ஆஸ்கார் வரலாற்றை மாற்றிய டோரதி… கார்த்திக் சுப்புராஜ் தேர்வு செய்த தலைப்பின் பின்னணி! – Kumudam

Spread the love

கார்த்திக் சுப்புராஜின் 10வது திரைப்படமாக உருவாகி வரும் ‘டோரதி’ என்ற தலைப்பு தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தலைப்பிற்கான காரணம் குறித்து இயக்குநர் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், இந்த பெயருக்கு பின்னால் இருக்கும் நபரின் வாழ்க்கை வரலாறு மிகவும் சுவாரஸ்யமானதும், புரட்சிகரமானதுமாக உள்ளது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும், அதிகம் அறியப்படாத மனிதர்களின் கதைகளையும் தனது படைப்புகள் மூலம் சொல்லி வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். முக்கியமாக, இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பது பெரும் எதிர்பார்ப்பு. பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் என படங்களை எடுத்துவந்த கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தில் ரிஷிகாந்த், சன்னத் போன்ற குணச்சித்திர வேடத்தில் நடிக்கும் முக்கிய நாயகர்களாகவும், பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாகவும் நடித்துள்ளது சினிமா ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

இவரது 10வது படத்திற்கு ‘டோரதி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயர் யாரை குறிக்கிறது என்ற கேள்வி எழுந்த நிலையில், ஹாலிவுட் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த டோரதி டான்ட்ரிட்ஜ் (Dorothy Dandridge) என்ற கலைஞரின் வாழ்க்கை தற்போது கவனம் பெற்றுள்ளது.

யார் இந்த டோரதி டான்ட்ரிட்ஜ்?

டோரதி டான்ட்ரிட்ஜ் (1922 – 1965) அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற நடிகை, பாடகி மற்றும் நடனக் கலைஞர்.

1950-களில் ஹாலிவுட்டில் இன பாகுபாடுகள் அதிகமாக இருந்த காலகட்டத்தில், ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்ணாக முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர்.

சினிமா, இசை மற்றும் நடனம் என பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்திய டோரதி, ஹாலிவுட்டின் முக்கியமான முன்னோடி கலைஞர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

ஆஸ்கார் வரலாற்றில் சாதனை படைத்த பெண் :

டோரதி டான்ட்ரிட்ஜின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘Carmen Jones’ (1954). இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் கவனம் பெற்ற அவர், ஆஸ்கார் விருதுகளில் சிறந்த நடிகைக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் நடிகை என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார்.

அந்த காலகட்டத்தில் நிலவிய இன பாகுபாடுகளுக்கு மத்தியில் கிடைத்த இந்த அங்கீகாரம், ஹாலிவுட் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக அமைந்தது.

‘Carmen Jones’ உருவாக்கிய மாற்றம் :

1954-ல் வெளியான ‘Carmen Jones’ திரைப்படம் டோரதிக்கு புகழை மட்டுமல்லாமல், சினிமாவில் கறுப்பின நடிகர்களுக்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கியது. இதற்கு முன்பு ஹாலிவுட்டில் கறுப்பின நடிகைகளுக்கு பெரும்பாலும் குறைந்த முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களே வழங்கப்பட்டன.

ஆனால், டோரதி தனது நடிப்பு மூலம் ஒரு முன்னணி கதாபாத்திரத்தை தாங்கி நிற்கும் திறமை கொண்டவர் என்பதை நிரூபித்தார்.

புகழுக்கு பின்னால் இருந்த போராட்டம் :

உலகளவில் புகழ் பெற்ற நடிகையாக உயர்ந்தாலும், டோரதி டான்ட்ரிட்ஜின் பயணம் எளிதானதாக இல்லை.ஹாலிவுட்டில் நிலவிய இன வேறுபாடுகள் காரணமாக, அவருக்கு கிடைக்க வேண்டிய பல முக்கியமான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.

வரலாற்றுச் சாதனை படைத்த கலைஞராக இருந்தாலும், தனது திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் மற்றும் கதாபாத்திரங்களுக்காக தொடர்ந்து போராட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு :

‘டோரதி’ திரைப்படத்தின் கதை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், தலைப்பின் பின்னணியில் இருக்கும் இந்த வரலாற்று நபர் காரணமாக, இந்த படம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏனென்றால், இந்த படத்தில் கீர்த்திசுரேஷ் கதைநாயகியாக நடித்துள்ள நிலையில், படத்தின் டீசரின் மூலம்  அவரின் கதாபாத்திரத்தை சுற்றி கதை நகரும் என்று சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆகையால், கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்திற்கு டோரதி டான்ட்ரிட்ஜின்  தாக்கம் இருக்கக்கூடும் என்ற வியூகங்களும் நிலவி வருகிறது.

ஒரு மறக்கப்பட்ட ஹாலிவுட் புரட்சியாளரின் பெயரை தனது படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ்  ஏன் தேர்வு செய்தார்? என்ற கேள்விக்கான பதில் திரைப்படம் வெளியாகும் போது தெரியவரும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *