தமிழ்நாடு அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வேளாண் துறை அமைச்சர் வினோத் அதன் வரைவு ஆவணத்தை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு எடுத்துச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.
அது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. தமிழ்நாடு வரலாற்றுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில், பட்ஜெட் ஆவணத்தைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபட்ட முதல் நிகழ்வு இது என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்த நடவடிக்கையை அமைச்சரின் தனிப்பட்ட ஆன்மீக நம்பிக்கையாகச் சிலர் ஆதரித்தாலும், அரசின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை மத வழிபாட்டுடன் இணைப்பது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சியினரும் அரசியல் பார்வையாளர்களும் முன்வைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக சிபிஎம் எம்.பி.சு.வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், “பட்ஜெட் ஆவணங்கள் என்பது இறைவனுக்கான காணிக்கையோ, அல்லது ஆன்மீகப் பொருட்களோ அல்ல; அவை மக்களின் வரிப்பணம் எப்படிச் செலவிடப்படும் என்பதைக் கூறும் அரசியல் சாசன ஆவணம்.
தனிமனிதர்களின் மத நம்பிக்கைக்கு அரசியல் ஆவணங்களைக் காணிக்கையாக்குவது அரசியல்சட்ட விரோதம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.