வார்டன்னா அடிப்போம்ங்கிற மாதிரி ‘ரவி’ங்கிற பேரைக் கேட்டாலே போலீஸ் முறைக்கிற காலம் ஒண்ணு தமிழ்நாட்ல இருந்துச்சு. காரணம்? முட்டை ரவி, வெள்ளை ரவி, லண்டன் ரவி, குள்ள ரவின்னு அத்தனை மாவட்டங்களிலும் குறைஞ்சது ஒரு கொலைகார ரவியாவது இருந்ததுதான். இவ்வளவு ஏன் ‘சாந்தி’ ரவின்னு தன்னோட காதலி பேரை அடைமொழியாக்கிட்டு அட்ராசிட்டி பண்ணுன தெற்கத்தி தாதா ஒருவர் கூட உண்டு!
அந்தவகையில் ஈரோடு மாவட்டத்தின் ஈரக்குலையை நடுங்க வைத்தவர்தான் ஸ்டீல் ரவி. பெயர் செம்ம ஸ்டிராங்கா இருக்குற மாதிரி அண்ணன் பண்ணுன சம்பவங்களும் செம்ம ராவா இருந்துச்சு. அதிகமில்லை சுமார் 40 வழக்குகள்தான். இதில் பெரும்பாலானவை கொலை வழக்குகள். கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் தாதாயிஸம் அப்போல்லாம் ரொம்பக் குறைவு. விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்கள்தான் டேஞ்சரஸ் ரவுடிகள் பட்டியலில் இருந்தாங்க. அந்த மோசமானவங்களில் முக்கியமானவர்தான் இந்த ஸ்டீல் ரவி.
அப்படி என்ன அவர் பண்ணிட்டாரு? என்று ரவியின் க்ரைம் கேஸ்களை டீல் செய்த ரிட்டயர்டு இன்ஸ்பெக்டர் ஒருவரை சத்தியமங்கலம் அருகே சந்தித்தோம். “பழைய ஈரோடு டவுன் கருங்கல்பாளையம், அய்யனாரப்பன் கோயில் வீதியைச் சேர்ந்தவன்தான் இந்த ஸ்டீல் ரவி. உண்மையான பெயர் ரவிச்சந்திரன். அவங்க குடும்பம் பார்த்துட்டிருந்த இரும்புத் தொழிலை இவனும் கொஞ்சம் கவனிச்சுட்டிருந்தான். சந்தர்ப்பவசத்தால் ஒரு அடிதடியில இறங்கி கேஸ் வாங்கினவன், அப்படியே கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, கொலைன்னு ஆரம்பிச்சு வெகு சீக்கிரத்துலேயே ‘நொட்டோரியஸ் கிரிமினல்’ ஆகிட்டான். பாக்குறது இரும்பு வியாபாரம்ங்கிறதால ‘ஸ்டீல் ரவிங்கிற பேரு செட்டாகிடுச்சு.
ஈரோடுல அந்த நேரத்துல தம்பான்னு ஒரு தாதா இருந்தான். இன்னைக்கும் இந்த மாவட்டத்துல சண்டித்தனம் பண்ணிட்டிருக்கிற சிலர் அவனோட விழுதுகள்தான். தம்பாவைத் தாண்டி எவனும் ஈரோடுலயும், சுத்துவட்டார மாவட்டங்கள்லேயும் அட்ராசிட்டி பண்ண முடியாது. அவன் வளர்த்துவிட்ட கூலி குரூப்ஸ்ல ஸ்டீல் ரவியும் இணைஞ்சு, விறுவிறுவென வளர்ந்தான்.
தம்பாவுக்கு தன்னைத் தாண்டி எவனும் தாதாவா வளர்றது பிடிக்காது. ஆனால், ஸ்டீலோட தொழில் நேர்த்திக்காக பலர் அவன் டீமிடம் நேரடியா அசைன்மென்ட் கொடுக்கத் துவங்கினாங்க. இதை தம்பா தடுக்க, ரெண்டு தரப்புக்கும் மோதல் உருவாச்சு. தவிர அ.தி.மு.க., தி.மு.க. சைடுல சில முக்கிய முகங்களோட பகையையும் தம்பா சேர்த்து வெச்சிருந்தான். ஆக எல்லாருக்குமே விரோதியாகிப் போன அவனை ‘முடிச்சுடலாம்’னு பிளான் பண்ணினப்ப, அதை இறங்கி செஞ்ச டீம்ல ஸ்டீல் ரவியின் கை ரொம்ப பெருசு. சொந்த மண்ணான ஈரோடுல வெச்சு தம்பாவை தகர்க்க முடியாதுன்னு, சென்னையில் வெச்சு சம்பவத்தைப் பண்ணினாங்க. இந்தக் கொலை மூலமா ‘ஸ்டீல் ரவி வலுவான தாதாவா எஸ்டாபிளிஸ் ஆனான்.
