கர்நாடகா: 'கதர்'ஜீ-க்களை மட்டுமல்ல, ஜென்சீ-களையும் கவர்ந்தவர் டி.கே.சிவகுமார்!

Spread the love

“இனி கர்நாடக அரசியலில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது” என்கிறார்கள் அரசியல்வாதிகளும், அரசியல் நோக்கர்களும்.

கர்நாடக மாநிலத்தின் 23 வது முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் பொறுப்பேற்க உள்ளார்.

டி.கே.சிவகுமார்
டி.கே.சிவகுமார்

இந்தியாவிலுள்ள பணக்கார அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவரான டி.கே.சிவகுமார், எதிர்க்கட்சிகளே மிரளும் அளவுக்குச் சக்தி படைத்தவர். பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கமிட்டிக்குள் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் அளவுக்குத் திறமை வாய்ந்தவர்.

அப்படிப்பட்டவர், சொந்த மாநிலத்தில் சித்தராமையாவின் சித்து விளையாட்டுகளைப் படாதபாடுபட்டு முறியடித்து வெற்றிபெற்றுள்ளார்

“டி.கே.சிவகுமார் இனிதான் தன்னுடைய மொத்த வித்தைகளையும் காட்டப் போகிறார், முதல்வர் பதவி மட்டுமல்ல, அகில இந்திய காங்கிரஸில் முதன்மை இடத்தைப் பிடிப்பதே அவரின் எதிர்கால திட்டம்” என்று கூறும் கர்நாடக அரசியல் அவதானிகள், மூத்த ஊடகவியலாளர்களிடம் தொடர்ந்து பேசியபோது, “கனகபுரா தொகுதியிலுள்ள தொட்டலஹள்ளி கிராமத்தில் பிறந்த கெம்பேகவுடா சிவகுமார் என்கிற டி.கே.சிவகுமார், கர்நாடகாவிலும், வெளி மாநிலங்களிலும் சுரங்கத் தொழில், ரியல் எஸ்டேட், கட்டுமான ஒப்பந்த நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் எனப் பல்லாயிரம் கோடி டர்ன் ஓவர் ஆகும் பல தொழில்களைச் செய்துவருகிறார்.

அவரின் வளர்ச்சி குறித்து பல சர்ச்சைகள் உள்ளன. தேர்தலின்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்த சொத்து மதிப்பே ரூ 1,424 கோடியாகும், காஃபி டே குடும்பத்தின் சம்பந்தி.
1985-ல் சதனூர் தொகுதியில் 27 வயதிலேயே தேவகவுடாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் அதற்குப்பின் அவரின் அரசியல் கிராஃப் மேல் நோக்கி செல்லத் தொடங்கியது.

சித்தராமையா-டி.கே.சிவகுமார்

ஒக்காலிகர் சமூக பலத்துடன் கனகபுராத் தொகுதியில் 8 முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர் பங்காரப்பா, எஸ்.எம்.கிருஷ்ணா, எச்.டி.குமாரசாமி, சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றார். கடந்த 2023 தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றிபெற சிவகுமாரின் அதிரடியான செயல்பாடுகள்தான் காரணம். அரட்டல், மிரட்டல், ஆரத்தழுவுதல், கரன்ஸியால் கவனித்தல் என்று அனைத்து வழிகளையும் பயன்படுத்த தெரிந்த கேம் சேஞ்சர் அவர்.

2002-ல் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சி கவிழாமல் இருக்கவும், குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க-வுக்குச் செல்ல விடாமல் பாதுகாத்தும், 2018-ல் கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி அமையவும் இவரிடம்தான் காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஒப்படைத்தது.

அதன் காரணமாகவே நாடு முழுவதுமுள்ள இவருடைய நிறுவனங்களில் மத்திய அரசு ஐ.டி மூலம் ரெய்டு நடத்தியது. 2019-ல் அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் திஹார் சிறையில் 50 நாட்கள் இருந்தார். அதைத் தொடர்ந்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ-யும் வழக்குப் பதிவு செய்தது.

கூடவே, நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியது குறித்து அமலாக்கத்துறையும், டெல்லி காவல்துறையும் விசாரணைக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது. வழக்கிலிருந்து விடுபடவும், தங்கள் ஆதரவில் ஆட்சி அமைக்கவும் பா.ஜ.க தூதுவிட்டும் சிவகுமார் ஒத்துக்கொள்ளவில்லை.

கட்சிக்காக இவ்வளவு பங்களிப்பை செய்து, பல நெருக்கடிகளைச் சந்தித்தவரைத்தான் 2023 தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முதல்வராகக் கொண்டுவர காங்கிரஸ் தலைமை விரும்பியது. ஆனால், மல்லிகார்ஜுன கார்கேயும், சித்தராமையாவும் சில அரசியல் கணக்கினால் விட்டுக் கொடுக்கவில்லை. அதனால், ஆளுக்கு இரண்டரை வருடம் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. 

டி.கே.சிவகுமார்
டி.கே.சிவகுமார்

ஒப்பந்தப்படி கடந்த ஆண்டு டிசம்பரில் சித்தராமையா பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால், விலக மறுத்து கடந்த 5 மாதமாக இழுத்துக் கொண்டிருந்தார். சித்தராமையா மீதும் சமீபகாலமாக ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், கோஷ்டி அரசியல் செய்யும் அவரால் கட்சி வளராது, வருகின்ற தேர்தல்களில் வெற்றி முக்கியம் என முடிவெடுத்த காங்கிரஸ் தலைமை, கட்டாயப்படுத்தி சித்தராமையாவை ராஜினாமா செய்ய வைத்துள்ளது.

சிவகுமார் முதல்வராகிவிட்டால் கட்சியில் தன்னுடைய அரசியல் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று நினைத்த சித்தராமையா, ‘சிவகுமார் அதிரடியானவர், அவர் மீது வழக்குகள் உள்ளன, அவரை முதல்வராக்குவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும், அவருக்குப் பதில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரரை முதல்வராக்கலாம்’ என்றெல்லாம் ராகுலிடம் வாதாடி பார்த்தார். அவருடைய ராஜதந்திரம் எதுவும் பலிக்கவில்லை.

ராஜினாமா செய்த கையோடு டெல்லி சென்ற சித்தராமையா, ராகுல் மற்றும் கார்கேயைச் சந்தித்து ‘ராஜினாமா செய்ததால் என் ஆதரவாளர்கள் வருத்தத்தில் உள்ளனர். அதனால் என் மகன் யதீந்திராவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூருவில் மே 30 ஆம் தேதி நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டி.கே.சிவகுமாரை தலைவராக முன்மொழிந்தார் சித்தராமையா. சித்தராமையா மட்டும் விட்டு கொடுக்காமல் இருந்திருந்தால் சிவகுமார் அதிரடி நடவடிக்கை எடுத்து முதல்வராகி இருப்பார்.

டி.கே.சிவகுமார்
டி.கே.சிவகுமார்

சமீபகாலமாக மேகதாது உள்ளிட்ட மாநில மக்களின் உணர்வு ரீதியான விஷயங்களைப் பேசி வரும் சிவகுமார், கட்சியில் உள்ள மூத்த கதர்-ஜீக்களை மட்டுமல்ல ஜென்சீ-களை கவர் செய்யும் வகையில் சோஷியல் மீடியாவை அதிகம் பயன்படுத்துகிறார்.

அது மட்டுமின்றி, சித்தராமையா அமைச்சரவையில் நீண்டகாலம்  இருந்தவர்களைக் கழட்டிவிட்டு சாதிகளுக்கான பிரதிநிதித்துவ அடிப்படையில் புதியவர்களுக்கு வாய்யப்பளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுடன் டி.கே.சிவகுமார் வந்துள்ளார்” என்றனர்.

கிரைசிஸ் மேனேஜர், டிரபிள் ஷூட்டர், கேம் சேஞ்சர் என்று காங்கிரஸ் தலைமையால் குறிப்பிடப்படும் டி.கே.சிவகுமார், பிராப்ளம் மேக்கராக ஆகாமல் ஆட்சி செய்தால் போதும் என்பதுதான் பொதுவான மக்களின் விருப்பமாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *