வந்தே மாதரம்: முடியும் வரை எழுந்து நின்ற ஒமர் அப்துல்லா; அதிருப்தி தெரிவித்த காங்கிரஸ் – சாடும் பாஜக

Spread the love

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் முதல்வர் ஓமர் அப்துல்லா, அவரது தந்தையும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. இப்பாடல் முழுமையாக இசைத்து முடிக்கப்படும் வரை ஃபரூக் அப்துல்லாவும், ஓமர் அப்துல்லாவும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு வீடியோவை காங்கிரஸ் செயலாளர் வேணுகோபால் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, “இந்தியாவிற்காக நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவு கண்டு வளர்த்தெடுத்த பன்முகத்தன்மை மற்றும் பல்வேறு கலாசாரங்களுக்கு எதிராக”வந்தே மாதரம்’ பாடலின் முழு வடிவம் முரணாக அமைகிறது.

அப்பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே ஏற்றுக்கொள்வது என்று சுதந்திரப் போராட்ட வீரர்கள் எடுத்த முடிவை மதிக்கவேண்டும்.

மகாத்மா காந்தி, பண்டித நேரு, சர்தார் படேல், சுபாஷ் சந்திர போஸ், ராஜேந்திர பிரசாத், ஆச்சார்ய நரேந்திர தேவ், மௌலானா ஆசாத், சரோஜினி நாயுடு மற்றும் ஜே.பி.கிருபளானி ஆகியோரின் ஆழ்ந்து சிந்திக்கப்பட்ட முடிவுகள் ரவீந்திரநாத் தாகூரின் ஆலோசனைகளால் கணிசமான அளவில் வடிவமைக்கப்பட்டவை எங்களுக்கு மிக முக்கியமானவையாகத் திகழ்கின்றன.

விடுதலைப் போராட்ட வீரர்களின் முடிவை மதிக்கவேண்டும். அவர்கள் ஏற்றுக்கொண்ட அந்த அழகான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாடலின் வடிவத்தை மட்டுமே பாடுவதில் காங்கிரசுடன் கூட்டணி கட்சி இணைந்து நிற்கவேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு தேசிய மாநாடு கட்சி பதிலடி கொடுத்து இருக்கிறது. அக்கட்சியின் மூத்த தலைவர் பஷீர் அகமது இது குறித்து அளித்த பேட்டியில், “கூட்டணிக் கட்சியாக இருந்து கொண்டு, பாட வேண்டுமா அல்லது எவ்வளவு பாட வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை நீங்கள் விதிக்க முடியாது.

வேணுகோபாலுக்கு ட்வீட் செய்யும் உரிமை உள்ளது, ஆனால் அவர் எதையும் திணிக்க முடியாது. இது மக்களின் விருப்பம் சார்ந்த விஷயம். மக்கள் மீது எதையும் திணிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *