இதற்கிடையில் தான் திமுகவின் முன்னாள் எம்.பியான செந்தில் குமார் ‘All is fair in எங்க அரசியல்’ என குதர்க்கமாக ட்வீட்டும் செய்திருக்கிறார்.
திரைமறைவு நகர்வுகளால் தீயாய் தகதகக்கிறது தமிழக அரசியல்.
இதில் மேலும் சில விஷயங்களையும் கவனிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தை கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் ஒரே அணியில் இணைந்து செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. நாம் பேசிய வரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த நகர்வுகளுக்கு ஆதரவு அளிக்கும் வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
ஒருவேளை அப்படி ஆதரவு அளிக்காமல் போனால் மெஜாரிட்டிக்கு தேவையான எண்களை அதிமுக திமுக இணைந்து பெறுவதிலும் சிக்கல் நீடிக்கும்.
இன்னொரு புறம் திமுக அதிமுக இடையே நடக்கும் இந்த திரை மறைவு பேச்சுக்கள் ஸ்டாலினுக்கு தெரியாது என்றும் அந்த விஐபி கொண்டு வந்த தகவலின் அடிப்படையில் இப்படி ஒரு விஷயத்தை சாத்தியப்படுத்தினால் என்ன என்று தலைமைக்கு நெருக்கமான உறவுகள் தான் இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும், ஒருவேளை ஸ்டாலினுக்கு இந்த நகர்வுகள் தெரியவரும் பட்சத்தில் அவர் இதனை உடனே நிறுத்துவார் என்ற பேச்சும் திமுக தரப்பில் இருக்கிறது.
அரசியல் விமர்சகர்கள் பலரும் இப்படியான நடவடிக்கைகள் நடப்பதற்கு சாத்தியங்கள் இல்லை. மீறி நடக்கும் பட்சத்தில் அது ஜனநாயகத்திற்கும் மக்களின் தேர்வுக்கும் எதிரான ஒரு நகர்வாக தான் இருக்கும் என்ற கருத்தையும் பதிவு செய்கிறார்கள்.
இது எல்லாவற்றையும் கடந்துஎன்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .