பயனாளிகளின் மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப, அவரவர் முறைப்படி பிரார்த்தனைகள் மற்றும் புதுமனை புகுவிழாக்கள் நேற்று காலையிலேயே நடத்தப்பட்டன. இது தொடர்பான காணொளிகளை அக்கட்சி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. இத்திட்டத்தின் முறையான தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் IUML தலைவர் சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்கல் மற்றும் மூத்த தலைவர் பி.கே. குஞ்சாலிகுட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பி.கே. குஞ்சாலிகுட்டி, “அனைத்தையும் இழந்தவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை நேரில் கண்டதில் பெரும் நெகிழ்ச்சி அடைகிறோம். துயரங்களைக் கடந்து வந்த அவர்களுக்கு எங்களால் முடிந்த இந்த உதவி ஒரு கூட்டு மனப்பான்மைக்குச் சான்று” என்றார்.
தற்போது 51 வீடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 105 வீடுகள் என்ற இலக்கை அடைய கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் முழுமையடையும் போது, இப்பகுதியில் சமுதாயக் கூடம், அங்கன்வாடி மையம், பூங்கா என நவீன நகரத்தை கட்டமைக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. வாடகை வீடுகளில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, இந்தக் கூட்டு முயற்சி பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இந்த பிரம்மாண்ட திட்டத்திற்காக IUML ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டது. வழக்கமான நிதி திரட்டும் முறைகளைத் தவிர்த்து, ஒரு பிரத்யேகச் செயலி மூலம் பெரிய அளவிலான மக்கள் நிதித் திரட்டல் (Crowdfunding) இயக்கத்தை நடத்தி நிதியைத் திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.