இது குறித்துப் பேசிய இசையமைப்பாளர் தேவன் ஏகாம்பரம், “கர்நாடக இசைப் பின்னணி இல்லாத என்னைப் போன்றவர்களும் விரும்பிக் கேட்கும் வகையில், கர்நாடக இசையை எளிமையாகவும், நவீனமாகவும் மாற்ற விரும்பினேன். பாரதியார் கண்ணனைப் பற்றி மட்டும் எழுதவில்லை. அவருடைய தமிழ் மொழியின் அழகிற்காகவே அவர் அறியப்பட்டவர். சர்வதேச மேடையில் ஒரு தமிழ்ப் பாடல் ஒலிக்க வேண்டும் என்றால், அது இந்தப் பாடலாக இருப்பதில் எனக்குப் பெருமை. இந்தப் பாடலுக்கு சுஷா மிகவும் நவீனமான உணர்வைக் கொடுத்துள்ளார். பாடலின் இறுதியில் ‘கண்ணா’ என்ற வார்த்தையைப் பல விதமான பாவனைகளுடன் அவர் மீண்டும் மீண்டும் பாடியிருப்பார். இன்றளவும் அந்தப் பகுதியைக் கேட்கும்போதெல்லாம் எனக்குக் கண்ணீர் வந்துவிடும்.
இந்தப் பாடலுக்குப் ‘பென்டடோனிக்ஸ்’ (Pentatonix) இசைக்குழுவின் ஸ்காட் ஹோயிங் மற்றும் இந்திய-அமெரிக்க இசைக்கலைஞர் சந்திரிகா டாண்டன் ஆகியோரிடமிருந்து பாராட்டுச் செய்திகள் வந்தன. இசை மொழி, கலாசார எல்லைகளைக் கடந்து சென்றிருப்பது மகிழ்ச்சி . கிராமி விருதுக்கு கடந்த காலங்களில் வெவ்வேறு பிரிவுகளில் 3 முதல் 4 பாடல்களை அனுப்புவேன். அப்போது கிராமி வென்ற ஒருவர், ‘எல்லாவற்றிலும் கைவைக்காதீர்கள், ஒரே ஒரு பாடலுக்கு அனைவரையும் வாக்களிக்க வையுங்கள்’ என்று அறிவுரை கூறினார். அதன்படியே இந்த ஒரு பாடலை மட்டும் அனுப்பினோம். 526 பாடல்களில் எங்கள் பாடல் முதல் ஐந்து இடங்களுக்குள் வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை” என்றார்.