200 யூனிட் வரை மின்சார கட்டணம் இலவசம் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தப்போதும் மின் கட்டணம் அதிகமாக வந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மின் கட்டண அதிகரிப்புக்கு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “நடப்பு மாதம் தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளுக்கான மின்சார கட்டணம் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

தவெக அரசு 200 அலகுகள் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவித்த நிலையில், அதற்கு நேர் எதிராகப் பெரும்பாலான வீடுகளுக்கு வழக்கத்தைவிடப் பல மடங்கு மின்கட்டணம் அதிகரித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் தாமதமாக மின் அளவீடு எடுக்கப்பட்டதும், பழுதான மின் அளவீட்டுக் கருவிகள் குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுமே மின்கட்டண உயர்வுக்குக் காரணம் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
200 அலகுகள் இலவச மின்சாரத்தின் பலன் மக்களுக்குக் கிடைக்கப்பெறாமல் இருக்க வேண்டுமென்றே திட்டமிட்டுத் தாமதமாக மின் அளவீடு செய்யப்பட்டதோ என்ற சந்தேகமும் எழுகின்றது. தாமதிக்கப்பட்ட மின் அளவீட்டினால், மின்பயன்பாடு 500 அலகிற்கு மேல் அதிகமானதால், 200 அலகுகள் இலவச மின்சாரத்தின் பலன் கிடைக்காததோடு, ஓர் அலகிற்கான மின் கட்டண விகிதமும் அதிகரித்துள்ளது.