தரமான தார் சாலை, தடையில்லாத குடிநீர் மற்றும் மின்சார விநியோக வசதி, நன்கு அமைக்கப்பட்ட கழிவு நீர் அகற்றம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்றவை எந்தவொரு நிலத்தின் அடிப்படை வசதிகள்.
வீடு அல்லது நிலம் வாங்கும்போது, இவை அனைத்தும் சரிவர இருக்கிறதா என்பதை கட்டாயம் செக் செய்துவிட வேண்டும். ஒருவேளை, இந்த வசதிகள் வீடு அல்லது நிலத்தில் இல்லையென்றால், அந்த இடத்திற்கு கண்ணை மூடிக்கொண்டு ‘நோ’ சொல்லிவிடுங்கள்.

‘இங்க தண்ணீர் வசதி, மின்சார வசதி மற்றும் பிற வசதிகள் எப்படி’ என்று நிலத்தின் உரிமையாளர் அல்லது புரோக்கரிடம் கேட்பதற்குப் பதில், நீங்களே சில விஷயங்களை நேரில் சென்று செக் செய்யுங்கள் என்று கூறுகிறார் வழக்கறிஞர் மற்றும் பில்டர் முத்துசாமி.
தண்ணீர் இருப்பைத் தெரிந்துகொள்ள…
“மாநில மற்றும் மத்திய அரசுத்துறைகளின் தரவுகளின் படி, அங்கு நிலத்தடி நீர்மட்டம் எப்படி இருக்கிறது என்பதை பிரசுரிக்கப்பட்ட ஆய்வு அறிக்கை மூலம் சரி பாருங்கள்.
அடுத்ததாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கடந்த கால மழைப்பொழிவு விவரங்கள் பெற்று செக் செய்யுங்கள்.
மிக எளிதான வழி என்றால், நிலத்தின் அருகில் உள்ள ஏரிகள், குளங்கள், ஆறுகள், கால்வாய்கள் போன்ற நீர்நிலைகளை நேரில் சென்று ஆய்வு செய்யவும்.
அங்கே, பயிரிடப்பட்ட தாவரங்களின் தன்மை மற்றும் வளர்ச்சியையும் பாருங்கள். இதை வைத்து, நிலத்தில் நீர் அளவை ஓரளவு கணிக்க முடியும்.
ஆழ்துளைக் கிணற்றின் சராசரி நீர்மட்ட ஆழம், பருவகால மழையின் சராசரி நீர் வரத்து, கோடைகாலத் தண்ணீர் இருப்பு, ஆழ்துளைக் கிணறுகள் பொய்த்துப்போன (வறண்டுபோன) தரவுகள் ஆகியவற்றை செக் செய்து பாருங்கள்.

நிலத்தின் அருகில் இருக்கும் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், விவசாயிகள், அருகில் வசிப்பவர்கள், தொழிற்சாலைகளில் மற்றும் அருகாமையில் உள்ள ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கும் நிறுவனங்களில் இது குறித்த தகவல்களை விசாரியுங்கள்.
தண்ணீர் தட்டுப்பாடு இருக்குமாயின், அங்கு அதிகமாக தண்ணீர் தொட்டி லாரிகள் போக்குவரத்து தென்படுகிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தண்ணீர் வளம் இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்து விட்டுவிடக்கூடாது. தண்ணீரில் உவர்ப்புத் தன்மை, கடினத்தன்மை (Hardness), இரும்புச் சத்தின் அளவைப் பாருங்கள். அதற்கு, தேவைப்பட்டால், அரசு ஆய்வு மையங்களில் சென்று நீரை ஆய்வு செய்து கொள்ள வேண்டும் …
அடுத்ததாக, கடந்த காலங்களில் மழைக்கால வெள்ளப் பாதிப்பு எப்படி இருந்திருக்கிறது என்பதை அக்கம்பக்கம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
நகராட்சி கூட்டுக் குடிநீர்க் குழாய் இணைப்புகள், உள்ளாட்சி அமைப்புகளின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (OHT) உள்ளிட்ட உள்கட்டமைப்புகளைப் பாருங்கள். மழைநீர்ச் சேகரிப்பு/மறுஊட்டம் கட்டாயம் இருக்க வேண்டும். இது தான் நிலத்தடி நீருக்கு அதிகமான ரீசார்ஜ் போன்றது.

நீர் வரத்தின் பரிசோதனை கருவி (water diviners) மூலம் நீரின் அளவு சோதித்தல், செயற்கைக்கோள் நுண்ணறிவு மூலம் ஏரிகள் மற்றும் வறண்ட குளங்களின் நிலப்பரப்பைக் கண்காணித்தல், நில வரைபடம், நீர் வழித்தடங்கள், பசுமைப் பரப்பு போன்றவையும் செக் செய்யுங்கள்.
மின்சார வசதியை…
அருகில் உள்ள மின்வாரிய (EB) கம்பங்கள், விநியோக மின்மாற்றிகள் (Distribution Transformer), மின் நிலையங்கள் (Substations), உயர் அழுத்த/தாழ் அழுத்த மின் பாதைகள் (HT/LT Lines), மின் இணைப்புகள், தெருவிளக்குகள் போன்றவற்றை நேரில் சென்று உறுதி செய்யுங்கள்.
அங்கு உள்ள சம்பந்தப்பட்ட மின் உற்பத்தி மற்றும் விநியோக அலுவலக அதிகாரியை நேரில் சென்று சந்தித்து மின் துறை சார்ந்த சந்தேகங்களை நேரடியாகக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
தற்போதைய மின் பாதைக்கு உள்ள தூரம், விவசாய நிலங்களுக்கான இலவச 3-ஃபேஸ் (3 Phase) மின் இணைப்பு வசதி, அனுமதிக்கப்பட்ட மின் சுமைத் திறன் (Sanctioned load), உள்ளூர் மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்தல், உடனடியாக புதிய மின் இணைப்பு பெறுவதற்கான சாத்தியக்கூறுகள், திட்டமிடப்பட்டுள்ள உள்கட்டமைப்பு மேம்பாடுகள், ஃபீடர் விரிவாக்கம் (Feeder expansion) போன்றவையும் செய்யுங்கள்.