தம்பா கொலை வழக்கில் கைதாகி, ஜெயிலுக்குப் போனவனை சில அரசியல் லாபிகள் பெருசா செலவு பண்ணி வெளியில எடுத்திருந்தாங்க. வெளியில வந்ததும், பழைய பகையை மிச்சம் வைக்கக்கூடாதுன்னு சொல்லி தம்பாவோட டீம்ல முக்கியமான ஆளான பூபதியை ஸ்டீல் ரவி டீம் போட்டுத் தள்ளியது. தனக்காக கிரிமினல்தனம் பண்றது மட்டுமில்லாம, ஜெயில்ல இருந்து தன்னை வெளியிலெடுத்த அரசியல் புள்ளிகளுக்காகவும் பல பஞ்சாயத்துகளை ரவி பண்ணினான். இதில் அதிகம் நிலம் சம்பந்தப்பட்டதுதான்.
ஈரோடு மாவட்டத்தின் இரண்டு பெரிய கட்சிகளின் முக்கிய முகங்களும் தாங்கள் ஆசைப்படுற நிலத்தை, கட்டிடத்தை ஸ்டீல் ரவியிடம் சுட்டிக்காட்டுவாங்க. அவங்களுக்காக இவன் கட்டப்பஞ்சாயத்து செய்வான். கேட்டா கொடுத்துடணும் இல்லேன்னா முதல்ல கொலை மிரட்டல், அப்புறம் வெட்டுதான். உயிர் போகாம ரத்த பயத்தை மட்டும் காட்டியே பல சொத்துகளை இந்த டீம் வளைச்சு, தங்களோட தலைவர்களுக்கு தாரைவார்த்துச்சு. இப்படி அரசியல்வாதிகளின் நட்பை கேடயமாக்கி உச்சம் தொட்டான் ஸ்டீல் ரவி.
ஈரோட்டில் துவங்கி கொங்கு மண்டலம் மட்டுமில்லாமல் தென் தமிழகம், டெல்டான்னு தமிழகம் முழுக்க தாதா டீமோடு வலுவா ஐக்கியமானான் ரவி. இவங்க கூட்டு சேரவும் கூடிக் கொண்டாடவும் ஜெயில்கள் வசதியா இருந்துச்சு. ஜெயில்ல இருக்குறப்பதான் பல ஏரியா ரௌடிகளின், தாதாக்களின் நட்பும், அவங்க மூலமா கொலை பொருட்களை வாங்குறதுக்கான லிங்கும் ரவிக்கு கிடைச்சுது. அதே மாதிரி தன் தரப்பு கிரிமினல் டெக்னிக்ஸை அவங்களுக்கு கத்துக் கொடுத்ததோடு, அடியாட்களை பரிமாறும் கேம்ப் ஆகவும் ஜெயிலை மாத்திக்கிட்டானுங்க.
எந்த அரசியல் செல்வாக்கு மூலமா ரவுடியிஸத்தில் பெரிய லெவலுக்கு ரீச் ஆனானோ அதே அரசியல்ல சிலர் மீது அருவா இறக்கவும் ரவி தயங்கல. வலுவான அரசியல் புள்ளிக்காக கீழ் நிலை அரசியல் புள்ளிகளை மிரட்டுறது, கொலை முயற்சி பண்றதுன்னு அவன் கை நீண்டுச்சு. குறிப்பா திமுக கிளை செயலாளர் ராஜவேலுவை பீஸ் பீஸா அவன் கொத்தி எடுத்த சம்பவத்தால் அவன் மீது உருவான பகைதான் ஸ்டீல் ரவி கோட்டையின் அஸ்திவாரத்தை அசைக்க துவங்குச்சு ஈரோடுல நீதிபதி ஒருவரை அவதூறா பேசுனது மூலமா நீதித்துறையின் அதிருப்தியையும் கடுமையா வாங்கிக் கட்டியிருந்தான் ஸ்டீல் ரவி.
ஒரு கொலை வழக்குக்கான தண்டனை தீர்ப்பில் மேல் முறையீடு பண்ணிட்டு ஜாமீனில் வெளியே வந்தவன், டைகர் ராஜாவுக்கு டார்கெட் பண்ணி அவங்க அப்பாவை கொலை பண்ணினான். அடுத்து பார்த்திபன் எனும் நபரின் கொலை முயற்சி வழக்கு மூலம் அவனோட கிரைம் ரேட் ஏறிட்டே போச்சு, இந்நேரத்துல இரட்டை கொலை உள்ளிட்ட பல குற்றங்களில் தன்னோடு கைகோர்த்து நின்ற நண்பன் கார்த்தியை உள் டீம் பிரச்னையால் போட்டுத் தள்ளிட்டான் ஸ்டீல் ரவி. இந்த சம்பவத்தால ஸ்டீலுக்கு எதிரா அவன் டீமை சேர்ந்தோரின் உறவுகளே சாட்சி சொன்னாங்க. இது போலீஸுக்கு பெரிய சப்போர்ட் ஆகிடுச்சு.
