சர்வதேச அளவில் புகழ்பெற்ற புளூம்பெர்க் ஊடகம், தனது பொருளாதார நிபுணர் அபிஷேக் குப்தாவின் ஆய்வை மேற்கோள்காட்டி ஒரு செய்தியை வெளியிட்டது. அதன்படி, மே 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வாரங்களில், இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை விற்றிருக்கலாம் என்றும், அதே காலகட்டத்தில் சுமார் 7.5 பில்லியன் டாலர் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்களை வாங்கியிருக்கலாம் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை நிலையாக வைத்திருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. இந்தச் செய்தி வெளியான உடனேயே, இந்தியப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை குறித்த விவாதங்கள் சூடுபிடித்தன.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்த மத்திய அரசு, புளூம்பெர்க் வெளியிட்டது தவறான தகவல் என்று உடனடியாக விளக்கம் அளித்தது. மாறாக, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு குறைந்தபாடில்லை, அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுத்தது.
“2025 செப்டம்பர் இறுதியில் 13.92% ஆக இருந்த தங்கத்தின் பங்கு, 2026 மார்ச் 31 அன்று 16.70% ஆகவும், 2026 மே 22 நிலவரப்படி 16.85% ஆகவும் உயர்ந்துள்ளது” என்று மத்திய அரசு தனது விளக்கத்தில் தெரிவித்தது. இது புளூம்பெர்க்கின் குற்றச்சாட்டுக்கு நேரெதிரான தரவாக அமைந்தது.
இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ரிசர்வ் வங்கியும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது. “ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்பனை செய்வதாக சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை” என்று திட்டவட்டமாகக் கூறியது.
மேலும், “ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் அளவு 880.52 டன்களாக மாற்றமின்றி உள்ளது” என்றும் உறுதி செய்தது. உண்மையான தகவல்களுக்கு எப்போதும் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும், மாதாந்திர அறிக்கைகளையும் பார்க்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தியது.

இந்தத் தங்க விற்பனை சர்ச்சை ஒருபுறம் இருக்க, இந்தியர்களின் சேமிப்புப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள ஒரு மாபெரும் மாற்றம் குறித்த ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் மறுபுறம் கவனம் ஈர்த்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், வங்கிகளில் மக்கள் பணம் வைக்கும் விதத்தில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. குறைந்த வட்டி வழங்கும் சேமிப்புக் கணக்குகளிலிருந்து, அதிக வருமானம் தரும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (Term Deposits) மக்கள் தங்கள் பணத்தை மாற்றி வருவது தெரியவந்துள்ளது.
2022 மார்ச்சில் மொத்த வங்கிக் கணக்குகளில் 34.6% ஆக இருந்த சேமிப்புக் கணக்குகளின் பங்கு, 2026 மார்ச்சில் 28.7% ஆகக் குறைந்துள்ளது. அதே சமயம், ஃபிக்ஸட் டெபாசிட்களின் பங்கு 55.2% என்பதிலிருந்து 61.6% ஆக உயர்ந்துள்ளது.
இந்த மாற்றம் குறித்து jUMPP நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சர்வஜீத் சிங் விர்க் கூறுகையில், “சும்மா கிடக்கும் பணத்தை இந்தியக் குடும்பங்கள் கையாளும் விதத்தில் ஏற்பட்டுள்ள தெளிவான மாற்றத்தையே இது காட்டுகிறது. மக்கள் அதிக ரிஸ்க் உள்ள திட்டங்களுக்குச் செல்கிறார்கள் என்று அர்த்தமல்ல; மாறாக, அதிக வருமானம் தரும் பாதுகாப்பான திட்டங்களை நோக்கி நகர்கிறார்கள். இன்று, பணத்தை சும்மா வைத்திருப்பதால் ஏற்படும் இழப்பை மக்கள் உணர்ந்துள்ளனர்,” என்றார்.
டிஜிட்டல்மயமாக்கலும் இந்த மாற்றத்திற்கு உதவுவதாக அவர் குறிப்பிட்டார். “மே 2026-ல் மட்டும் யுபிஐ (UPI) மூலம் 23.2 பில்லியன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.29.90 லட்சம் கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியர்களின் டிஜிட்டல் நிதிப் பழக்கத்தைக் காட்டுகிறது. அதேநேரம், ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வழங்கப்படும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களால், மக்கள் தங்கள் பாதுகாப்பான பணத்தையும் கூடுதலாகச் சம்பாதிக்க வைக்கிறார்கள்,” என்றும் அவர் விளக்கினார்.