சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பது தெலுங்கு கங்கை திட்டம். இந்தத் திட்டத்தின்படி, ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. கிருஷ்ணா நதி நீரை ஆந்திர அரசு தமிழ்நாட்டிற்கு ழங்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி வரை தமிழ்நாட்டிற்குக் கிடைத்த நீரின் அளவு வெறும் 2.251 டி.எம்.சி. மட்டுமே எனக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவு குறைந்துள்ள நிலையில், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டவும் அந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழ்நாட்டின் நீர்வரத்தை மேலும் பாதிக்கக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.
இந்தச் சூழலில், நதிநீர் விவகாரங்கள் தொடர்பாக ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், நதிநீர் இணைப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளவும் முதலமைச்சர் விஜய் விஜயவாடா செல்லத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அங்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், விஜய்யின் இந்தப் பயணம் மற்றும் சந்திப்புகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதற்கிடையே, விஜயவாடாவில் நடைபெறவுள்ள ‘Vijayawada Utsav 2.0’ நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. நதிநீர் விவகாரம் தொடர்பான பயணமா, விழாவில் பங்கேற்பதற்கான பயணமா அல்லது இரண்டும் இணைந்த நிகழ்ச்சியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முன்னதாக, காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடகா செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், காவிரியில் தமிழ்நாட்டிற்ஜ்ய் நீர் திறப்பதற்கு எதிராகக் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்திய சூழலில், அப்போதைக்கு கர்நாடகா வருவதைத் தவிர்க்குமாறு துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, முதலமைச்சர் விஜய்யின் கர்நாடகப் பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஆந்திராவை நோக்கி விஜய் பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது. சென்னையின் குடிநீர் தேவையை உறுதி செய்வதிலும், தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகள் தொடர்பாகவும் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

