
தமிழகத்தில் உச்ச நடிகராக இருந்து தற்போது திரைப்பயணத்திலிருந்து தன்னை விடுவித்து கொண்டு தற்போது முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள விஜய், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்நிலையில் பல்வேறு அரசுப் பொறுப்புகளுக்கான நியமனங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. குறிப்பாக திரைத்துறையுடன் தொடர்புடைய சிலருக்கு அரசு சார்ந்த பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் விவாத்ததை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விஜயின் ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணனுக்கு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்ற பொறுப்பு வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து ‘பீஸ்ட்’ படத்தின் ஒளிப்பதிவாளர் (கேமராமேன்) மனோஜ் பரமஹம்சாவுக்கு தமிழ்நாடு அரசு, சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் (MGR Film and Television Institute) தலைவர் பதவியை வழங்கிய நிலையில் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் பெயரும் அரசு நியமனத்தில் இடம்பெற்றுள்ளது. ஆண்டுக்கு ரூ 10 லட்சத்துக்கும் அதிகமான வருமானம் கொண்ட திருக்கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிப்பதற்கான தகுதியான விண்ணப்பத்ததாரர்களைத் தேர்வு செய்ய அமைக்கப்பட்ட மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குழுவில் மொத்தம் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். அர்ச்சனா கல்பாத்தி, நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்த AGS நிறுவனத்துடன் தொடர்புடையவர் என்பதால், அவரது நியமனம் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் விஜயைப் புகழ்ந்து பாடிய பாடகர் வேல்முருகனும் இதே குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதையடுத்து, அறங்காவலர் பதவிகளுக்கு பல்வேறு தரப்பினரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அவர்களைத் தேர்வு செய்யும் மாநிலக் குழுவில் திரைத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இடம் வழங்கப்பட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படி சினிமா துறையினரும் அரசியல் களத்தில் குதிப்பது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.