தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு சேவையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையாக, STAR 3.0 திட்டத்தின் முதல் கட்டமான “Anywhere Registration” திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்கான நிர்வாக ஒப்புதலை வழங்கி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணையின்படி, ஆகஸ்ட் 17 முதல் இரண்டு வகை பத்திரங்கள் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்லாமல், முழுமையாக ஆன்லைன் வழியாக (Presenceless Registration) பதிவு செய்யப்பட உள்ளன.
இந்த நடைமுறையின் கீழ், ஆவணங்களை இணையம் வழியாக பதிவேற்றம் செய்து பதிவு செய்ய முடியும். இதற்காக சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

இருப்பினும், தற்போது நடைமுறையில் உள்ளபடி ஆவணங்களை அதே நாளில் பதிவு செய்து திருப்பி வழங்கும் சேவை, இந்த Presenceless Registration முறைக்கும் தொடரும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் பதிவின் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆவணம் பதிவு செய்பவர்கள் மற்றும் சாட்சிகளின் ஆதார் எண், பயோமெட்ரிக் கைரேகை, டிஜிட்டல் புகைப்படம் ஆகியவை கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். கைரேகைகள் ஆதார் தரவுத்தளத்துடன் ஒப்பிட்டு அடையாளம் சரிபார்க்கப்படும் என்றும், இதன்மூலம் ஆன்லைனில் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.