திருநெல்வேலியில் இயங்கி வரும் “தூய யோவான் நிறுவனம்’ மக்களுக்குத் தேவையான சமூக சேவைகளைச் சமூகப்பொறுப்போடு வழங்கி வருகிறது.
இதனை மனநேயத்தன்மையோடு முன்னெடுத்து வருபவர்கள் கல்லூரி படிக்கக் கூடிய மாணவர் படையினர். இதுகுறித்து அதன் நிறுவனரான முதுகலை வணிகவியல் துறை மாணவர் பா. வினோத் என்பவரிடம் உரையாடத் தொடங்கினோம்,

“தூய யோவான் நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு முன்னால் என்னால் தொடங்கப்பட்டது. ஒருமுறை ஒருவருக்கு உதவி செய்தபோது மனதார ஏற்பட்ட திருப்தியே இந்த நிறுவனத்தைத் தொடங்குவதற்கான முதற்காரணம்.
கல்லூரி மாணவர்களாக இணைந்து சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. நமது குழுவில் மொத்தம் 24 உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடனும், நட்புறவுடனும் சமூக சேவைகளைச் செய்து வருகின்றோம்.
மேலும், சில செயல்பாடுகளைச் சிறப்பாகவும், திறம்படவும் நடத்துவதற்காக மகளிர் அணியில் 12 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மகளிர்க்குத் தேவையான தனிப்பட்ட உதவிகளைச் செய்வதற்கே மகளிர் அணியைத் தனியே உருவாக்கியுள்ளோம்.
நமது குழு, ஒரு குடும்பமாக இணைந்து சமூக சேவையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

தூய யோவான் நிறுவனம் – மனிதநேய சேவையின் புதிய அடையாளம்
மனிதநேயமும், சமூகப் பொறுப்பும் இணைந்த எண்ணத்தோடு உருவாக்கப்பட்ட அமைப்பாக “தூய யோவான் நிறுவனம்” இன்று பல்வேறு சமூக சேவைகளின் மூலம் மக்களின் மனதில் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது.
தற்போது இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து சமூக சேவைகளைச் செய்து வரும் எங்கள் நிறுவனம், ஏராளமான மக்களின் வாழ்வில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
எங்கள் முக்கிய சேவைகள்:
– ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆதரவற்றோர், முதியோர் மற்றும் சாலையோரங்களில் வசிப்போருக்கு உணவு வழங்குதல்,
– மிகவும் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல்,

– பள்ளிகளில் இலவச GST வகுப்புகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்,
– தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுடன் கலந்துரையாடி ஆதரவு அளித்தல்.