குரூர கொலைக்குப் பின் சித்தோடு அருகே பதுங்கி இருந்த ஸ்டீல் ரவியைப் பிடிக்க சில இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ஒரு டீம் இறங்கினாங்க. ஆனால், அவங்க மேலே ரவி ஆயுத தாக்குதல் நடத்தி தப்பிக்கப் பார்த்ததால காலில் சுட்டுப் பிடிச்சாங்க. சிறைக்குள்ளே இருந்தாலுமேகூட ஈரோடு சங்கர், திருச்சி ரவீந்திரன் கொலை சம்பவங்களில் ‘ஸ்கெட்ச் ஸ்டீல் ரவிதான்’ன்னு சொல்லி கட்டம் கட்டுச்சு எங்கள் டிபார்ட்மென்ட் ஆனால் சட்டத்தோட ஓட்டைகள் மூலமா ஜாமீனில் வெளியே வந்தவன் தேனி பாண்டியன் கொலையில் மறுபடியும் சிக்கினான். ஆனாலும் அடங்கல. நாலு தடவை குண்டாஸ் பார்த்தும் அவன் கண்ணுல பயம் வரல ஆயுள் தண்டனைக்கு ஆளாகியும் மனசு மாறல.
அதே நேரத்துல ஸ்டீல் ரவிக்கு எதிரான பகைவர்களின் எண்ணிக்கை அதிகரிச்சுட்டே போச்சு. இதை எங்களோட உளவு போலீஸ் தெளிவா கவனிச்சுட்டு, ‘நாம ஓவரா அவன் விஷயத்துல தலையிட வேணாம். ரவியோட பகையே அவனை கூடிய சீக்கிரம் காலி பண்ணும்னு கைகட்டி கவனிச்சிட்டிருந்தாங்க.
அந்த நாளும் வந்துச்சு. அதாவது சாட்சி இல்லை, முறையான புகார் இல்லைங்கிறது உள்ளிட்ட பல வகைகளில் பல வழக்குகளில் இருந்து லீகலா வெளியே வந்திருந்தான் ரவி. குடும்பமும், சுற்றமும் அவனை திருத்தி அமைதியா ஃபேமிலியோட செட்டிலாகுன்னு அட்வைஸ் பண்ணிட்டே இருந்தாங்க. இதனால் மனசு மாறிய ஸ்டீல் ரவி, பெருசா ஏதாவது ஒரு விஷயத்துல சம்பாதிச்சுட்டு அப்டியே அமைதியா செட்டிலாகலாம்னு நினைச்சான். ஆனால் விதி விடலை.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி கடைகள் ஏலமிடுவது வழக்கம். பல லட்சங்கள் சம்பந்தப்பட்ட பிசினஸ் இது 2013ம் வருஷம் மார்ச் 14ம் தேதி இதற்கான ஏலமானது பிரப் ரோடு அருகே ஒரு திருமண மண்டபத்தில் நடந்துச்சு. டெண்டர் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ஒரு மனுகூட இல்லை. இதனால் பொது ஏலம் நடந்தது. பெரும்பாலான கடைகளுக்கு நிர்ணயித்த விலையைவிட குறைவான தொகைக்கு ஸ்டீல் ரவி டீம் ஏலம் எடுத்தது. ஏலத்துக்கு வந்த மற்றவர்கள் எதுவும் பேச முடியாமல் கம்முன்னு இருந்தாங்க.
ஏலத்தை முடிச்சுட்டு அதிகாரிகளும், பொது நபர்களும் வெளியேறினர். அப்போது ஒன்பது பேர் கொண்ட கும்பலொன்று கையில் பயங்கர ஆயுதங்களுடன் மண்டபத்தினுள் நுழைந்தது. ஏலம் எடுத்த குஷியில் பேசிக்கொண்டிருந்த ஸ்டீல் ரவி மீது ஆயுதங்களை சரசரன்னு பாய்ச்சியது. அங்கே நின்னுட்டிருந்த பலர் பதறி எஸ்கேப் ஆனாங்க, தடுக்க வந்த ஸ்டீலின் கைத்தடிகளுக்கும் மரண வெட்டு விழுந்துச்சு. ரவியை ரத்த வெள்ளமாக்கி சாய்ச்சுட்டுதான் அந்த டீம் வெளியேறுச்சு. ஸ்டீல் ரவியின் குரூர கொலையால் ஈரோடே பதற்றமாச்சு. ஈரோட்டை ஆட்டிப் படைச்ச ஸ்டீல் ரவியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது.
ஸ்டீல் ரவி நேரடியாவும், ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தும் பல சம்பவங்களை நிகழ்த்தியிருந்தாலுமேகூட ஆதாரம் இல்லை என்பதால் எப்படி வெளியே வந்தானோ அதேமாதிரி, அவனோட கொலை வழக்கிலும் ‘குற்றம் நிரூபிக்கப்படாததால் என்று சொல்லி, கைதான அனைவரும் சில வருடங்களில் விடுதலையானதுதான் ஹைலைட் கர்மா இஸ் ஆல்வேஸ் பவர்ஃபுல்” என்றபடி எழுந்தார்!
(ரத்தம் தெறிக்கும்) – எஸ் . ஷக்தி .

