ஒ ரு ஹீரோவின் ஆட்சி பற்றி ஒரு காமெடியனிடம் நறுக்கென நாலு கேள்வி கேட்கலாம் என்று தோன்ற, அ.தி.மு.க-வின் தீவிர ஆதரவாளராகவும், நட்சத்திரப் பேச்சாளராகவும் அறியப்படும் நகைச் சுவை நடிகர் சிங்கமுத்துவிடம் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்யின் 60 நாள் ஆட்சி பற்றிக் கேட்டோம். அவர் தனது பாணியில் நச்செனத் தந்த பதில்கள்…
நடிகர் விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் ஆகிறது. இந்த இரண்டு மாத கால ஆட்சியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
‘இரண்டு மாதக் காலத்திலேயே ஒரு பெரிய முடிவுக்கு வந்துவிட முடியாது. ஆனால், அவர் ஆட்சியை நல்லபடியாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார். ஏற்கெனவே இருந்த திராவிடக் கட்சிகளை விட ஒரு படியாவது மேலாகச் சென்று நல்லது செய்ய வேண்டும் என்று விஜய் நினைக்கிறார். அதற்காகத்தான் தினமும் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்துவது, புதிய சட்டங்களைப் போடுவது எனச் செயல்படுகிறார்.
குறிப்பாக, ‘சிங்கப் பெண் திட்டம் மற்றும் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தைத் தொடர்வது போன்றவை இந்த 60 நாட்களில் அவர் எடுத்துள்ள நல்ல முயற்சிகள். இருப்பினும், அம்மா உணவகம் அல்லது மகளிர் உரிமைத் தொகை’ போன்ற ஒரு புரட்சிகரமான திட்டம் இன்னும் அவரிடமிருந்து வரவில்லை, இனிமேல் வரலாம்.”
தேர்தலில் விஜய்யின் இந்த மிகப்பெரிய வெற்றி எதைக் காட்டு கிறது?
“இது ஒரு சினிமா சக்தி என்றுதான் சொல்வேன். மற்றவர்கள் நின்றிருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்காது; விஜய்யாக இருந்ததால்தான் இது சாத்தியமானது. ஒருமுறை விஜய்க்கு ஓட்டுப் போடுவோம். இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம் என்கிற எண்ணத்தில் மக்கள் ஓட்டுப் போட்டுள்ளார்கள். புதுசாக ஒரு ஓட்டல் திறந்தால் எப்படி மக்கள் கூட்டம் அங்கே அலைமோதுமோ, அப்படி மக்கள் விஜய்யின் பக்கம் சென்றுவிட்டார்கள். விஜய்யின் புதுமை மற்றும் டிரெண்ட் மக்களுக்குப் பிடித்துப் போனதுதான் இதற்குக் காரணம்.”
அ.தி.மு.க-விலிருந்து விஜய பாஸ்கர் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் தொடர்ந்து விலகி விஜய் கட்சிக்குச் செல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
“இது வருத்தமான விஷயம். எடப்பாடி பழனி சாமி அவர்கள் ஒரு சாதாரண விவசாயி மகனாக இருந்து, நாலரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சியைத் தந்தவர்; கடின உழைப்பாளி. அ.தி.மு.க-வில் மந்திரியாக இருந்து எல்லா சுகங்களையும் அனுபவித்தவர்கள், இப்போது பதவி இல்லை என்றவுடன் விலகிப் போகிறார்கள். பதவி இல்லாதபோது அந்தத் தியாகத்தைப் பண்ணிக் கட்சியை வளர்க்காமல், பதவிக்காகவும் சம்பாத்தியத்திற்காகவும் கட்சி மாறுவது சரியல்ல.”
அ.தி.மு.க-விலிருந்து வருபவர்களை விஜய் எப்படிக் கையாள்வார் என்று நினைக்கிறீர்கள்?
விஜய் ஒன்றும் ஏமாளி கிடையாது. அவர் பேசாமல் இருக்கிறாரே என்று நினைக்காதீர்கள், எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறார். பதவியில் இல்லாதபோது அ.தி.மு.கவிலேயே விசுவாசமாக இல்லாதவர்கள், நாளை எனக்கு ஒரு தொய்வு ஏற்படும்போது, இங்கேயே இருப்பார்கள் என்று என்ன நிச்சயம்?” என்று விஜய் சுண்டிப்பாக யோசிப்பார். இப்போதைக்கு மெஜாரிட்டி தேவைப்படுவதால் அவர் அமைதியாக இருக்கலாம். ஆனால் அவருக்குப் பின்னால் ஒரு திட்டம் இருக்கும்.”


