மதுரை மாநாட்டில் அண்ணா, எம்.ஜி.ஆர் படங்களை பிரதானமாக வைத்துக் கொண்டார். ‘எம்.ஜி.ஆர் காலத்துல எப்படி மாஸா இருந்த கட்சி அது…’ என ரத்தத்தின் ரத்தங்களின் மனதை கவர நினைத்தார். செங்கோட்டையனை ஜெயலலிதா படத்தோடு தவெகவில் இணைய அனுமதித்தார். செங்கோட்டையனே முன்வந்து ஜெ.வின் படத்தை அகற்றிய போதும் விஜய்யே முன்வந்து ஜெ.வின் படத்தை வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறார்.
இதெல்லாம் ஏற்கனவே துவண்டு போய் நிற்கும் அதிமுக ஆதரவு வாக்காளர்களை விஜய்யை நோக்கி திரும்பி பார்க்க வைத்தது. தவெகவுக்குள் அதிமுகவினருக்கும் இடம் உண்டு. நாமெல்லாம் சேர்ந்து திமுக எனும் தீயசக்தியை வீழ்த்துவோம் என்பதுதான் ரரக்களுக்கு விஜய் கொடுத்த மெசேஜ்.
விஜய்யின் வீச்சை எடப்பாடி கணிக்க தவறினார். சொல்லப்போனால், விஜய் விரித்த வலையில் எடப்பாடி விழுந்தார். எடப்பாடியும் சேர்ந்து கொண்டு விஜய் வந்தால்தான் அதிமுக வெல்ல முடியும் எனும் கருத்தாக்கத்துக்கு வலு சேர்த்தார். இதெல்லாமே விஜய்க்கு சாதகமாகவே அமைந்தது. எதிர்பார்த்ததே போலவே தேர்தலில் விஜய்யின் எழுச்சி அதிமுகவுக்கு பெருத்த சேதாரத்தை கொடுத்தது.
தவெகவில் அதிமுகவினருக்கும் இடமுண்டு என்பதை முன்னுதாரணமாக காட்டிய செங்கோட்டையனை பின்பற்றி, அதிமுகவின் பெரும் தலைகளே தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கின்றனர். விஜய் இப்போதும் தெளிவாக காய் நகர்த்துகிறார். அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடியை சந்திக்காமல், கலகம் மூட்டியிருக்கும் சி.வி.சண்முகத்தின் அணியை சந்திருக்கிறார்.
சட்டமன்றத்தில் அழுத பண்ருட்டி எம்.எல்.ஏவிடம், ‘நான் இருக்கேன் உங்களுக்கு. கவலைப்படாதீங்க’ என்கிறார். ஆக, விஜய் அதிமுக பிளவுபடுவதையும் பலவீனமாவதையும் அதன் வழி அதிமுகவினர் தன் பின்னால் திரள்வதையும் விரும்புகிறார். அது நடக்கவும் செய்கிறது.
விஜய்யின் இந்த காய் நகர்த்தல்களையும் அவரின் வீச்சையும் எடப்பாடி முன்பே கணித்திருந்தால், விஜய் எதிர் அரசியலையும் எடப்பாடியால் செய்திருக்க முடியும். ‘ஒரே எம்.ஜி.ஆர், ஒரே ஜெயலலிதா, ஒரே அதிமுக’ என விஜய்யின் கருத்தாக்கத்தை உடைத்திருக்க முடியும். ஆனால், எல்லாரையும் போலவே விஜய்யின் வீச்சை எடப்பாடியும் கணிக்க தவறினார். அதற்கான பலனை அனுபவிக்கிறார். விஜய்யை கோட் சூட் போட்ட எம்.ஜி.ஆர் என ரத்தத்தின் ரத்தங்கள் முழுமையாக நம்புவதற்குள் அதிமுக சுதாரிக்க வேண்டும் என்பதே அக்கட்சி தொண்டர்களின் குரலாக உள்ளது!.