வங்கதேசத்தில் தட்டம்மை நோயின் பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதல், தட்டம்மை எனச் சந்தேகிக்கப்படும் பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000-க்கும் மேலாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, குழந்தைகளே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தலைநகர் டாக்காவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தட்டம்மை என்றால் என்ன?
தட்டம்மை என்பது Measles virus மூலம் ஏற்படும் மிகவும் தொற்றும் தன்மை கொண்ட வைரஸ் நோயாகும். இது பெரும்பாலும் காற்றின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாகப் பரவுகிறது. அதிக காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல், கண்களில் நீர் வடிதல் மற்றும் உடல் முழுவதும் சிவப்பு நிற தடிப்புகள் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
குறிப்பாக தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். சிலருக்கு நிமோனியா, மூளை வீக்கம் உள்ளிட்ட தீவிரமான சிக்கல்களையும் தட்டம்மை ஏற்படுத்தக்கூடும். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய நோயாக இருந்தாலும், தடுப்பூசி பாதுகாப்பில் ஏற்படும் இடைவெளி இதன் பரவலுக்குக் காரணமாகிறது.
அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, மார்ச் மாதத்திலிருந்து மட்டும் 1.66 லட்சத்துக்கும் மேற்பட்ட தட்டம்மை சந்தேக பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 19,835 பேருக்கு ஆய்வகப் பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.