதற்கு பணமில்லாமல் போகவே ஆன்லைன் டிரேடிங் குறித்து கிளாஸ் எடுத்து சம்பாதிக்க முடிவெடுத்துள்ளனர். அதன்படி, டிரேடிங் கிளாஸுக்கு ஒருவருக்கு 40 ஆயிரம் முதல்.50 ஆயிரம் ரூபாய் வரை  வசூலித்துள்ளனர்.

ஒரு பேட்ஜுக்கு 50 பேர் வரை சேர்த்து, ஈ.சி.ஆர், கொடைக்கானல், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ரிசார்ட்களை வாடகைக்கு எடுத்து, நம்பிக்கை வரும் வகையில் கிளாஸ் எடுத்துள்ளனர். இப்படி பெங்களூர் வரை தங்களது வேலையை காட்டியுள்ளனர்.

பிறகு, ஆர்.பி.ஐயால் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு ஆன்லைன் புரோக்கர் செயலிகளை (Just Markets – MetaTrader 5) ஒவ்வொருவருக்கும் பதிவிறக்கம் செய்துகொடுத்து, அதில் முதலீடு செய்ய வைப்பதாகவும், லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிப்பது போலவும் போலி தொகையை காட்டியுள்ளனர். ஷேர் மார்க்கெட் போல அதில் புள்ளிகள் ஏறுவது. இறங்குவது போலவும், டாலர்ஸில் ஏகப்பட்ட லாபம் வருவது போலவும் காண்பிக்கவே, கிளாஸுக்கு சென்றவர்கள் அதை ஆராயாமல் நம்பி குஷியாகியுள்ளனர்.

கடந்த அக்டோபர் 2ம் தேதி பல்லாவரத்தில் கூட 40 பேருக்கு இவ்வாறு டிரேடிங் கிளாஸ் எடுத்துள்ளனர். அங்கே பேசும்போது, ‘ப்ரோ. நாங்க சொல்றபடி முதலீடு செஞ்சா ரெண்டே நிமிஷத்துல 10 லட்சம் லாபம் கிடைக்கும். மார்க்கெட் சொல்றதை நாங்க கேட்க மாட்டோம். நாங்க சொல்றததான் மார்க்கெட் கேட்கும்’ என பில்டப் கொடுத்து அங்கிருந்தவர்களை கவுத்துள்ளனர். 

ஆனால், எத்தனை கோடி அவர்களது கணக்கில் இருந்தாலும் அதை எடுக்க முடியாது. அதைவைத்து ஒரு டீ கூட வாங்க முடியாது. இப்படியான சூழலில், இவர்கள் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட செயலியை (Just Markets) பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதாக போலீஸுக்கு புகார் சென்றது.

அதன்படி, ஆவடி, சென்னை, தாம்பரம் போலீஸார் விசாரித்ததில், மூவரும் இணைந்து டிரேடிங் கிளாஸ் எடுப்பதாக கூறி பலகோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டிருப்பது உடனடியாக வழக்குப்பதிவு செய்த தெரியவந்தது. இதையடுத்து, ஆவடி இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளர் சுபாஷினி, மூவரையும்  கைது செய்ததுடன் செல்போன்களையும் பறிமுதல் செய்திருக்கிறார். இவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுடைய டீம் மெம்பர்களை அலெர்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.

அதாவது, இவர்கள் பல வாட்ஸாப், டெலிகிராம், இன்ஸ்டா குரூப் வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து டீம் மெம்பர்ஸும் நீக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இவர்களோடு தொடர்பிலிருந்த அனைவரையும் லிஸ்ட் எடுத்து விசாரித்து வருகிறோம்” என்றார். காவல் ஆய்வாளர் சுபாஷினியிடம் பேசினோம்.

ஒரு ரிசார்ட்டில் கூடி, ‘நான் இவ்வளவு சம்பாதித்துவிட்டேன்’ என சிலர் வீடியோ போடுவதெல்லாம் ரியல் கிடையாது. அவர்கள் டெமோவாக காட்டும் எண்கள் எல்லாம் விரச்சுவல் நம்பர்ஸ்தான். உண்மையான பணம் அல்ல என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். முறையாக லைசென்ஸ் பெற்று டிரைனிங் நடத்துபவர்கள் என்றால் சரி. ஆனால், இன்னொருவர் பணக்காரன் ஆகவேண்டும் என டிரேடிங் பண்ணுகிற நபர் நினைக்கமாட்டார். அதனால் இந்த முறையில் தாங்கள் பணம் சம்பாதிப்பதற்குரிய வழிகள் இருக்கிறதா என்பதை நாம் முதலில் ஆராய வேண்டும்.

இவர்கள் எம்.பி.ஏ படித்திருப்பதால் போலீஸிடம் மாட்டிக்கொள்ளக்கூடாது என தெளிவாக யோசித்து, புதிய கிரைம்ஸை உருவாக்குகிறார்கள். அதாவது, டிரேடிங் கிளாஸுக்கு என ஒருவரிடம் 50 ஆயிரம் பணம் வாங்கினால், அவருக்கென 10 ஆயிரம் செலவு செய்யப்போகிறோம். மீதி 40 ஆயிரம் தான் லாபம்’ என திட்டமிடுகிறார்கள். ஆக ஒரு பேட்ஜுக்கு 40 பேர் என்றால், 16 லட்சம் ரூபாய் ஒவ்வொரு முறையும் கிடைக்கிறது. இப்படி மொத்தமாக 36 பேட்ஜ் கிளாஸ் எடுத்துள்ளனர். கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

சிக்கியவர்களோ ‘அவர்களிடம் வாங்கிய காசை வைத்து டிரேடிங் செய்து சம்பாதித்தோம்’ என்கிறார்கள். நிஜம் என்னவென்றால் டிரேடிங் செய்தெல்லாம் இவ்வளவு சம்பாதிக்க முடியாது. 20 ஆயிரம் போட்டால், 22 ஆயிரம் கிடைப்பது என்பது இயல்பு. ஆனால், 50 ஆயிரம் போட்டால் 5 லட்சம் கிடைக்கும் என்பதெல்லாம் அப்பட்டமான மோசடி” என்றார் உறுதியாக பேராசை எண்ணத்தை கைவிடாத வரை ஏமாற்றமடைவது உறுதி!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *