வட இந்தியா முழுவதும் வாட்ஸ்ஆப் மூலம் ரூ.88 கோடிக்கு கிரிக்கெட் சூதாட்டம்: ரெய்டில் சிக்கிய 37 பேர்

Spread the love

நாடு முழுவதும் சட்டவிரோதமாக கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக பீகார் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரணை நடத்தியதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இது போன்ற சூதாட்டம் வாட்ஸ் ஆப் மூலம் நடப்பது தெரிய வந்தது. இதையடுத்து பீகார் சிறப்பு அதிரடிப் படை நாடு முழுவதும் 16 இடங்களில் சோதனை நடத்தியது. பாட்னாவில் ஏழு, கொல்கத்தாவில் இரண்டு, டெல்லியில் மூன்று, காஜியாபாத்தில் ஒன்று, பிரயாக்ராஜில் இரண்டு மற்றும் ராஞ்சியில் ஒன்று என மொத்தம் 16 இடங்களில் இந்த சோதனை நடத்தியது.

இது குறித்து சிறப்பு அதிரடிப்படை தலைவர் குந்தன் கிருஷ்ணன் கூறுகையில், ”ஜார்கண்ட், மேற்கு வங்காளம், டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையில், கிரிக்கெட் சூதாட்டத்தின் மூளையாக செயல்பட்டவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 37 பேர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் சர்வதேச அளவில் செயல்படும் கிரிக்கெட் சூதாட்ட கும்பலுக்கு எதிராக வங்கிகள் மற்றும் மாநில போலீஸார் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

ராஞ்சியில் கைது செய்யப்பட்டவர்களில் சந்தீப் குமார் குப்தா தான் இந்த கிரிக்கெட் சூதாட்டத்தில் பிரதான குற்றவாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சோதனையில் 22 லட்சம் ரொக்கம், பல்வேறு வங்கிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஏடிஎம், கிரெடிட் கார்டுகள், 100க்கும் மேற்பட்ட செல்போன்கள், 5 லேப்டாப்கள், 6 டேப்லெட்டுகள், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், 500 கிராம் நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

BaliExch.com, shiva365.live, cricbuzzexch.com மற்றும் bazimmro.com ஆகிய இணையதளங்கள் மூலம் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தளங்கள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்று சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டன. வாட்ஸ்அப் மூலம் ஒருவர் இக்கும்பலை தொடர்பு கொண்டுவிட்டால், அவரிடம் இக்கும்பல் எப்படி விளையாடுவது என்பதை விளக்கி கூறுவார்கள். மேலும் வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது டெபாசிட்களுக்கான QR குறியீடுகளையும் சூதாட வரும் நபருடன் வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொள்வர். இதன் மூலம் வரும் பணம், போலி ஆவணங்கள் அல்லது வேறு நபர்களின் பெயர்களில் திறக்கப்பட்ட போலி கம்பெனி வங்கி கணக்கிற்கு சென்றுவிடும்.

சூதாட்டத்தில் பங்கேற்பவர்கள் முதலில் சிறிய தொகைகளை வெல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். படிப்படியாக அதிக பணத்தில் சூதாட ஊக்கப்படுத்துவர். இறுதியில் அதிக தொகைக்கு சூதாட தொடங்கியவுடன் தோற்க செய்துவிடுவர். இவ்வாறு பெறப்படும் பணத்தை பணம் ஒரே வங்கி கணக்கில் வைத்திருப்பதில்லை. உடனே பல்வேறு போலி வங்கி கணக்கிற்கு மாற்றிவிடுகின்றனர். மொத்தம் 88 கோடி அளவுக்கு பரிவர்த்தனைகள் நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது”என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *