வசமாக சிக்கிய பாகிஸ்தான்.. ஒரு பக்கம் அமெரிக்கா.. இன்னொரு பக்கம் வளைகுடா நாடுகள்! சிக்கல் | Pakistan Caught Between US and Iran in middle east Conflict Says Defence Minister Khawaja Asif

Spread the love

International

oi-Vigneshkumar

இஸ்லாமாபாத்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக இப்போது பாகிஸ்தான் மிகவும் சிக்கலான சூழலை எதிர்கொண்டு வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஈரான் மட்டுமின்றி, மோதலில் தொடர்புடைய வளைகுடா நாடுகளுடனும் பாகிஸ்தான் நெருக்கமான உறவை கொண்டிருப்பதால் அதன் நிலைமை கயிற்றில் நடப்பது போல இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா ஈரான் இடையே கடந்த சில மாதங்களாகவே போர் தொடர்ந்து வருகிறது. இடையில் நேரடி தாக்குதல் குறைந்திருந்தாலும் கூட பதற்றம் தொடர்ந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் முழு வீச்சில் மோதல் தொடங்கும் என்ற நிலையே இருக்கிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்பும் முயன்று வருகின்றன.

Khawaja Asif

சமரச முயற்சிகள்

குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமரச முயற்சிகளை மேற்கொள்ள பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று வருகிறது. இரு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இதுவரை நிரந்தரமான தீர்வு ஏற்படவில்லை.

இந்தச் சூழலில் தான் கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு சூழலில் பாகிஸ்தான் இருப்பதாக அந்நாட்டின் அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் பாகிஸ்தான் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் மோதலில் தொடர்புடைய வளைகுடா நாடுகளுடனும் பாகிஸ்தான் முக்கியமான உறவுகளை கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான்

இது குறித்து உள்ளூர் செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “இந்த மோதலில் எவ்வளவு தூரம் செல்ல முடியும்.. எந்த அளவுக்கு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க முடியும்.. இந்த விவகாரத்தில் இருந்து முழுமையாக விலகி இருக்க முடியுமா என்பதெல்லாம் பாகிஸ்தானுக்கு மிக பெரிய சோதனையாக உள்ளது. இந்த அனைத்து அம்சங்களையும் பார்க்கும்போது, பாகிஸ்தானின் நிலை கயிற்றில் நடப்பது போன்றது. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு தரப்பையும் தொடர்புகொள்ளப் பாகிஸ்தான் முயன்று வருகிறது” என்றார்.

எல்லாமே முக்கியம்

ஈரானுடனான உறவு மட்டுமின்றி, மோதலில் தொடர்புடைய வளைகுடா நாடுகளுடனான உறவும் பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானது என கவாஜா ஆசிப் குறிப்பிட்டார். இந்த மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து வளைகுடா நாடுகளுடனும் தங்களுக்கு சகோதர உறவு உள்ளது என்றும் மறுபுறம் ஈரானுடனும் அத்தகைய உறவு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த உறவுகள் அனைத்தும் மிகவும் முக்கியமானவை என்பதால் அதை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

சமரச முயற்சி

அவர் மேலும் கூறுகையில், “எதிர்காலத்தில் அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதலில் சமரச முயற்சிகளை மேற்கொள்ளும்போது, தூதரக ரீதியாக பாகிஸ்தான் முடிந்தவரை பாதுகாக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதையும் நிலைமை மேலும் சிக்கலாகாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதையும் ஆராய வேண்டி இருக்கிறது. அதேநேரத்தில் இந்த நெருக்கடிக்கு தூதரக ரீதியாக ஒரு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.

மேலும், பாகிஸ்தானுடன் தொடர்புடைய நாடுகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அதே விதமாக பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் ஒவ்வொரு முடிவையும் பல்வேறு விஷயங்களை யோசித்தே எடுக்க வேண்டி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *