தண்ணீரில் உள்ள அமிலத்தன்மை காரணமாக இரும்பு மற்றும் எஃகு மதகுகளில் வேதிவினை மாற்றம் ஏற்பட்டு அரிப்பு குழிவுறுதல் மேலும் அதிகமாகலாம். ஆனால், இது குறித்து பெரும் ஆராய்ச்சிகள் எதுவும் அப்போது நடைபெறவில்லை. சீராக ஓடும் நீரோடை பிளவுபட்டு கிளர்ந்தெழுந்து அத்தகைய மாற்றங்கள் நிகழ்கிறது என்றும் சில சந்தேகம் வலுத்தது.
மேட்டூரில் அசாதாரணமான ஒரு நிகழ்வு நடப்பது அப்போது முழுதாக தெரிந்தது. இது அனைவருக்கும் ஒரு புதிய அனுபவம். குழாய்களை மூடி நீண்ட நாள்களுக்குப் பிறகு திறந்தபோது மறுபுறத்தில் ஆற்றுப்படுகையில் உள்ள பெரும் பாறைகள் ஆரஞ்சு நிறத்தில் தோற்றமளித்தது, கண்டுணரப்பட்டது. சல்புரேட்டட் ஹைட்ரஜன் (Sulphuretted hydrogen) நீரில் இருந்து எழும்பி அவை குழாய்களில் படிந்து அந்த வாசனையை நுகர முடிந்தது.
இந்த குழாய்களில் இருந்து சற்றொப்ப 30 அடி உயரத்தில் அமைந்திருந்த கீழ்மட்ட கால்வாய் மதகுகளிலும் இதே போன்ற நிலை காணப்பட்டது. முழுமையான பரிசோதனைக்காக ஒரு குழாய் முழுவதும் மூடப்பட்டு அந்த குழாய் வழியாக நுழைந்து மதகுகளின் வால்வு அனைத்தையும் ஆய்வு செய்தனர். குழாய்கள் சரியாகவே இருந்தது. அரிப்பு அல்லது குழிவுறுதல் போன்ற எதுவும் காணப்படவில்லை.
ஆனால் வால்வுகளை ஆராய்ந்த போது, வால்வின் பகுதிகளில் ஒரு பகுதியில் மிகவும் மோசமான பள்ளம் காணப்பட்டது. சேதாரம் அதிகம் உணரப்பட்டது. வால்வு தயாரிப்பாளரின் பிரதிநிதி அப்போது உடனிருந்தார். அவரும் இது போன்று இதுவரை உலகில் எங்கும் நடந்ததில்லை. எங்களுக்கு இதுவரை அனுபவம் ஏற்படவில்லை என்று கூறிவிட்டார்.
இந்த விஷயம் ‘ஸ்காட்லாந்தில்’ உள்ள தயாரிப்பாளரிடம் தெரிவிக்கப்பட்டது.
1934- ம் ஆண்டு இறுதியில் ‘சூப்பரின்டெண்டன்ட் பொறியாளர் திரு. சி. ஜி. பார்பர்’ சொந்த விடுப்பில் இங்கிலாந்து சென்றிருந்தார். அப்போது அந்த நிறுவனத்திற்கு சென்று வடிவமைப்பாளர்களிடம் இந்த விஷயம் குறித்து விவாதிக்கும் வாய்ப்பை பெற்றார். இது குறித்து அரிப்பு மற்றும் குழிவுறுதல் ஆகியவற்றின் காரணங்களை கண்டறிய உலோகங்களின் உண்மையான ஆய்வக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதையும் அங்கே கண்டார்.
உலகின் வேறு இடங்களில் வால்வுகளில் ஏற்பட்டு இருந்த அளவுகளை விட மேட்டூரில் குறைவான அரிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதையும் உறுதிப்படுத்தினார். அதே சமயம், முந்தைய சில வருடங்களாக தண்ணீரில் அதிக அளவு அமிலங்கள் இருந்தது வழக்கத்துக்கு மாறான ஒன்று என்பதையும் அல்லது வால்வுகளின் வடிவமைப்பில் இத்தகைய இயக்கத்திற்கு பொருத்தம் இல்லாததாகவும் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
மதகுகளில் குழி ஏற்படுதல் வேறு ஒரு காரணத்தாலும் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. அது வெப்ப நிலை ஆகும். மேட்டூர் நீர்த்தேக்கத்தில் உள்ள நீரின் வெப்பநிலை சாதாரணமாகவே 80° ஃபாரன்ஹீட்டுக்கு சற்று அதிகமாகவே இருந்தது. மற்ற திட்டங்களில் குறிப்பாக ஐரோப்பா அல்லது இந்தியாவின் மலைப்பகுதிகளில் மிகக் குறைந்த சராசரி வெப்பநிலை நிலவுகிறது. மேட்டூரைப் போல அங்கு இல்லை.
இரும்பு அரிப்புகளுக்கு காரணங்கள் எதுவாக இருந்தாலும் பின்வரும் காலங்களில் மதகுகளின் வடிவங்களை திட்டமிடும் போது குறிப்பாக எந்த பாகங்களும் சீர்குலையா வண்ணம், செலவை பொருட்படுத்தாமல் அரிப்புக்கு எதிரான குணங்களைக் கொண்ட உலோகங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இது போன்ற அரிப்பு மற்றும் குழி ஏற்படுவது போன்ற காரணங்கள் குறித்து பல சுவாரசியமான தொழில்நுட்ப ஆவணங்கள் இக்காலத்தில் எழுதப்பட்டுள்ளன. சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அணையில் வால்வுகளில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது என்பது அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பதிவாகி இருப்பதால், இது குறித்து நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்திருக்கும் வாய்ப்புண்டு! தொடர்ந்த ஆய்வுகள் மற்றும் பராமரிப்பு செயல்பாட்டின் மூலம் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இத்துனை வருடங்கள் பொறியாளர்கள் காப்பாற்றி வந்துள்ளனர். எனினும், இந்தக் குறிப்புகள் இந்த துறைகளில் உள்ளவர்களுக்கு எதிர்காலத்தில் பயன்படும் என்ற நோக்கில் இங்கே குறிப்பிடப்படுகிறது.