விக்ரம் வேதா : `இருவரும் நமக்கு உணர்த்திச் செல்வது என்ன?’ | புதிர்களின் பின்னல்! | `சினி’ஸ்கோப் 35 | a-series-on-tamil-cinema-Vikram-Vedha-episode-35

Spread the love

இந்தியாவின் புகழ்பெற்ற பழங்கதைகளுள் ஒன்றான ’விக்ரமாதித்யனும் வேதாளமும்’ எனும் கதையின் வடிவில் இந்த ’விக்ரம் வேதா’வின் திரைக்கதை புனையப்பட்டிருந்தது. விக்ரமாதித்யன் கதைகள்; வேதாளத்தைப் பிடித்துவரும் விக்ரமாதித்யனிடம், வேதாளம் புதிர்த்தன்மை கொண்ட ஒரு கதையைச் சொல்லி, அதன் முடிவை அவனிடமே கேட்பதாக அமைக்கப்பட்டிருக்கும். அப்படியே, வெவ்வேறு சூழல்களில் விக்ரமைச் சந்திக்கும் வேதா, விக்ரமிடம் மூன்று கதைகளைச் சொல்கிறான். அந்தக் கதைகள் மூலமாகவே ஏற்கனவே போடப்பட்ட முடிச்சுகள் கட்டவிழ்ந்து, புதிய கேள்விகள் உருவாகின்றன. இந்த திரைக்கதை அமைப்பு அசாதாரணமான, புதுமையான ஓர் உணர்வைப் பார்வையாளர்களுக்குக் கொடுத்தது.

விக்ரமாக மாதவனும், வேதாவாக விஜய் சேதுபதியும் நடித்திருந்தார்கள். 2000-ல் அலைபாயுதே எனும் கிளாசிக் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் வந்த மாதவன், அடுத்த பத்து வருடங்கள் வெற்றிகரமான ஹீரோவாக இங்கே வலம் வந்தார். அதன் பிறகு இரண்டாவது ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் அவர் நடிக்கத் தொடங்கிய போது, இந்தப் படம் அவரது திரைப்பயணத்தில் குறிப்பிடத்தகுந்த படமாக அமைந்தது. தான் செய்வது தவறே இல்லை எனும் தீர்க்கமான முடிவுடன் இயங்கிக்கொண்டிருக்கும் விக்ரமை, ஒரு கதையின் மூலமாக வேதா மடக்கும் காட்சியில், நாம் சரியான திசையில்தான் போகிறோமா என்று விக்ரம் சந்தேகத்துக்குள்ளாகும் காட்சிகளில் மாதவன் மிளிர்ந்தார்.

இப்போது ஹீரோ, வில்லன், கேமியோ, டபுள் ஹீரோக்களில் ஒருவர் என்று இமேஜைப் பற்றிய கவலைகளின்றி சினிமா, டிவி, ஓடிடி பல தளங்களிலும் அடித்து ஆடிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியை மிக வித்தியாசமான வேதா பாத்திரத்தில் காட்டிய இந்தப்படம் அவரது கேரியரில் முக்கியமான படமாகவும் இருக்கிறது. விக்ரமிடம் பணிவையும், மிரட்டலையும் ஒரு சேர வெளிப்படுத்துவது போன்ற அவரது உச்சரிப்பும், நடிப்பும் செம்மையாக அமைந்திருந்தது. விக்ரமின் மனைவியாக ஷ்ரத்தாவும், வேதாவின் தம்பியாக கதிரும் நடித்திருந்தார்கள். வரலட்சுமி சரத்குமார், ஹரீஷ் பேரடி, அச்யுத் குமார் போன்ற பலரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *