தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்துமுடிந்திருக்கிறது. இந்த தேர்தலில் 108 இடங்களில் தவெக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. ஏற்கெனவே திருச்சி, பெரம்பூர் என இரு தொகுதிகளில் விஜய் வெற்றிப் பெற்றிருக்கிறார். இதில் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு சபாநாயகர் என இரண்டு தொகுதிகள் குறைந்து 106 தொகுதிகள் மட்டுமே கைவசம் இருக்கிறது. எனவே, ஆட்சி அமைக்கத் 12 தொகுதிகள் தேவைப்படுகின்றன. தேமுதிக தலைவர் பிரேமலதா மதச்சார்பற்ற கூட்டணியில் நீடிப்பதாக அறிவித்திருக்கிறார். இதற்கிடையே, தவெக வேட்பாளர்களாக களம் கண்டு வென்றவர்கள் பனையூரில் இருக்கும் விஜய் இல்லத்தில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதே நேரம், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் சிபிஐ வீரபாண்டியன், விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ எம் சண்முகம் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது சிபிஐ வீரபாண்டியன் பேசும்போது, “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளைப் பொறுத்தவரை, பா.ஜ.க போன்ற வகுப்புவாத சக்திகளே ஜனநாயகத்தின் முதல் எதிரி. தேர்தலில் கட்சிகள் வெற்றி பெறலாம் அல்லது தோல்வியடையலாம், ஆனால் ஜனநாயகம் ஒருபோதும் தோற்றுவிடக் கூடாது என்பதே இடதுசாரிகளின் அடிப்படை அரசியல் நிலைப்பாடு.