வங்கிகளிடமே பணம் இல்லை! ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கும் நிலை! ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடி அவசர நிதி | RBI Injects Rs 1 Lakh Crore as Indian Banks Cash Shortage After Five Months, What happened

Spread the love

Business

oi-Vigneshkumar

டெல்லி: இந்திய வங்கிகளில் கடந்த 5 மாதங்களில் இல்லாத வகையில் முதல்முறையாக பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வரி செலுத்துவதற்காக வங்கிகளில் இருந்து அதிக அளவில் பணம் எடுக்கப்பட்டதால், வங்கிகளின் கையிருப்பு குறைந்து, அவை ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து வங்கிகளுக்கு அவசரமாக ரூ.1 லட்சம் கோடி நிதியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.

நம்ம கையில் காசு இல்லை என்றால் வங்கிக்கு போய் பணம் எடுப்போம். ஆனால், அந்த வங்கிகளிலேயே காசு இல்லை என்றால் என்ன செய்வது? அப்படியொரு இக்கட்டான சூழல் தான் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்திய வங்கிகளில் திடீரென பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாம்.

RBI Indian Banks Cash Shortage cash Indian banks

பணம் இல்லை

இந்திய வங்கிகளில் இருந்து அதிகளவில் பணம் எடுக்கப்பட்டதால் கையிருப்பு குறைந்துள்ளதாகவும் இதனால் வேறு வழியில்லாமல் ரிசர்வ் வங்கி கடன் வழங்கியுள்ளது. கடந்த நவம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி, வங்கிகளுக்கு ரூ.12,825 கோடி நிதியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் இறுதியில் இதேபோல வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி நிதி கடன் கொடுத்திருந்தது. அதன் பிறகு 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரிசர்வ் வங்கி கடன் கொடுத்துள்ளது. அதாவது கடந்த சில மாதங்களாக வங்கிகளில் உபரியாக இருந்த பணம் தற்போது பற்றாக்குறையாக மாறியிருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

கடன் வாங்கும் வங்கிகள்

வங்கிகளிடம் பணம் குறைந்ததால், அவை தங்களுக்குள் ஒரு நாள் கடன் வாங்கிக்கொள்ளும் வட்டி விகிதம் 5.75% ஆக உயர்ந்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் வழக்கமான வட்டி விகிதமான 5.50%ஐ விட இது அதிகமாகும். அன்றாட செலவுகளுக்கு வங்கிகளிடம் போதிய பணம் இல்லாததால் இதுபோல ஒரு நாளுக்கு மட்டும் அவசர கடன் வாங்குகிறது. ஒரே நேரத்தில் பல வங்கிகளுக்குப் பணம் தேவைப்பட்டதால், கடனுக்கான தேவை அதிகரித்து வட்டி உயர்ந்தது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வங்கிகளிடம் வரலாறு காணாத அளவுக்கு உபரி பணம் இருந்தது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்து டாலர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ரிசர்வ் வங்கி சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தியது. இதன் மூலம் அதிக அளவில் டாலர் வரத்து ஏற்பட்டதுடன், ரூபாயின் மதிப்பும் உயர்ந்தது. இதனால் வங்கிகளின் பணப்புழக்கம் அதிகரித்திருந்தது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

தட்டுப்பாடு தொடரும்

அதேநேரம் இந்த தட்டுப்பாடு இப்போதைக்கு முடியாது. அடுத்த காலாண்டிலும் இந்த பண தட்டுப்பாடு நீடிக்க வாய்ப்புள்ளதாக ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் கவுரா சென் குப்தா தெரிவித்துள்ளார். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் பொதுவாகவே வங்கிகளில் இருந்து மக்கள் ரொக்கம் எடுப்பது வழக்கமாக அதிகரிக்கும். இந்த ஆண்டு அதுபோல பணம் எடுப்பது குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாகவும் அதுவே இந்த தட்டுப்பாட்டிற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே வங்கிகளில் உடனடியாக பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை இரண்டு கட்டங்களாக நிதி வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் மூலம் வங்கிகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் கோடி வழங்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் தேவைப்படும் அனைத்து வங்கிகளுக்கும் இந்த கடன் சென்று சேரும்.

பணப்புழக்கம் & வட்டி விகிதம்

பணப்புழக்கம் அதிகமாக இருந்ததால் பணவீக்கம் அதிகரிக்கும். அதை சமாளிக்க செப்டம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உபரி பணத்தை வங்கிகளிடமிருந்து திரும்ப பெற்றது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கலாம் என்ற உள்ள நிலையில், ரிசர்வ் வங்கி துரிதமாக நடவடிக்கை எடுத்தது.

குறிப்பாக கடந்த மாதம் தான் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது. மேலும், பணவீக்கத்தை கருத்தில் கொண்டு வரும் காலங்களில் வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்படலாம் என்பது போலவும் கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *