லண்டன் பயணம்: “முதல்வர் விஜய் செய்தியாளர்களைச் சந்தித்து…" – டி.ஆர்.பி. ராஜா அடுக்கும் கேள்விகள்

Spread the love

முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (செப் 17) காலை சென்னை திருப்பினார்.

இந்தப் பயணம் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டை உலகின் முன்னணி முதலீடு, வளர்ச்சி மையமாக உயர்த்தும் நோக்கில் முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் அமைந்தது. விஜய்யின் இங்கிலாந்து பயணம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, முதலீட்டு ஈர்ப்புக்கு மைல்கல். முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இதன் மூலம் 10,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். நம்பிக்கைக்குரிய தொழில் முதலீட்டு மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்தும் வெளிநாட்டுப் பயணம் தொடரும்.

லண்டன் பயணத்தின்போது முதல்வர் விஜய்க்கு நல்லாதரவு அளித்த அந்நாட்டில் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கு முதல்வர் விஜய் நன்றி தெரிவித்துக்கொண்டார்” எனக் கூறப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், தி.மு.க முன்னாள் தொழில் வளர்ச்சித்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தன் எக்ஸ் பக்கத்தில், “மாண்புமிகு முதலமைச்சர் இன்று நாடு திரும்பியதும், நிச்சயம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது லண்டன் பயணத்தின் முழு விவரங்களையும் தமிழ்நாட்டு மக்களிடம் வெளிப்படையாக விளக்குவார் என்று நம்புகிறோம்.

குறிப்பாக, ரூ.15,300 கோடி முதலீடு என்று அறிவிக்கப்பட்டதில், புதிதாக இந்தப் பயணத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடு எவ்வளவு? ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்கம் எவ்வளவு? முந்தைய தி.மு.க ஆட்சியிலேயே பேச்சுவார்த்தை தொடங்கி, Guidance Tamil Nadu மூலம் தொடர்ந்து பணிகள் நடைபெற்ற திட்டங்கள் எவை?

ஸ்டாலின்
ஸ்டாலின்

₹3,000 கோடி மதிப்பிலான, பெயர் வெளியிடப்படாத நிறுவனத்தின் Letter of Intent, உறுதி செய்யப்பட்ட முதலீடாகக் கணக்கிடப்பட்டுள்ளதா? ஒவ்வொரு நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை எப்போது தொடங்கியது? முதலீடு எப்போது, எங்கு செயல்பாட்டுக்கு வரும்?

அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் எப்போது உருவாகும்? முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக மேற்கொண்ட வெளிநாட்டு முதலீட்டுப் பயணங்களின்போது, புறப்படுவதற்கு முன்பும், நாடு திரும்பிய பிறகும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, பயணத்தின் நோக்கம், ஈர்க்கப்பட்ட முதலீடுகள், MoU-க்கள், வேலைவாய்ப்புகள், அவற்றின் செயலாக்க நிலை என மக்களுக்கு விளக்கமளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எனவே, முதலமைச்சரின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்போம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *