India
oi-Halley Karthik
சிம்லா: தொடர் விடுமுறை வந்துவிட்டால் மக்கள் கூட்டம் கூட்டமாக மலை வாசஸ்தலங்களை நோக்கி செல்வது இயல்பானதுதான். ஆனால், ஓவர் கூட்ட நெரிசலால் நிம்மதியை தேடி வந்த மக்கள்.. நிம்மதியை இழந்து தவிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில், போக்குவரத்து நெரிசல் காரணமாக பல மணி நேரமாக வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நிற்கின்றன.

போக்குவரத்து நெரிசல்
காந்தி ஜெயந்தி, அதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு லீவு காரணமாக இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட மாநிலங்களின் முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மீக தலங்களில் பயணிகளின் வருகை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மணாலி, சிம்லா, முசோரி, கைஞ்சி தாம் மற்றும் கேதர்நாத் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
10,000 வாகனங்கள்
மணாலிக்குள் நேற்றும் இன்றும் சுமார் 5,000க்கும் அதிகமான வாகனங்கள் நுழைந்திருக்கின்றன. வழக்கமான நாட்களில் சுமார் 3,000 வாகனங்கள்தான் வரும். ஆனால், தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருக்கிறது. எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. நாளை வாகனங்களின் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
நிரம்பி வழியும் சுற்றுலா தலங்கள்
அதேபோல கல்கா-சிம்லா நெடுஞ்சாலையில் பல கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பொதுவாக 3.5-4 மணி நேரத்தில் இந்த தூரத்தை கடந்துவிடலாம். ஆனால், இன்று 8 மணி நேரம் வரை பயணிகள் டிராபிக் ஜாமில் சிக்கியிருக்கின்றனர்.
அதேபோல முசோரி-டேராடூன் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் மிக மெதுவாக நகர்கின்றன. இங்குள்ள விடுதிகளின் முன்பதிவு 90% சதவிகிதத்தை தாண்டியிருக்கிறது. லைப்ரரி பஜார் மற்றும் கெம்ப்டி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
#WATCH | Manali, Himachal Pradesh: A huge crowd of tourists has flocked to Manali due to the long weekend. Traffic congestion is also being witnessed in the area. (02.10) pic.twitter.com/nZfINsOwKK
— ANI (@ANI) October 2, 2026
7 கி.மீ நீளத்திற்கு அணிவகுத்த வாகனங்கள்
உத்தரகாண்ட ஆன்மீக தலங்களிலும் பக்தர்களின் வருகை அதிகரித்திருக்கிறது. பாபா நீம் கரோலியின் புகழ்பெற்ற கைஞ்சி தாம் ஆன்மீக தலத்திற்கு வார இறுதி விடுமுறை மற்றும் சமீபத்தில் வெளியான அனுமான் அன்ஷ் திரைப்படத்தின் தாக்கத்தால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பீம்தால்-ஹல்த்வானி சாலையில் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பத்ரிநாத் மற்றும் ஙேம்குண்ட் சாஹிப் செல்லும் வழியில் ஜோஷிமத் மற்றும் மார்வாரி இடையே சுமார் 7 கி.மீ தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. கேதர்நாத் தாமிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
முன்னதாக வியாழக்கிழமை மாலையிலேயே புதுடெல்லியின் மண்டி ஹவுஸ், காஷ்மீரி கேட், அக்சர்தாம் மற்றும் பிரகதி மைதானம் போன்ற முக்கிய பகுதிகளிலும் மக்கள் விடுமுறையை கழிக்க ஊருக்கு புறப்பட்டதால் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. இதையெல்லாம் பார்க்கும்போது சனி, ஞாயிற்றுக்கிழமை அதுவுமா எங்கடா போறீங்க? அதுவும் கூட்டம் கூட்டமா எங்கதான் போறீங்க? என்று கேட்க தோன்றுவதாக உள்ளூர் மக்கள் புலம்புகின்றனர்.