பயிற்சி பெறாத பாரம்பரியப் பிரசவ உதவியாளர்களால் பிரசவங்கள் நடத்தப்பட்டதால் தாய், சேய் இறப்புகள் அதிகமாக இருந்த அக்காலத்தில், மேரி பூனன் லூக்கோஸ் அப்பெண்களைத் தேர்ந்தெடுத்து இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு அறிவியல் அடிப்படையிலான பிரசவப் பயிற்சி, கிராமப்புறங்களில் பாதுகாப்பான மகப்பேறு சேவைக்கு வழிவகுத்தார்.
காசநோய் அச்சுறுத்தலாக இருந்த காலத்தில் நாகர்கோவிலில் காசநோய் சிகிச்சை நிலையத்தை நிறுவினார். திருவனந்தபுரத்தில் எக்ஸ்-கதிர் மற்றும் ரேடியம் மருத்துவ நிறுவனத்தைத் தொடங்கி, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான நவீன சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தினார். 1924-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சுகாதாரத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1938-ஆம் ஆண்டு திருவிதாங்கூரின் தலைமை அறுவைச் சிகிச்சை நிபுணராக உயர்ந்தார். இதன் மூலம் உலகின் முதல் பெண் சர்ஜன் ஜெனரல் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.
1922-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சட்டமன்றக் கவுன்சிலின் முதல் பெண் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். சுகாதாரம், தடுப்பூசி, பெண்கல்வி ஆகியவற்றுக்காக சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்தார். பெரியம்மை போன்ற கொடிய நோய்கள் பரவியபோது மக்கள் தடுப்பூசி போட அஞ்சிய நிலையில், கட்டாயத் தடுப்பூசி சட்டத்திற்காக அவர் தீவிரமாக வாதிட்டார். மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடி, அறிவியல் மருத்துவத்தின் தேவையை மக்களிடம் எடுத்துரைத்தார்.
1917-ஆம் ஆண்டு வழக்கறிஞர் கே.கே.லூக்கோஸைத் திருமணம் செய்தார். அவர் பின்னர் திருவிதாங்கூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தார். இவர்களுக்கு கிரேஸ் லூக்கோஸ் என்ற மகளும் கே.பி.லூக்கோஸ் என்ற மகனும் பிறந்தனர். மகள் மருத்துவம் பயின்று பிரிட்டனில் எஃப்.ஆர்.சி.எஸ். தகுதி பெற்று, புதுதில்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். மகன் இந்திய வெளியுறவுத் துறையில் தூதராகவும், ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும், பணியாற்றினார்.
வாழ்க்கையின் பிற்பகுதியில் மேரி பெரும் குடும்பத் துயரங்களைச் சந்தித்தார். 1947-ஆம் ஆண்டு அவரது கணவரும், 1954-ஆம் ஆண்டு அவரது மகளும் உயிரிழந்தனர். அதன்பின் அவரது மகனும் மறைந்தார். கணவரையும் இரு பிள்ளைகளையும் இழந்தபோதும், அவர் மனம் தளரவில்லை. ஒய்.எம்.சி.ஏ., இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம், ஒய்.டபிள்யூ.சி.ஏ., பெண் சாரணர் இயக்கம், இந்திய மருத்துவச் சங்கம் போன்ற அமைப்புகளில் தொடர்ந்து பணியாற்றினார். தந்தையின் நினைவாக திருவனந்தபுரம் ஒய்.எம்.சி.ஏ. அமைப்பிற்கு பெரும் தொகையை நன்கொடையாக வழங்கியதுடன், ஏழை மக்களின் மருத்துவ உதவிக்காகத் தனது குடும்பச் சொத்துக்களையும் பயன்படுத்தினார்.